Total Pageviews

Thursday, December 29, 2011

பெருந்தன்மை





ஓய்வு பெற்ற தனது தந்தை வீட்டில் சும்மா இருந்தால் மனதளவில் சோர்ந்து விடுவார் என நினைத்து அவருக்கென்று பர்னிச்சர் மார்ட் என்ற வியாபாரத்தை தனது சொந்த முதலீட்டில் ஏற்படுத்தி தந்தான் ரமேஷ்.


 முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வியாபாரமும் நடக்காமல் வாடகைப்பணமும் அலுவலகச் செலவும் சேர்ந்து நஷ்டத்தில் நடப்பதாக பகுதி நேர கணக்காளர் சொன்னபோது ரமேஷ் எந்தவித கவலையும் அடையவில்லை.


சும்மா இருந்தா அப்பாவுக்கு பொழுது போகாதுன்னுதான் பிசினஸ் வச்சுக்கொடுத்தேன் போகப் போக சரியாயிடும்!" தனக்கு ஆதரவாகப் பேசிய தனது மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.


ரமேஷ் படிப்பு முடிந்து வேலை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கம்பியூட்டர் சென்டர் ஆரம்பித்து தந்தபோது அவன் சரிவர கவனிக்கவில்லையென்று 'இவன் எதுக்குமே லாயக்கில்லை, தண்டம்' என்று காட்டு கத்தலாய் திட்டியது நினைவுக்கு வர ஒரு கணம் தன்னை த்தானே நொந்துகொண்டார்,


 மகன் அதுபோல் திட்டாமல் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதை நினைத்து.

மாமியார் வீடு

னிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக்.வாரம்தோறும் உன் அம்மா வீட்டுக்குப் போகணுமுன்னு அடம்பிடிக்கிறியே! அப்படி அங்க என்னதான் இருக்கு, அங்க இருக்கிற வசதியைவிட ரெண்டு மடங்கு வசதி இங்க இருக்கு.

 வேற என்ன சுகமிருக்குன்னு அம்மா வீட்டுக்குப் போக ஆசப்படுற! சற்றே மிதமான கோபத்தில் கேட்டான் தீபக்.அய்யோ நான் வசதியா இருக்க ஆசப்பட்டு ஒண்ணும் போகலிங்க. உங்களுக்கே தெரியும். என் தம்பி காதல் திருமணம் பண்ணிக்கிட்டு அவன் மனைவிய எங்கம்மாகிட்ட விட்டுட்டு வெளிநாடு போயிட்டான்.எங்கம்மா எதுக்கெடுத்தாலும் என் அண்ணிகிட்ட எரிஞ்சு விழுந்து சண்டை போடுவாங்க. இதனால் அண்ணிக்கு நிம்மதியே இல்லாம போச்சு!

 நீங்களும் நானும் வாரத்துல ரெண்டு நாள் அம்மா வீட்டுல இருந்தா, வீட்டுல மருமகன் இருக்கிறார்ங்கற எண்ணத்துல எங்கம்மா அண்ணிகிட்ட எதுவும் பேசாம இருப்பாங்க.

அந்த ரெண்டு நாளாவது அண்ணி நிம்மதியா இருப்பாங்கள்ல....''தனது அண்ணி மீது வைத்திருக்கும் பாசத்தை அறிந்து மாமியார் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான் தீபக்.
 

செக்கப் ரிப்போர்ட்

அனிதாவை பெண் பார்த்துவிட்டு " பொண்ணு பிடிச்சிருக்கு!" என்று சொல்லிவிட்டு ஒரு கவர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் சரவணன்.என்ன, லவ்லெட்டரா?" அனிதா புன்னகைத்தபடியே கேட்டாள்.இது லவ்லெட்டர் இல்ல, என்னோட பாடி செக்கப் ரிபோர்ட், நான் ஆண்மை யுள்ளவன்னும், எனக்கு எயிட்ஸ் நோய் இல்லை யிங்கறதுக்கு மான ரிப்போர்ட், உங்களுக்கு என்ன பிடிச்சிருந்தா மேற்கொண்டு கல்யாணநாள் நிச்சயம் பண்ணலாம்!" சரவணன் சொன்னபோது அவனை ஆச்சரியமாக பார்த்தாள்


அனிதா.ரெண்டு நாள் டைம் குடுங்க!" அனிதா சொன்னபோது அவளது தந்தையின் முகத்தில் கோபம் வந்தேறியது. மாப்பிள்ளைதான் ரிப்போர்ட் குடுத்துட்டாரே, அப்பறம் எதுக்கு ரெண்டு நாள் டைம் வேணும்!" சற்று அதட்டலாகவே கேட்டார் அனிதாவின் தந்தை.அப்பா,

 மாப்பிள்ளையே முன்வந்து தன்னோட உடல செக்கப்பண்ணி ரிப்போர்ட் தர்றப்போ, அவர் கூட வாழப் போற நான் குழந்தை பெத்துக்க தகுதி யானவளான்னு செக்கப் பண்ணி பார்த்துட்டு அப்பறம் சொல்றேனே, செக்கப்ங்கறது ஆணுக்கு மட்டும் பண்ணுனா போதாது!" அனிதாவின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தார் அனிதாவின் தந்தை
 
 

சாமர்த்தியம்






எழுத்தாளர் செல்வம் தனது நண்பன் கேசவனை தொலைபேசியில் அழைத்தபோது அவன் குளியலறையில் இருந்தான்.

சமையலறையிலிருந்து ஓடி வந்து ஃபோனை எடுத்தாள் அவனது மனைவி தாரிகா. ஹலோ யார் பேசறீங்க?" நான் எழுத்தாளர் செல்வம் பேசறேன், கேசவன் இருக்காரா?"அவர் குளிச்சுட்டு இருக்காரு,

 ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாரு, உங்களப்பத்தி என் வீட்டுக்கார்ர் அடிக்கடி சொல்வார், நீங்க ரொம்ப நல்லா கதை எழுதுவீங்கன்னு."ரொம்ப நன்றிங்க!"பரவாயில்லைங்க,

 இதோ என் வீட்டுக்கார்ரே வந்துட்டாரு!" ரிசீவரை தனது கணவனிடம் தந்துவிட்டு சமையலறைக்குள் நடந்தாள் தாரிகா.கேசவன் ஃபோன் பேசிவிட்டு தனது மனைவியிடம் கேட்டான்.இந்த நண்பரைப்பற்றி இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவுமே சொல்ல்ல,

அப்பறம் எப்படி அவரைத் தெரிஞ்சது மாதிரி பேசுன?"உங்க நண்பர் உங்கள கேட்டப்போ யாரோ செல்வமாம் உங்க்கூட பேசணுமாம் அப்படியின்னு நான் சொல்லியிருந்தா அத கேக்குற உங்க நண்பர்,

இவ்வளவு பழக்கமிருந்தும் நம்மளப்பற்றி ஒரு வார்த்த கூட வீட்டுல சொல்லி வைக்கலியேன்னு உங்க மேல வருத்தப்படக்கூடாதுன்னுதான் அப்படி பேசினேன்!" மனைவியின் சாமர்த்தியம் கண்டு ஆச்சரியமானான் கேசவன்

சந்தோஷம் ! மகிழ்ச்சி !


ரிலிருக்கும் தனது கொழுந்தனார் வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்து சென்னை திரும்பிய காயத்ரி வந்ததும் வராததுமாக நச்சரிக்க ஆரம்பித்தாள்.

உங்க அண்ணன் வீட்டுல ஒரு ஏசி இல்ல, பேன் இல்ல, ரெண்டு நாள் தங்குறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடிச்சி, இனிமே ஊர்ல எந்த விசேஷம் வந்தாலும் என்னையும் என் குழந்தைகளையும் கூப்பிடாதீங்க!"

தனது வெறுப்பைக் கொட்டிவிட்டு உடை மாற்றச்சென்ற காயத்ரியை வழிமறித்தான் தினேஷ். ஊருல அண்ணன் வீட்டுல தங்குனது உனக்கு வேணுமுன்னா சந்தோஷமில்லாம இருக்கலாம், ஆனா நம்ம குழந்தைங்க ரெண்டு பேரும் அண்ணன் குழந்தைங்களோட எவ்வளவு சந்தோஷமா பழகி பாசத்த பகிர்ந்துகிட்டாங்க தெரியுமா?

ஏசி,பேன் இல்லாதது ஒரு குறையாவே அவங்களுக்கு தெரியல, சந்தோஷங்கறது வசதியப் பார்த்து வந்து சேர்றதில்ல, வசதி இல்ல த இடத்துல கூட நாமதான் சந்தர்ப்பத்த வர வழைச்சு சந்தோஷப்பட்டுகிடணும்!". தினேஷின் வார்த்தைகளை கேட்ட பிறகு காயத்ரிக்கு மீண்டும் வாய் திறக்க மனசு வராமல் ஊரிலிருந்த நாட்களை நினைவு கூர்ந்து தனக்குத்தானே சந்தோஷப்பட்டுக்கொண்டாள்


பெருமை

அலுவலகத்திலிருந்து சைக்கிளில் வீடு திரும்பிய ரவிக்குமார் களைப்புடன் வந்து மூச்சு வாங்கியபடியே இருக்கையில் அமர்ந்தார்.

அவரது முகத்தில் வடிந்திருந்த வியர்வையை துண்டால் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து தந்தாள் அவரது மனைவி காவேரி.

என்னங்க, ஏன் இப்படி கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு ஆபீஸ் போயிட்டு வர்றீங்க, வங்கியில பணமிருக்கு, ஒரு டூ வீலர் வாங்கலாமில்ல, எனக்கும் உங்க பின்னால உட்கார்ந்து வர ஆசையா இருக்குங்க!" தனது ஆசையை சந்தடி சாக்கில் போட்டு உடைத்தாள் காவேரி.

நான் நினைச்சிருந்தா டூ வீலர எப்பவோ வாங்கியிருப்பேன். இப்போ நம்ம மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்,

இந்த சமயத்துல நான் டூ வீலர் வாங்குனா நம்ம மகனுக்கும் வண்டி ஓட்டறதுக்கு ஆசை வரும்,

 லீவு நாள்ல வண்டிய எடுத்துகிட்டு எங்க வேணும்னாலும் சுத்த போயிடுவான்.

சின்ன வயசுல லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டுறது தப்பில்லையா? அதனாலதான் இன்னமும் டூ வீலர் வாங்கல, எப்போ அவன் லைசன்ஸ் வாங்குறானோ அடுத்த நாளே டூ வீலர் வாங்கிடுவேன்,

அதுவரைக்கும் நமக்கு சைக்கிள்தான்!"மகன் லைசன்ஸ் வாங்கும்வரை காத்திருந்து அதுவரை சைக்கிள் ஓட்டும் தனது கணவரை நினைக்க நினைக்க காவேரிக்கு பெருமையாக இருந்தது

 

நல்லெண்ணம் - சமுதாய அக்கறை

பெங்களூருக்கு வந்து சேர்ந்த தனியார் பேருந்திலிருந்து தனது மனைவி குழந்தகளுடன் இறங்கினான் மகேஷ். அவனைச்சுற்றி ஆட்டோ டிரைவர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்0.

 ஜே.சி ரோடு போகணும் எவ்வளவு?"முப்பத்தஞ்சு ரூபா ஆகும் 

சார்!"இருபத்தஞ்சு ரூபா குடுக்கிறேன் வர்றீங்களா?"என்ன சார் நீங்க... பார்க்கிறதுக்கு டீசண்டா இருக்கீங்க, பத்து ருபாய்க்கு பேரம் பேசறீங்களே!"இருபத்தஞ்சு ரூபாய்க்கு வர்றதா இருந்தா வா, இல்லையின்னா வேற ஆட்டோ புடிச்சுக்கறேன்!" தீர்மானமாகச் சொன்ன மகேஷை ஏளனமாகப் பார்த்தான் டிரைவர். என்ன்ங்க....டி கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறீங்க,  

பத்து ரூபாய் தானே அதிகம் கேக்கறான் குடுத்துடவேண்டியதுதானே!" யதார்த்தமாய் கேட்டாள் மகேஷின் மனைவி.  குடுத்துடலாம்... ஆனா, வசதி வாய்ப்பு இல்லாதவங்க்கிட்டயும் ஆட்டோகாரங்க இதையே கேட்பாங்க, அவங்களால இதுமாதிரி குடுக்க முடியுமா?" தனது கணவனின் கேள்வியில் புதைந்திருந்த சமுதாய அக்கறையை நினைத்து ஒரு கணம் ஆச்சரியமானாள் அவனது மனைவி

தாயாரோடு வாழ்வதே பாக்யம்



அந்த முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் நட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த வரலட்சுமி அம்மாவின் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் கதிரேஷன்.அம்மா,

 இங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? இங்க உங்களுக்கு எல்லா சவுகரியங்களும் இருக்கா? தாழ்மையான குரலில் கேட்ட கதிரேசனை உடைந்த பார்வையால் ஏறிட்டாள் வரலட்சுமி.

இங்க சவுகரியத்துக்கு ஒரு குறையும் இல்ல, என் மகனுக்கு வெளி நாட்டுல வேல கிடைச்சதுன்னு என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டான்,

என் கடைசி காலத்துல என் மகன் கூட இருந்து அவனோட அன்பையும் பாசத்தையும் அனுபவிக்குற பாக்யம் கிடைக்கலேங்கற சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது!" தனது அடி மனதில் படிந்து கிடந்த வருத்தத்தை கதிரேசனிடம் பகிர்ந்து கொண்ட போது வரலட்சுமியின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன

.கதிரேசன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். வெளிநாட்டிற்க்குச் சென்று வேலை பார்க்க தனக்கு கிடைத்த வாய்ப்பையும், தனது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்ற முடிவையும் நிராகரித்துவிட்டு தனது தாயாரோடு வாழ்வதே பாக்யம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்கு நடந்தான் கதிரேசன்

மீசை முருகேசன்




முருகேசனுக்கு வயது நாற்பது கடந்தபோது தலையிலிருந்த முடிகளும் தொலைந்து முன்பக்க வழுக்கையில்தான் முதலில் வெளிச்சம் விழத் தொடங்கியது.வழுக்கை முருகேசன் என்ற பட்டப் பெயர் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவருக்கு போடப்பட்டிருந்தது. 
 
வழுக்கை முருகேசன் இன்னும் வரல...! அலுவலக பியூன் சக ஊழியரிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவந்த முருகேசனுக்கு மூடு அவுட் ஆக, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து ஒட்டிக்கெக்ள அன்றிரவு தனது மனக்கவலையை தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் முருகேன்.
 
என்னங்க, உங்களுக்கு தலையுலதான் வழுக்கை. மீசை பலமா இருக்கு. பேசாம அசல் அஜீத் மீசை மாதிரி வளர்த்துக்குங்க. பார்க்குற யாருக்கும் முதல்ல உங்க மீசைதான் தெரியும். அப்புறம் பாருங்க உங்கள எல்லோரும் மீசை முருகேசன்னு கூப்பிடப்போறாங்க.
 
 இல்லாத ஒண்ணுக்காக வருத்தப்படுறதைவிட இருக்குற ஒண்ணவெச்சு சந்தோஷப்படலாமில்லையா?"தனது மனைவியின் தன்னம்பிக்கை வார்த்தைகளில் கட்டுண்டு மீசை வளர்க்க ஆரம்பித்தார் முருகேசன்

பழைய எண்



பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய மொபைல் நம்பரை இன்னமும் மாற்றாமல் உபயோகித்துக்கொண்டிருந்தான் தனசேகரன்.புது ஸ்கீம், குறைந்த கால்சார்ஜ், நிறைய வசதியென்று எத்தனையோ சலுகைகள் பிற கம்பெனிகள் அறிவித்தபிறகும் தனசேகரன் மட்டும் மாறவே இல்லை.அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானாலும் அதெற்க்கெல்லாம் புன்னகை ஒன்றை மட்டுமேபதிலாகத் தந்துவிட்டு நகர்ந்துவிடுவான்
 
``
 
``என்ன சார் நீங்க, இன்னும் அந்த பழைய எண்ணையே வெச்சிருக்கீங்க, அத மாத்துறதுக்கு உங்களுக்கு மனசே வராதா? அப்படியென்ன அந்த எண் மேல ஒரு பிரியம்?'' அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் சந்திரன் கேட்டதுதான் தாமதம் தனசேகரனுக்கு கண்கள் நிறைந்தது.இந்த மொபைல் நம்பர் ஏழாவது படிச்சுகிட்டு இருந்த என் மகன் தான் செலக்ட் பண்ணி வாங்கினான், அவனுக்கு இந்த நம்பர் அத்துப்படி, ராத்திரி தூக்கத்துல கேட்டாலும் சொல்வான், ஒரு நாள் அவன் காணாம போயிட்டான், இன்னமும் திரும்ப வரல, என்னைக்காவது ஒருநாள் இந்த நம்பர்ல போன் பண்ணுவான்ங்கற நம்பிக்கையுலதான் இந்த நம்பர மாத்தாம வெச்சிருக்கேன்!'' கண்கள் கலங்க தனசேகரன் சொல்லி முடித்தபோது அவனோடு சேர்ந்து அழவேண்டும் போலிருந்தது சந்திரனுக்கு.
 
 

சரவண குடுடா ட்ரீட்



திருமண பதிவு அலுவலகத்துக்கு தனது காதலி ரம்யாவை ரகசியமாக அழைத்துவந்த அவளது தோழி மாலாவையும் தனது நண்பர்களையும் நன்றிப் பெருக்கோடு பார்த்தான் சரவணன். 

மாலா, ஜெயன், ஸ்டீபன், முருகன் ராஜா நீங்க நினைச்சதால தான் எங்க காதல் வெற்றி பெற்று இன்னைக்கு கல்யாணத்துல முடிஞ்சிருக்கு, இந்த காதல் வெற்றிய நாம எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம், எந்த ஹோட்டலுக்குப் போலாம்!'' மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் சரவணன். 

அதெல்லாம் வேண்டாம்டா, நீங்க சந்தோஷமா வாழ்ந்து காட்டணும் அது போதும், அவனது நண்பன் ஜெயன் அவனது கையை அழுத்தமாய் குலுக்கியபடியே சொன்னான். 

சரவணன் காதல் கைகூடி இன்னைக்கு பதிவுத்திருமணம் பண்ணீட்டதால உங்க காதல் வெற்றியடைஞ்சதா நினைச்சு டீரீட் குடுக்க ஆசைப்படுற, இதே சந்தோஷத்தோட கடைசி வரைக்கும் வாழ்ந்து காட்டு, அப்பத்தான் உங்க காதல் வெற்றி அடையும், நீங்க குழந்தைகள் பெற்று உங்களுக்கு வயசாகி அறுபதாம் கல்யாணம்னு ஒண்ணு வருமே,  

அப்ப குடுடா ட்ரீட்!'உணர்ச்சிபூர்வமாக சொன்ன மாலாவை அச்சரியமாகப் பார்த்து சரியென்று தலையாட்டினான் சரவணன். '


பொம்மை வியாபாரி


 
அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் கையில் பொம்மைகளோடு குழந்தை பெற்று ஒருநாள் இரண்டுநாள் ஆன தாய்மார்களிடெமெல்லாம்
 
'' யோவ் இடத்த காலி பண்ணுய்யா, புறக்குற கொழந்தைங்க உடனே எழுந்திரிச்சு பொம்மைகளோட விளையாடவா போகுது?'' எரிந்து விழுந்தான் கிருஷ்ணசாமி.
 
''இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும், கொஞ்சம் அசந்தா குழந்தைங்கள திருடிகிட்டு போய் வித்துடுவாங்க!'' பக்கத்திலிருந்த வேலுமணி சொன்னபோது நவநீதனுக்கு இதயம் சுக்குநூறாக உடைந்து தெறித்தது போலிருந்தது.
 
கண்ணீர் கசிந்துருக மனதில் வலியோடு பிரசவ வார்டை விட்டு வெளியே வந்து அருகிலிருந்த இருப்பு பலகையில் அமர்ந்து வானத்தை வெறித்தார்
 
'' யோவ், இங்க பொம்மை வியாபாரம் பண்றமாதிரி குழந்தைங்கள திருட நோட்டம் போடுறான் ஒருத்தன்!'' பிரசவ வார்டுக்குள் நுழைந்த துப்பரவு தொழிலாளியை வழிமறித்து புகார் சொன்னார்கள் கிருஷ்ணசாமியும் வேலுமணியும்.
 
'' யோவ், அந்த பொம்மை வியாபாரி வந்ததுக்கப்பறம்தான் இங்க குழந்தைங்க காணாம போறது சுத்தமா கொறஞ்சு போச்சு, அவரு பொம்ம விக்குற சாக்குல எல்லா குழந்தைங்களையும் கண்காணிச்சுகிட்டே இருப்பார், இங்க பிரசவம் ஆகி தாயும் சேயும் நல்லபடியா வீடு போய் சேருறவரைக்கும் அவர் கண்காணிச்சுகிட்டே இருப்பார். நாலைஞ்சு திருடன்கள் கையும் களவுமா பிடிச்சிருக்கார், பாவம் அவரு போன வருஷம் இதே ஆஸ்பத்திரியில அவரோட குழந்தை திருட்டு போயிடிச்சு, இன்னமும் கிடைக்கல அதுக்கப்பறம் தான் இந்த பொம்ம வியாபாரமெல்லாம்!'' கிருஷ்ணசாமியும் வேலுமணியும் சிலையாகி நவநீதனை தேடிக்கொண்டிருந்தார்கள் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க. .''பொம்மை வாங்கும்மா'' என கேட்டுக்கொண்டிருந்தார் நவநீதன்.

அவசரம்



``ஹலோ, உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?'' தனது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப்பார்த்து யாராகயிருக்கும் என குழம்பிப்போனாள் ஐஸ்வர்யா.
 
``பேசறது அப்பறம் இருக்கட்டும் முதல்ல நீ யாரு!'' தனது கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டாள் ஐஸ்வர்யா.
 
`` என் பேரு இளமாறன் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியுல வேல பார்க்கிறேன்!'' பதிலுக்கு அவனும் தட்டி விட்டான்.
 
``முதல்ல என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது!'' ஐஸ்வர்யா மீண்டும் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டாள்.
 
`` அத அப்பறம் சொல்றேன், முதல்ல உன்கூட பேசறதுக்கு அனுமதி குடு!'' குறுஞ்செய்தியைப்பார்த்ததும் ஐஸ்வர்யா கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.
 
``நீ என்னடா பேசறது நானேபேசறேன்!'' அவனது எண்ணுக்கு டயல் செய்தாள் ஐஸ்வர்யா.
 
`` பொண்ணுங்க நம்பர எப்பிடியாவது கண்டுபிடிக்கிறது, கண்ட கண்ட மெசேஜ் அனுப்பறது, அப்பறம் ஐ லவ் யூ ன்னு சொல்றது, இப்பிடி எத்தன பேர்டா கிளம்பியிருக்கீங்க!'' கோபத்தில் வெடித்தாள் ஐஸ்வர்யா.
 
``ஹலோ, நான் ஒண்ணும் அந்த மாதிரி ஆள் கிடையாது உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றதுக்குத்தான் உன்கூட பேசலாமான்னு அனுமதி கேட்டேன், பிரவுசிங் சென்டருக்கு போன நீ, உன் பயோ டேட்டாவ டைப்பண்ணி அத டெலிட் பண்ணாம வந்துட்ட, வேற யாராவது அத ஓப்பன் பண்ணி படிச்சிருந்தா உன் போன்நம்பர குறிச்சுட்டு இப்போ நீ சொன்னியே மெசேஜ் அனுப்பறது பேசறது அப்பறம் ஐ ல்வ் யூன்னு சொல்றது இதெல்லாம்தான் நடந்திருக்கும், இனியாவது கவனமா இரு!'' சொல்லிவிட்டு போனை கட் செய்தான் இளமாறன்.
 
`` சாரி!'' என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு அவனது பதிலுக்கு காத்திருந்தாள் ஐஸ்வர்யா

பொறுப்பு

தனது மகன் இளமதியனை எல்.கே.ஜியில் சேர்த்ததிலிருந்து இன்றுவரை அவன் படிப்புக்கு ஆன செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகதில் எழுதி வந்தான் கிருஷ்ணமூர்த்தி.  

அதைப்பார்க்கப்பார்க்க அவனது மனைவி பரிமளாவுக்கு கோபம் வந்தது.யாராவது சொந்த புள்ளைக்கு செலவு பண்றத எழுதி வைப்பாங்களா

 உனக்காக இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன் அந்த பணத்தையெல்லாம் திரும்பக்குடுன்னு இந்த செலவுக்கணக்கக் காட்டி வாங்கப்போறீங்களா?'' எரிச்சலாய்க் கேட்டாள் பரிமளா.. 

 எல்லா அப்பாக்களும் தன்னோட மகன் படிச்சாப்போதுமுன்னு மட்டும் தான் நினைக்கிறாங்க அவனோட படிப்புச்செலவு எவ்வளவு ஆச்சுன்னு யாரும் ஞாபகம் வெச்சு சொல்றதில்ல, நாளைக்கு நம்ம மகன் படிப்பு முடிஞ்சு வேல தேடுறப்போ தன்னோட படிப்புக்கு என்ன விலை கொடுத்தோம்ன்னு விபரத்தோட சொன்னா, எனக்காக அப்பா இவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்கிறாரேன்னு ஒரு பொறுப்பு வரும், படிப்பு முடிஞ்சு ஊர் சுத்தாம சீக்கிரமா ஒரு வேலய தேடி படிப்புக்காக அப்பா செலவு பண்ணின காச வேல செஞ்சு சம்பாரிச்சுடனுமுன்னு தோணும்!

 அதனாலதான் இதெல்லாம் நான் எழுதறேன்!'' கிருஷ்ணமூர்த்தி சொன்னபோது தனது கணவனின் பொறுப்பான செயலைக்கண்டு மனதிற்க்குள் பெருமிதம் கொண்டாள் பரிமளா. ! 

பொம்மை



தனது வயலில் விளைந்து நிற்க்கும் நெல்கதிர்களை பறவைகள் வந்து கொத்தி தின்னாமலிருக்க காவல் பொம்மை ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார் விவசாயி சாமிநாதன்.மண்சட்டியில் கருப்பு மைகொண்டு கண்,வாய், காது வரைந்து குச்சியில் ஒரு மனித உருவ அளவிற்கு வைக்கோல் சுற்றி அதற்க்கு பழைய சட்டை அணிவிக்க தனது பழைய உடைகளை துளாவினார் சாமிநாதன்.எல்லா சட்டைகளும் நன்றாக இருக்கவே வேறு வழியின்றி நல்ல சட்டை ஒன்றை எடுத்துக கொண்டு புறப்படும்போது அவரது ஏழு வயது பேத்தி மதிவதனியும் அவர் கூடவே நடந்தாள்.எதுக்கு தாத்தா இந்த பொம்மை செய்யறீங்க?'' மெல்லக்கேட்டள் மதிவதனி
 
``
 
``
 
``
வயக்காட்டுல நெல் விளைஞ்சு நிக்குது, இந்த பொம்மைய கொண்டு போய் நிக்க வெச்சா மனுஷன் நிக்குதுன்னு பயந்து பறவைக வயக்காட்டு பக்கம் வரவே வராது.'' பொம்மைக்கு சட்டை அணிவித்தபடியே சொன்னார் சாமிநாதன். தாத்தா, பறவைக வந்து நெல்கொத்திபோனா வயல்ல எவ்வளவு நெல் குறையும், ஒரு கிலோ குறையுமா? ஒரு கிலோ நெல்லோட வில பதினைஞ்சு ரூபா, இந்த பதினைஞ்சு ரூபாய்க்காக முன்னூறு ருபா சட்டை, இருபது ரூபா மண்சட்டி, அம்பது ரூபா வைக்கோல். எதுக்குத்தாத்தா இத்தனை செலவு, பறவைக கொத்திப்போன மிச்சம் நெல்லு நம்க்கு போதும்பா, அதுகள வீணா காவல் பொம்மைகள வெச்சு விரட்டாதீங்க!'' உருக்கமாய்ச்சொன்ன பேத்தியின் வார்த்தைகள் மனதை தைக்க காவல் பொம்மையை பிரிக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.
 
 

தங்கச்சி பாப்பா



வணிகவியல் மூன்றாமாண்டு படிக்கும் சரவணன் தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கிக்கொண்டிருந்தான். எனக்கு தங்கச்சி பாப்பா புறந்திருக்கு!'' சந்தோசமாகச் சொன்னான் சரவணன்.  
 
குமாரும் கேசவனும் அதிர்ந்து சிலையானார்கள். உனக்கும் உன் தங்கச்சிக்கும் இருபது வருஷ இடைவெளி இருக்கு, வயசான உன் அப்பா அம்மாவுக்கு இந்த வயசுல ஒரு குழந்தை தேவையா? இத எப்பிடிடா சந்தோஷமா ஏத்துகிட்டு எங்களுக்கெல்லாம் சாட்லெட் குடுக்கிற!''  
 
ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்டான் குமார். 
 
சரவணன் கோபப்படாமல் மெல்லிய புன்னகையை நழுவவிட்டுச் சொன்னான்.என் அம்மா அப்பாவ குழந்தை பெத்துக்கச்சொல்லி வற்புறுத்தினதே நான்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னால பிளஸ் டூ படிச்சுகிட்டு இருந்த என் தங்கச்சி ஒரு பையன காதலிச்சிருக்கா, படிக்குற வயசுல காதலான்னு அப்பா திட்டியிருக்காரு, அந்த வருத்தத்துல என் தங்கச்சி தூக்கு மாட்டி செத்துப்போயிட்டா.  
 
இப்போ செத்துப்போன என் தங்கச்சியே மறுபடியும் பொறந்து வந்தது மாதிரி இருக்கு!'' கண்ணீரைத் துடைத்தபடிச் சொன்ன சரவணனை 'சாரிடா' என்று கட்டி அணைத்தார்கள் குமாரும் கேசவனும்
 

அப்பா மீது ஆரோக்யம்





ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியதும் முதல் வேலையாக தனது நண்பன் சிவசங்கரனை சந்தித்து அவனை கண்டபடி திட்டவேண்டும் என தீர்மானித்து அவனது வீட்டுக்கு நடந்தான் கேசவன்.  
வீட்டில் வைத்து திட்டினால் நாகரீகமாக இருக்காது என்று பக்கத்திலிருக்கும் டீக்கடைக்கு அழைத்தான் கேசவன். டேய், உனக்கு கொஞ்சமாவது உன் அப்பாவப்பத்தி நினப்பு இருக்காடா? மாசம் நாப்பதாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற, இங்க நீயும் உன் மனைவி குழந்தைங்களும் சந்தோஷமா இருக்கீங்க, ஊருல கூலி வேல செய்யற உன் தம்பிகூட உன் அப்பா ரொம்ப கஷ்டப்படறாரு, அவரோட செலவுக்குன்னு அதிகமா அனுப்பவேண்டாம் அட்லிஸ்ட் ஒரு ஆயிரம் ரூபாயாவது மாசா மாசம் அனுப்பி வைக்கலாமில்ல,
 ஊருல என்னப்பார்த்து நீ பணம் அனுப்பறதில்லையின்னு சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா? ஏண்டா அவருக்கு பணம் அனுப்பி வைக்கல?'' தனது கோபத்தை ஒரே மூச்சாக கொட்டி தீர்த்துக்கொண்டான் கேசவன்.  
ஆரம்பத்துல அப்பா பேருக்குத்தான் பணம் அனுப்பிகிட்டு இருந்தேன், அப்பா அந்த பணத்த வெச்சுகிட்டு தினமும் தண்ணி அடிச்சுகிட்டு வீட்டுல கலாட்டா பண்ணுவார், எவ்வளவோ சொல்லியும் திருந்தறமாதிரி தெரியல, அம்மா இருந்திருந்தாலாவது அவங்க பேருக்கு அனுப்பியிருப்பேன், இப்போ அவர் செலவுக்குன்னு தம்பிபேருக்கு பணம் அனுப்பி வைக்கிறேன்
 இந்த விஷயம் அப்பாவுக்கு தெரியாததனால நான் பணமே அனுப்பறதில்லையின்னு உன்கிட்ட சொல்லியிருக்கிறாரு, அப்பா ஆரோக்கியமா கொஞ்சநாள் கூட இருந்தா நல்லது இல்லையா?'' 
 அவனது யதார்த்த பதிலையும் தனது தந்தை ஆரோக்யம் மீது அவனுக்கு இருந்த அக்கறையை நினைத்து நண்பனை திட்டினோமே என்று மனதிற்க்குள் வருந்தினான் கேசவன்

பசி

 



கோடை விடுமுறையைக் கொண்டாட தனது மனைவி
 
வழியில் ஒரு ஹோட்டலில் சாப்ப்பிட இறங்கினார்கள்
 
கதிர்வேலின் தாயார் தெய்வானை சப்ளையரிடம் ஒரு இலை வாங்கி மீதமிருந்த சாதத்தை அதில் கொட்டி பார்சலாக்கி தரும்படி கேட்டாள்
 
தனது தாயாரின் செயலைக்கண்டு எரிச்சலடைந்தார் கதிர்வேல்
 
``இதுக்குத்தான் உங்கம்மாவ எங்கயும் கூட்டிகிட்டு போகவேண்டாமுன்னு சொல்றது, பொது இடத்துல எப்படி நடந்துக்கிறாங்க பார்த்தீங்களா?'' கதிர்வேலின் மனைவி எரிச்சலாகச் சொன்னாள்.
 
ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது பசியோடு காத்திருந்து பிச்சை கேட்ட ஒரு முதியவருக்கு அந்த பார்சலை தந்துவிட்டு கூடவே தயிரும் ஊறுகாயும் வாங்கி சாப்பிடும்படி காசு தந்தாள் தெய்வானை
 
``ஹோட்டல்ல சாதம் மீதம் வெச்சா அத அவங்க குப்பைத்தொட்டியுலதான் போடுவாங்க, அத பசியோட இருக்கிற யாருக்காவது கொடுத்தா அவங்க ஒரு நேர பசி ஆறுமில்லையா?;'' சாந்தமாய் சொன்ன தனது தாயாரை பெருமையாகப் பார்த்தார்கள் அவரது தந்தையும் மனைவியும் குழந்தைகளும்.. சாப்பிட்டு மீதமான சாதத்தை பார்சல் செய்து தர கேட்டால் பார்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தனது தாயாரை வெறுப்பாய் பார்த்தார் கதிர்வேல்... அனைவருக்கும் அளவுச் சாப்பாடு பரிமாறப்பட்டது. குழந்தைகள் இருவரும் தட்டிலிருந்த சாதத்தை முழுவதும் சாப்பிடாமல் மீதம் வைத்தனர்., குழந்தைகள், தாய், தந்தையரோடு காரில் புறப்பட்டார் கதிர்வேல்.

வீடு பார்த்து அட்வான்ஸ் குடுத்திடுங்க


ராகவனும் அவனது மனைவி சுசீலாவும் வாடகைக்கு வீடு தேடி அலைந்து சலித்துப்போனார்கள். ஷோபாநகரில் ஒரு புது வீடு வாடகைக்கு கிடைக்கும் என்ற தகவல் கிடைக்க இருவரும் போய் வீட்டை பார்த்தார்கள். ஒரு அறையும் ஒரு சமையலறையுமென வீடு சிம்பிளாக இருந்தது. வீட்டு உரிமையாளர் தினகரனை சந்தித்து அட்வான்ஸ், மாத வாடகை எவ்வளவு என்று கேட்டான் ராகவன். அட்வான்ஸ் எதுவும் வேணாம், வாடகை மூவாயிரம் மட்டும் குடுத்தா போதும்!'' சாந்தமாய் சொன்னார் தினகரன்.  

ராகவன் ஒரு கணம் யோசித்தான்.. என்னங்க யோசிக்கிறீங்க, வாடகை கூடினாலும் அட்வான்ஸ் கிடையாது சட்டுன்னு வீடு புடிச்சிருக்குன்னு சொல்லிடுங்க!'' சுசீலா அவசரப்படுத்தினாள். ராகவன் வீடு பிடித்திருக்கிறது என்றும் ``பத்தாம் தேதி குடி வர்றோம்!'' என்று சொன்னான். நல்லது வாங்க!'' என்று புன்முறுவலோடு பதில் சொன்னார் தினகரன். வீட்டை விட்டு கிளம்பும்போது இருவரின் முகத்தில் மகிழ்ச்சி இழையோடியிருந்தது..  

வீட்டுக்காரர் ரொம்ப தங்கமானவர் போல, யாருங்க இந்த காலத்துல அட்வான்ஸ் இல்லாம வீடு வாடகைக்கு விடுறது!'' வழியில் நடந்தவாறே வீட்டுக்காரரைப்பற்றி புகழ்ந்தாள் சுசீலா. அட்வான்ஸ் இல்லதான் ஆனா வாடகை அதிகமில்ல!'' ஏங்க, அந்த வீட்டுக்கு குறைஞ்சது இருபதாயிரமாவது அட்வான்ஸ் குடுக்கணும், நம்மகிட்ட அவ்வளவு பணம் இப்போ எங்கே இருக்கு!' சுசீலாவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் நடந்தான் ராகவன்.  

பத்தாம்தேதி இருவரும் குடிவந்தபோது வீட்டு உரிமையாளரின் மனைவி கெளசல்யா பால் கொண்டு வந்து தந்து சுசீலா கையால் பால் காய்ச்ச வைத்து நன்றாக பழகிக்கொண்டாள். வீட்டு உரிமையாளர் என்ற கர்வம் இல்லாமல் நல்ல குடும்ப நண்பர்களைப்போல் பழகி வந்தார் தினகரனும் அவரது மனைவியும்.. இரண்டு வருடங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை.  

ஊரிலிருந்து ராகவன் மனைவியின் அக்கா மகன் வேலை தேடி வருவதாக சொன்னபோது ராகவன் மனம் சங்கடப்பட்டது. அவன் இங்கு வந்து அவர்களோடு தங்குவதாக இருந்தால் இந்த வீடு போதாது. இரண்டு அறையுள்ள வேறு வீடு தான் பார்க்க வேண்டும். வேறு வீடு பார்க்கலாம்தான் 

ஆனால் அந்த வீட்டுக்கு குறைந்தது இருபதாயிரம் ருபாய் அட்வான்ஸ் தரவேண்டும், உடனே அவ்வளவு பணத்தை எப்படி புரட்டுவது, வருத்தம் படிந்த முகத்தோடு வாசலில் அமர்ந்தபோது தினகரன் வேலை முடிந்து வந்து சேர்ந்தான். என்ன ராகவன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க, ஏதாவது பிரச்சனையா?'' வீட்டுக்காரர் வலியக்கேட்டது ராகவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஊரிலயிருந்து என் மனைவியோட அக்கா மகன் வேலை தேடி இங்க வரப்போறான், அவன் எங்ககூட தங்குறதா இருந்தா வேற இதவிட பெரிய வீடாத்தான் பார்க்கணும், அதான் கஷ்டமா இருக்கு!'' தயங்கியபடியே சொன்னான் ராகவன். ராகவன்,

 எண்ணைக்கும் ஒரே வீட்டுல இருக்க முடியாது, நான் உனக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது ஒரு பெட்றூம் ஒரு கிச்சன், அதுக்குள்ள உன் மனைவியோட அக்கா மகனையும் சேர்த்து தங்க வைக்க முடியாது அதனால வீட்ட மாத்திதான் ஆகணும், வேற வீடு உடனே பார்த்துடு, நீ எங்கே தங்கினாலும் நம்ம நட்பு அப்பிடியேதான் இருக்கும்!'' தெளிவாய்ச் சொன்னார் தினகரன். வீடு பார்க்கலாம்தான் ஆனா உடனே அட்வான்ஸ் தர்றதுக்கு என்கிட்ட பணமில்ல, எல்லாரும் உங்களமாதிரி அட்வான்ஸ் இல்லாம வீடு தருவாங்களா என்ன!'' தினகரன் பதிலெதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று இருபத்தி நான்காயிரம் பணத்தை எடுத்து வந்து ராகவன் கையில் திணித்தார்.  
 
இது உங்க அட்வான்ஸ் பணம்தான் வைச்சுக்கோங்க, நீங்க வீடு கேட்டு வந்தப்போ உங்ககிட்ட நான் அட்வான்ஸ் வாங்கல, மொத்தமா இருபதாயிரம் அட்வான்ஸ் கேட்டிருந்தா நீங்க சிரமப்பட்டிருப்பீங்க, அதனாலதான் அட்வான்ஸ் வேண்டாமுன்னு வாடகையில ஆயிரம் ரூபா அதிகமா வெச்சு கேட்டேன், உங்களுக்கும் அது ஒரு சின்ன செலவா தெரிஞ்சிருக்கும், அந்த பணத்த நான் வங்கியுல போட்டேன், இப்போ அது இருபத்திநாலாயிரமாயிடிச்சு, இந்த பணத்த வெச்சு வேற வீடு பாத்து அட்வான்ஸ் குடுத்திடுங்க!'' தினகரன் சொல்ல சொல்ல அவரை கையெடுத்து கும்பிடலாம்போல தோணியது ராகவனுக்கு

மொக்கையன்



மொக்கையன் ஊரில் திருமணங்களோ, நிச்சயதார்தங்களோ, கிரகப்பிரவேசமோ, பூப்புனித நீராட்டு விழாக்களோ, அன்னதானங்களோ தினமும் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வான் அங்கெல்லாம் அழைக்கப்படாத விருந்தாளியாகச் சென்று கடைசி பந்தி வரை காத்திருந்து சாப்பிட்டு விட்டுதான் திரும்புவான்

மொக்கையனுக்கு வயது ஐம்பது தாண்டியிருந்தது எதிர்காலம் பற்றிய சிந்தனையற்று கவலைகள் எதுவுமின்றி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு யாராவது பழைய லுங்கியோ வேட்டியோ தருவார்கள். வெள்ளை நிறத்திலிருக்கும் வேட்டியை அவன் கட்டத்துவங்கினால் பின்பு அது பழுப்பு நிறமேறி வேட்டியின் சுய அடையாளத்தை இழந்து பெயரிடப்படாத வேறு கலராக மாறி அது கிழிந்து போகும் வரை அவனை விட்டு விலகாமலெயே இருக்கும்.இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புது வேட்டி சட்டை வாங்கி விடவேண்டும் என்ற கனவு அவன் மனதில் எழும்பிக்கொண்டே இருந்தது புது வேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற காரணத்தை சொல்லி யாரிடமாவது காசு கேட்டால் எல்லோருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது மேலாடை அணிந்து பார்த்திராத ஊர் ஜனங்களுக்கு அவன் புது வேட்டி சட்டை வாங்க காசு கேட்டால் கொடுத்த ஒருருபாய் நாணயத்தை திரும்ப வாங்கி விடலாமா என்று நினைக்கத் தோன்றியது. 
 
சிறுக சிறுக கிடைத்த காசுகள் பீடி வாங்கியும் கட்டங் காப்பி வாங்கியும் செலவழிந்து போயின. அரசியல்கூட்ட விழாவில் ஒலிபரப்பான பாட்டுசத்தம் கேட்டு அது திருமண வீடாக இருக்கக்கூடும் என்று நம்பிச் சென்று ஏமார்ந்து திரும்பியதைப்போலவே வேட்டி சட்டை வாங்குவது என்ற எண்ணமும் அவனை விட்டு மெல்ல விலகியது.அவனுக்குள் புற்று நோய் குடிவந்து பல வருடங்கள் ஆனது தெரியாமலேயே அவனது ஜீவனம் நகர்ந்துகொண்டிருந்தது.
 
 அன்று உடம்புக்கு முடியாமல் பள்ளிக்கூட வராந்தாவில் முடங்கி கிடந்தான் மனசு மட்டும் புது வேட்டி சட்டையின் மீது வியாபித்திருந்தது.மொக்கையனை வேலை வரவில்லையென்று அவனை தேடி வந்த ஓட்டல்காரரிடம் உடம்புக்கு முடியல என்று சொல்லிவிட்டு தனதுபுது வேட்டி சட்டை ஆசையை சேர்த்துச் சொன்னான். ஓட்டல்காரருக்கு கோபம் வந்தது
 
புது வேட்டி சட்ட போட்டுகிட்டு பொண்ணா கெட்டப்போற? ஆசயப்பாரு!" அவர் சினந்தபடியே கிளம்பிப்போனார். புற்று நேய் தனது உக்கிரத்தை காட்ட மொக்கையனுக்கு பேச்சு நின்று போனது அது மேய் மாதம் வேறு சிறுவர் சிறுமியர்களின் வாசனையற்று இருண்டு கிடந்தது அந்த பள்ளிக்கூடம் 
 
அவன் முனகல் நின்று உயிர் பிரிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ஓட்டல்காரருக்கு தெரிய வந்தது.மொக்கையன் இறந்த செய்தி ஊர் முழுக்கப் பரவியது அவனது உடலை தகனம் செய்ய ஊர்க்காரர்களிடம் வசூல்வேட்டை நடத்தப்பட்டது வசூலான பணத்தில் புது வேட்டி சட்டை வாங்கி வந்து உடலுக்கு அணிவித்து உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது புதுவேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற ஆசை முதலில் அவனுக்குள் புதைந்துபோக அவனது உடல் பிறகு மண்ணில் புதைந்து போனது.என்றோ எடுத்த புகைப்படத்தின் ஓரத்தில் நின்றிறுந்த மொக்கையனை இனம் கண்டு அதை ஸ்கேன் செய்து சட்டை அணிந்திருப்பதுபோல் புகைப்படம் தயாரித்து மறுநாள் காலை நாளிதழில் அஞ்சலி என்ற பெயரில் சிரித்துக்கொண்டிருந்தான் மொக்கையன்
 
 உயிருடன் இருக்கும்போது மேல்சட்டை அணியாத அவன் புகைப்படத்தில் மேல்சட்டை அணிந்திருப்பதை அவன் ஆத்மா மன்னிக்குமா என்பது யாருக்கும் தெரியவில்லை
 

Tuesday, December 20, 2011

சொந்த ஊர்காரர்

நண்பனுக்கு ஆபரேசன் என்று கேள்விபட்டு அவனை பார்க்க குஜராத் அக்க்ஷதா மருத்துவமனைக்கு சென்றேன். 

 ஆபரேசன் முடிந்து மயக்க நிலையில் படுத்திருந்தான் நண்பன். அவன் கண் விழிக்கும்வரை காத்திருப்போம் என்று வரவேற்ப்பறையில் அமர்ந்து தமிழ் வார இதழ் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் " ஆப் சவுத் வாலா" என்று இந்தியில் கேட்டார். 

நான் 'ஆமாம் `என்று தலையாட்டினேன். அவர் முகம் மலர்ந்து தன்னை ஒரு ஆசிரியர் என்றும் தன்னோடு வேலை பார்பவர் ஒரு தமிழர் என்றும் சொன்னார். எனக்கு ஆர்வம் அதிகமாகி அந்த தமிழர் எந்த ஊர்காரர் என்று கேட்டேன் அவர் மார்த்தாண்டம் என்று சொன்ன போது நான் உச்சி குளிர்ந்தேன். எனது சொந்த ஊருக்கு பக்கத்து ஊர் என்பதால் அவரது அலைபேசி எண் கிடைக்குமா என்றேன். " ஓ தாராளமா" என்றபடி அவரது நம்பரை தந்துவிட்டு, அவருடன் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் என்னை சந்தித்த விஷயத்தை கூறிவிட்டு அவரது அலைபேசியை என்னிடம் தந்தார்.

 நான் அவரிடம் அறிமுகம் செய்து கொண்ட போது குஜராத்தில் சொந்த ஊர்க்கார நண்பர் கிடைத்தார் என்ற மகிழ்சி ஏற்பட்டது . தொடர்ந்து தொடர்பு வெச்சிக்குவோம் என்றபடி அலைபேசியை அவரது நண்பரிடம் தந்தேன். "கண்டவங்களுக்கெல்லாம் என்னோட நம்பர எதுக்கு தர்றீங்க" என்று இந்தியில் அவரது நண்பருக்கு கேட்ட குரல் மெல்லமாய் எனக்கும் கேட்டது. 

நன்றி :பாக்யா

ஞாயிற்றுக்கிழமை

"வர்ற ஆவணி மாதம் பத்தாம் தேதி புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு, அன்ணைக்கு கல்யாணத்த வெச்சுக்கோங்க ரொம்ப சிறப்பா இருக்கும்" தனது மகளின் திருமண தினத்தை புரோகிதர் பஞ்சாங்கம் பார்த்து சொன்னபோது தேவராஜ்க்கு அது பிடிக்காமல் போனது.

 "புரோகிதரே அதே மாசத்துல ஞாயிற்றுக்கிழமை நாள் குறிச்சு குடுத்திடுங்க" என்றார் தேவராஜ். "ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இல்ல சார்" புரோகிதர் அங்கலாப்புடனே சொன்னார்.

 "பரவாயில்ல அந்த நாளே இருக்கட்டும்" என்றபோது புரோகிதர் மறுபேச்சின்றி அந்த நாளையே குறித்து கொடுத்தார். " அப்பா சிற்றியிலெயெ பெரிய மண்டபத்த புக் பண்ணிடவா" என்று கேட்ட தனது மகனிடம் " நம்ம ஊருல இருக்கிற சாதாரண மண்டபமே போதும்" என்றார். 

 "என்னப்பா நீங்க நல்ல நாள், நல்ல மண்டபம் எதுவும் வேண்டாங்கறீங்க ஏன்? என்ற தனது சந்தேகத்தை மெல்ல கேட்டான் அவரது மகன். 

"கல்யாண நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமையா இருந்தா பள்ளிகூடம் போறவங்க, வேலைக்கு போறவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து வயிறார சாப்பிட்டுட்டு வாழ்த்தியிட்டு போவாங்க, ஐந்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சிற்றியில மண்டபம் புக் பண்ணினா பஸ் ஏறி வர்றதுக்கு சிரமப்பட்டு பாதி பேர் வராம போயிடுவாங்க" என்றபோது தனது தந்தை ஒரு பாசக்காரர் என்பதை புரிந்து கொண்டான் அவரது மகன். 

நன்றி :பாக்யா

சைடு ஸ்டேண்டு

வங்கியிலிருந்து பணம் எடுத்துவிட்டு தனது புதிய ஹைனைடிக் ஹோண்டா டூ-வீலரில் ஏறிப்பறந்தாள் மதிவதனி. 

மெயின்ரோட்டைக் கடந்து வலப்பக்கமாக திரும்பி, ஆள் நடமாட்டமில்லாத அந்த சந்துக்குள் நுழைந்து, வண்டியின் வேகத்தை குறைத்து கண்ணாடியைப் பார்த்தபோது திடுக்கிட்டாள். 

 பின்னால் ஹீரோ ஹோண்டா வண்டியில் அவளை பிந்தொடர்ந்தான் அவன். தடித்த உருவம், கண்களில் கறுப்பு கண்ணாடி ஒரு சினிமா வில்லனைப்போல் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான். 'பேங்குலயிருந்து பணத்த எடுத்துட்டு திரும்பறத பார்த்திருப்பான் அதான் என்ன பாலோ பண்றான்,

 கடவுளே இந்த சந்துல வேற ஆளே இல்லியே!' மதிவதனிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அவனை திரும்பி பார்த்தபடி வண்டியின் வேகத்தை கூட்டினாள். சிறிது தூரம் சென்றதும் ஆள்நடமாட்டம் தெரிய நிம்மதி பெருமூச்சு விட்டவாறு பணமிருக்கும் தனது கைப்பையை இறுக்கமாகப் பற்றினாள்.

 சட்டென்று அவள் முன்னால் வண்டியை நிறுத்தினான் அவன். அய்யோ என்று கத்தி ஆளைக்கூட்டவேண்டும் நினைத்து வாயை திறக்கவும், 

 '' மேடம், உங்க வண்டியோட சைடு ஸ்டேண்டு மடக்காமலேயே இருக்கு, 

இப்பிடி போயி இடது பக்கமா திரும்பினா சைடு ஸ்டேண்டு தரையுல உரசி கீழ விழுந்துடுவீங்க, 

முதல்ல ஸ்டேண்ட மடக்கி வையுங்க!'' சொல்லிவிட்டு வேகமாய் பறந்த அவனை ஆச்சரியமாகப்பார்த்தாள் மதிவதனி. 

நன்றி :பாக்யா

கெல்மெட்

நண்பரின் அறையில் தங்கியிருந்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு அவசரமாக என்னை எழுப்பி இரு சக்கர வாகனத்தில் அவனை ரயில் நிலையம் வரை கொண்டு விடுமாறு கேட்டான். நண்பர் வண்டியை ஓட்ட இருவரும் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டோம், துரதிர்ஷ்டவசமாக வண்டியில் பெட்ரோல் இல்லாமல் வண்டி பாதி வழியில் நின்றது. 

வண்டியை சாய்த்து படுக்க வைத்து அது நனைத்திருந்த பெட்ரோலில் அருகிலிருந்த பெட்ரொல் பங்க் வந்து சேர்ந்தோம். பங்க் திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது. மீண்டும் அடுத்த பங்க் நோக்கி விரைந்தோம் சிறிது தூரம் சென்றதும் வண்டி சுத்தமாய் நின்று போனது.

 நண்பன் வண்டியை என்னிடம் தந்துவிட்டு பெட்ரோல் பங்க் திறக்கும்வரை காத்திருந்து பெட்ரோல் அடித்துவிட்டு திரும்பி செல்லுமாறு சொல்லிவிட்டு எதிரில் வந்த பஸ்ஸை கை காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டான். பெட்ரோல் இல்லாத வண்டியை உருட்டிகொண்டு அந்த குளிரில் நடந்தபோது எரிச்சலாக வந்தது. 

சட்டென்று அந்த விஷயம் நினைவுக்கு வர அந்த சங்கடமான சூழ்நிலையிலும் நான் வாய் விட்டு சிரித்தேன், காரணம் நண்பன் அவசரத்தில் கெல்மெட்டை கழட்டாமல் அப்படியே வண்டி ஏறியதுதான். 

சிறிது நேரத்தில் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் கேட்டு மேலும் சிரித்தேன். பஸ்ஸில் கெல்மெட் தலையில் இருப்பதை மறந்து அப்படியே இருந்துவிட்டாராம் எனக்கு போன் செய்து அலைபேசியை காதில் வைக்க போன போது தான் அவரது தலையில் கெல்மெட் இருப்பதே நினைவுக்கு வந்ததாம். 

பஸ்ஸில் பிரயாணம் செய்யவும் கெல்மெட் அணிய வேண்டுமா என்று சக பிரயாணிகள் அவரை ஒருமாதிரியாகப் பார்த்ததில் கூச்சத்தில் நெளிந்தாராம் எனது நண்பர்.

 நன்றி :பாக்யா

அமைதி

அந்த ரயில் பெட்டியில் கண்பார்வையற்ற ஒருவர் பிச்சை கேட்டு வந்த போது அவரவர் கையிலிருந்த சில்லரைகளைப் போட மகிழ்ச்சியாக அடுத்த பெட்டி நோக்கி நகர்ந்தார் அவர். சிறிது நேரத்தில் பத்து வயது சிறுவன் அழுக்கு உடையுடன் கையேந்தியபடி வந்தான். அவனுக்கு காசு போட யாருக்கும் மனசு வரவில்லை.

 ''ஏண்டா கை கால் நல்லாத்தானே இருக்கு, வேலை செஞ்சு பொழைக்கிறத விட்டுட்டு பிச்சை எடுக்கிற? போடா அந்த பக்கம்!'' ஐம்பது வயது பெரியவர் தனது நரைத்த மீசையை முறுக்கியபடி சொன்னார். 

சிறுவன் அவரது மிரட்டலுக்கு பயந்து அந்த இடத்தைவிட்டு நகர முயற்ச்சிக்கையில் குமார் அவனது கையில் பத்து ருபாயை திணித்துவிட்டு படித்துக்கொண்டிருந்த நாவலை மீண்டும் தொடர்ந்தான். 

'' எதுக்கு இந்த மாதிரி பசங்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பண்றீங்க? பெரியவர் நேரடியாகவே கேட்டார். ''அந்த பையன் வேலை செஞ்சு பொழைக்கலாம்தான் இருந்தாலும் இண்னைக்கு பிச்சை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணி வந்துட்டான், யாருமே அவனுக்கு பிச்சை போடலையின்னா அவன் எப்பிடி சாப்பிடுவான் அவனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குல்ல!'' குமார் சொன்ன போது யாரிடமும் பதிலின்றி அமைதியானது அந்த பெட்டி ரயில் சத்தத்தை தவிர. 

நன்றி :பாக்யா

நல்லெண்ணம்

சீனிவாசனும் அவனது நண்பர் வேணுகோபாலும் முடிவெட்டிக்கொள்ள சலூண் கடைக்கு வந்தார்கள்

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்கு பேர் வரிசையில் முடிவெட்டிக்கொள்ள காத்திருந்தார்கள் இருவரும் சலித்தபடியே வெளியில் வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

 " சீனு பக்கத்து கடையுல ஒரு சிகரெட் பத்த வெச்சுட்டு வந்துடலாம் வா" வேணுகோபால் அழைத்தபோது வேண்டாம் என மறுத்த சீனிவாசனை ஆச்சரியமாகப் பார்த்தான் வேணுகோபால்.


 ஐந்து நிமிடத்துக்கொரு தரம் சிகரெட் பிடிக்கும் சீனிவாசன் இப்பொழுது மட்டும் வேண்டாமென்று சொன்னதை அவனால் நம்ப முடியாமல் அதுக்கு என்ன காரணமென்று நேரடியாகவே கேட்டான். "


முடிவெட்டுறவங்க நம்ம முகத்துக்கு பக்கத்துல நின்னு முடி வெட்டுறப்போ நாம சிகரெட் புடிச்சுட்டு போய் உட்கார்ந்தா நம்ம வாயிலிருந்து வர்ற சிகரெட் வாசம் அவருக்கு பிடிக்காம போய் முகம் சுளிக்கலாம் அதனாலதான் இப்போ வேண்டாமுன்னு சொன்னேன்" அவனது பதிலில் வெளிப்பட்ட நல்லெண்ணத்தை நினைத்து அவனை பெருமையாகப் பார்த்தான் வேணுகோபால்.

நன்றி :பாக்யா

வீரன்

ஜல்லிக்கட்டில் திமிறிய காளையை துரத்தி வந்து அதன் திமிலைப்பிடித்து அடக்கினான் லிங்கம். வெற்றிக்களிப்பில் கறிச்சோறு தின்றுவிட்டு பரிசாக கிடைத்த பணமுடிப்பை கையில் வைத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்து வரும் முறைப்பெண் வசந்தியைப் பார்க்கப் புறப்பட்டான். 

வசந்தி குளத்தங்கரையில் துணி துவைத்துக்கொண்டு நின்றாள். அவளுக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் லிங்கம். '' பார்த்தியா காளைய அடக்கி பணமுடிப்பும் வாங்கியிட்டேன், இப்ப சொல்லு இந்த வீரன கட்டிக்கிறியா இல்ல அந்த ஒல்லிப்பிசாசு தங்கவேலுவ கட்டிக்கப்போறியா?'' 

'' தங்கவேலு உன்ன விட வீரன், நான் அவனத்தான் கட்டிக்குவேன்!'' வசந்தி முடிவாகச்சொன்னாள். " என்னவிட அவன் எந்த விதத்துல வீரன் சொல்லு!'' கோபம் கொப்பளிக்க கேட்டான் லிங்கம். 

 '' தெருக்கோடியுல இருக்கிற டீக்கடையுல இருந்த இரட்டை டம்ளர் முறையுல டீ குடிக்க கூடாதுன்னு போராடி, அத வேரோட பிடுங்கி எறிஞ்சி எல்லாரையும் ஒரே டம்ளர்ல டீ குடிக்க வெச்சானே தங்கவேலு, என் பார்வைக்கு அவன்தான் வீரனா தெரியறான்!'' 

வசந்தி சொன்னபோது தங்கவேலு வீரன் என்பதை ஒத்துக்கொண்டு வந்தவழியே திரும்பி நடந்தான் லிங்கம், அவளை மறந்தபடி.. 

 நன்றி :பாக்யா

குலதெய்வம்

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் மதிவதனியோடு சாமி கும்பிட்டு வரலாமென்று தீர்மானித்து இருவரும் ஹோண்டா சிட்டியில் புறப்பட்டோம். நான்கு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது வழக்கமாக நாங்கள் சாமி கும்பிடும் அந்த குலதெய்வக்கோவில். சின்னவேடம்பட்டியை தாண்டி செல்கையில் அங்கிருந்த முருகன் கோவிலில் பறையொலி சத்தம் காதைப் பிளக்க, சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. பெண்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

" அம்மா எதுக்கு அவ்வளவு தூரத்துல இருக்குற கோவிலுக்க்கு சாமி கும்பிடப்போகணும், வழியில இருக்கிற இந்த கோவில்லயே சாமி கும்பிட்டுட்டு போலாமே!" மதிவதனி கேட்டபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் மகள் விடவில்லை ,மீண்டும் கேட்கவே நான் மென்று விழுங்கியபடி அந்த உண்மையைச் சொன்னேன். 

 " அது தாழ்ந்த சாதிக்காரங்க கும்புடுற கோவில், நாம அங்கயெல்லாம் போகக்கூடாது!" என்றேன். " அப்போ அந்த கோவில்ல இருக்குற முருகன் சாமியும் தாழ்ந்த சாதி கடவுளா?" 

மதிவதனி வெகுளியாய் கேட்டபோது எனக்கு சுருக்கென்றிருந்தது. மனுஷங்கதான் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிஞ்சு கிடக்கிறாங்க, 

அவங்க தனித்தனியே சாமி கும்பிடுறதால தெய்வங்கள் மேல தவறான எண்ணம் அந்த பிஞ்சு மனதில் பதிந்துவிடக்கூடாதென்று வண்டியை திருப்பி வழியிலிருந்த அந்த முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம் எங்கள் குலதெய்வத்தை மறந்தபடி..

 நன்றி :பாக்யா

என் கேள்விக்கு என்ன பதில்?

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான். 

நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். " மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!'' என்று தெனாவெட்டாகக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான். 

மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே, " எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!" என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன். எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா? எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. ''அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!'' அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.

 அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான். " ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிர்வாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ,

மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!" 

இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. 

நன்றி :பாக்யா

மாலதி ஐ லவ் யூ

மூன்றாவது மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்த பார்வதி அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். முதல்மாடியின் படிக்கட்டில் நின்று கொண்டு தனது மகன் பிரசாந்தும், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாலதியும் நெருக்கமாக நின்றிருந்தார்கள். பிரசாந்த் கடிதம் ஒன்றை நீட்ட, மாலதி அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். பார்வதிக்கு எல்லாமே புரிந்தது. ' வரட்டும் அவ!' மனதிற்க்குள் கறுவிக்கொண்டாள். சற்று நேரத்தில் மாலதி வந்து சேர்ந்தாள். " என் மகன் உனக்கு லெட்டர் குடுத்தானா?" சற்று மிடுக்காகவே கேட்டாள் பார்வதி. " டீச்சர் அது வந்து...." தடுமாறி தலை குனிந்தாள் மாலதி. " எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் நின்னேன், அந்த லெட்டர குடு!" பார்வதி முறைக்க வேறுவழியின்றி ஜாக்கெட்டுக்குள்ளேயிருந்து அந்த கடிதத்தை எடுத்து தந்துவிட்டு டியூசனுக்குக்கூட காத்திருக்காமல் வேகமாய் மாடிப்படியிறங்கி ஓடினாள் மாலதி. கடிதத்தை படித்த பார்வதியின் முகம் சுருங்கியது. மகனுக்கு புத்திமதி சொல்லி திருத்தவேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள். அரைமணி நேரம் கழிந்து வந்த பிரசாந்திடம் பொரிந்து தள்ளினாள் பார்வதி. " என்ன புள்ளடா நீ, இப்பிடியா பண்றது, உன்ன என் புள்ளயின்னு சொல்லவே வெட்கமா இருக்கு, ஒரு பொண்ணுக்கு இப்பிடியா லெட்டர் எழுதி தருவ? அந்த பொண்ணே வலிய வந்து அவ காதல உன்கிட்ட சொன்னதுக்கு ` முடியாது, வீட்டுல அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்ன மறந்துடு! இப்பிடியா எழுதி அவகிட்ட குடுப்ப, காதலுக்கு நானும் உன் அப்பாவும் எப்பவுமே தடையா இருக்கமாட்டோம், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா ஜாதி, மதம் பார்க்கவேண்டியதில்ல, வரதட்சணையின்னு பொண்ணு வீட்டுக்காரங்கள வேதனப்படுத்த வேண்டியதில்ல, போய் மாலதிகிட்ட உன் காதல சொல்லு!" பார்வதியின் வார்த்தைகளைக்கேட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் பிரசாந்த், மாலதியிடம் ஐ லவ் யூ சொல்ல. நன்றி :பாக்யா

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...