சூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி " வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்" என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.
"இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு " என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன்.
"என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்."
நொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன்.
தூரத்தில் "எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
பாக்யா
No comments:
Post a Comment