ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தனது நண்பன் சிவசங்கரனை சந்தித்து அவனை கண்டபடி திட்டவேண்டும் என தீர்மானித்து அவனது வீட்டுக்கு நடந்தான் கேசவன்.
வீட்டில் வைத்து திட்டினால் நாகரீகமாக இருக்காது என்று பக்கத்திலிருக்கும் டீக்கடைக்கு அழைத்தான் கேசவன். டேய், உனக்கு கொஞ்சமாவது உன் அப்பாவப்பத்தி நினப்பு இருக்காடா? மாசம் நாப்பதாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற, இங்க நீயும் உன் மனைவி குழந்தைங்களும் சந்தோஷமா இருக்கீங்க, ஊருல கூலி வேல செய்யற உன் தம்பிகூட உன் அப்பா ரொம்ப கஷ்டப்படறாரு, அவரோட செலவுக்குன்னு அதிகமா அனுப்பவேண்டாம் அட்லிஸ்ட் ஒரு ஆயிரம் ரூபாயாவது மாசா மாசம் அனுப்பி வைக்கலாமில்ல,
ஊருல என்னப்பார்த்து நீ பணம் அனுப்பறதில்லையின்னு சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா? ஏண்டா அவருக்கு பணம் அனுப்பி வைக்கல?'' தனது கோபத்தை ஒரே மூச்சாக கொட்டி தீர்த்துக்கொண்டான் கேசவன்.
ஆரம்பத்துல அப்பா பேருக்குத்தான் பணம் அனுப்பிகிட்டு இருந்தேன், அப்பா அந்த பணத்த வெச்சுகிட்டு தினமும் தண்ணி அடிச்சுகிட்டு வீட்டுல கலாட்டா பண்ணுவார், எவ்வளவோ சொல்லியும் திருந்தறமாதிரி தெரியல, அம்மா இருந்திருந்தாலாவது அவங்க பேருக்கு அனுப்பியிருப்பேன், இப்போ அவர் செலவுக்குன்னு தம்பிபேருக்கு பணம் அனுப்பி வைக்கிறேன்,
இந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாததனால நான் பணமே அனுப்பறதில்லையின்னு உன்கிட்ட சொல்லியிருக்கிறாரு, அப்பா ஆரோக்கியமா கொஞ்சநாள் கூட இருந்தா நல்லது இல்லையா?''
அவனது யதார்த்த பதிலையும் தனது தந்தை ஆரோக்யம் மீது அவனுக்கு இருந்த அக்கறையை நினைத்து நண்பனை திட்டினோமே என்று மனதிற்க்குள் வருந்தினான் கேசவன்
No comments:
Post a Comment