ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான்.
நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
" மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!'' என்று தெனாவெட்டாகக் கேட்டேன்.
அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான்.
மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே,
" எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!" என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன்.
எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா? எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது.
''அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!'' அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.
அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான்.
" ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிர்வாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ,
மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!"
இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது.
நன்றி :பாக்யா
No comments:
Post a Comment