Total Pageviews

Sunday, October 11, 2026

கடவுள் நம்பிக்கை !

 

கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும் போது பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்... !அருகிலுள்ள தீவில் அவன் கரையேறினான்...!!

இறைவா…இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்து விடு....!!என வேண்டினான்.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பேன்...?என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா...??” என்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையும் செய்தான்...!!

எந்த உதவியும் அவனுக்கு கிடைக்க வில்லை...!!

இப்படியே சில நாட்கள் ஓடின...!!

தன்னை காத்துக் கொள்ள,தீவில் கிடைத்த பொருட்கள்,மற்றும் கப்பலின் உடைந்த பாகங்களை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான்....!!அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள்,மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப் படுத்தி தங்கியும் வந்தான்.....!!

இப்படியே நாட்கள் ஓடின...!!.

இவன் பிரார்த்தனையை மட்டும் விடவே இல்லை.கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை நம்பிக்கையோடுதேற்றிக் கொண்டான்.ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில்,அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.பட்ட காலிலே படும் என்பது போல…எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது.இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே ஒரு குடிசையும் ,வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரை யாகியிருந்தன.அதை பார்த்த இவன் அலறித் துடித்தான்.எல்லாமும் போய்விட்டது.இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய் விட்டது.

“இறைவா… !என்னை காப்பாற்றும் படி தானே உன்னை மன்றாடினேன்.நீ என்ன வென்றால் இருப்பவற் றையும் பறித்துக் கொண்டாயே…!!

இது தான் உன் நீதியோ…?”என்று கதறி அழுகிறான்.அப்போது ஒரு கப்பலின் பெரும் ஹாரன் சப்தம் இவனை எழுப்பியது.இவன் இருந்த தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.

“அப்பாடா…நல்ல வேளை…ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.”என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.கப்பல் சிப்பந்திகள் அவனை,லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.தான் இங்கே தனியாக தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்டான்...!!

“தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. !யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி,சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்......!!

அப்போது இவனுக்கு குடிசை எரிந்ததற்கான காரணம் இவனுக்கு புரிந்தது.இறைவனுக்கு நன்றி சொன்னான்.அந்த வழியில் கப்பல்கள் பெரும்பாலும் வருவதே மிக மிக அரிதான நிலையில்,குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் ,தன் நிலை என்ன வாகியிருக்கும் என்று அவனுக்கு அப்போது புரிந்தது.அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படித் தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம்.

ஒரு சில நேரங்களில் நம்மை காக்கவே இறைவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்.அவன் தரும் சோதனைகள் அனைத்தும்,நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே ...!!"

சோதனை மேல் சோதனை என்றால்"..…இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது....!!என்றே அர்த்தம் !!!

வெகு விரைவிலே நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

Wednesday, February 25, 2026

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

 

தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான்,

அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள்.

அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்க அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

தண்ணீர் குடித்த பிறகு, அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம், பெண்களின் குணம் எந்த மாதிரியானது என்பது பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

என்று கேட்டான்.

இதைச் சொன்னதும், அந்தப் பெண் சத்தமாக, "என்னைக் காப்பாற்று... என்னைக் காப்பாற்று..." என்று கத்த ஆரம்பித்தாள். அவளுடைய குரலைக் கேட்டதும், கிராம மக்கள் கிணற்றை நோக்கி ஓடத் தொடங்கினர். அந்த மனிதன், "நீ ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டான்.

நான் இப்படி செய்தால் " கிராம மக்கள் வந்து உன்னை நன்றாக மயக்கம் அடையும் வரை அடித்துப் போடுவார்கள் என்று கூறினாள்.

இதைக் கேட்ட அந்த நபர், "என்னை மன்னியுங்கள், நீ ஒரு நல்ல, மரியாதைக்குரிய பெண் என்று நினைத்தேன்" என்றார். அதற்குள் கிராம மக்கள் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தப் பெண் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த பானையிலிருந்து தண்ணீரை முழுவதுமாக அவள் உடலில் ஊற்றி, அவள் உடலை முழுவதுமாக நனைத்தாள்.

இதற்கிடையில், கிராம மக்களும் கிணற்றுக்கு அருகில் சென்றனர். கிராம மக்கள் அந்தப் பெண்ணிடம், "என்ன நடந்தது?" என்று கேட்டனர்.

அந்தப் பெண், "நான் கிணற்றில் விழுந்தேன், இந்த நல்ல மனிதர் என்னைக் காப்பாற்றினார்" இந்த மனிதன் இங்கே இல்லையென்றால், நான் இன்று இறந்திருப்பேன்.

கிராம மக்கள் அந்த மனிதனை மிகவும் பாராட்டி, அவரைத் தங்கள் தோள்களில் தூக்கி பாராட்டிbஅவரை மிகவும் கௌரவித்தனர், வெகுமதிகளையும் அளித்தனர்.

கிராமவாசிகள் வெளியேறியதும், அந்தப் பெண் அந்த மனிதனிடம், "இப்போது பெண்களின் பெண்மையின் தன்மை உங்களுக்குப் புரிகிறதா???

நீங்கள் ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

என்று சொல்லி முடித்தால்.

இந்தக் கதை குறித்து கருத்துத் தெரிவித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday, February 24, 2026

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!

 யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!


🦜இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்

இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,

இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.

கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,

கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...

ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு

பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு

மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்

எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,

ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,

எந்தசூழ்நிலையில் ,

என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று

கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக

இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ

அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!

எங்கே எப்படி முடியும்!!!

என்பது எழுதினவனுக்கே

தெரியாது என்பது தான் உண்மை?!

Friday, December 19, 2025

இட்லி கடை ! எதையும் பெறுவதை விட... *கொடுப்பதில் தான்... * ஆனந்தம், அமைதி, திருப்தி நிம்மதி உள்ளது.

 


முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.
"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... 
நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். 

நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . 
இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .
நான் இறந்து விட்டால்... 
என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.
எனவே 
எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். 
அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.

வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் 
மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.

என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... 
தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." 
இப்படிக்கு மீனாள் ராமசாமி. 
என்று எழுதி இருந்தது.

சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். 
தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 

'யார் இந்த மீனாள் ராமசாமி? ' 
என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 
'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். 
ஆனால், வேலைப் பளு காரணமாக
முடியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை... 
'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். 

அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.
சின்ன கட்டிடம்... 
வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. 
பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. 

எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். 

"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” 
என்று கேட்டார். 
“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.
விவரங்களைச் சொன்னார்.
“அப்படியா தம்பி 
ரொம்ப சந்தோஷம்... 
உட்காருங்க. 
ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” 
என்று இருக்கையைக் காண்பித்தார்.

“ஒன்றும் வேண்டாம் 
தண்ணீர் மட்டும் கொடுங்கள்”
தண்ணீர் கொடுத்தபடியே, 
“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...
ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .
பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். 

எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.
கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். 
நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். 

எங்களுக்கு குழந்தைகள் இல்லை...

எனவே, அதிகம் செலவுகள் இல்லை. 
அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.
வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... 
அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். 
எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” 
என்று விபரமாகச் சொல்லி
 முடித்தார்.

இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.
“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

“சரிங்க ஐயா,
உங்களைப் பார்க்க வந்தேன். 
வேறு விஷயம் இல்லை...
கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.
சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .
அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்
“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "
என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால், அங்கு 
கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. 
வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்
கொண்டார்கள். 
பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. 
இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.

“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? 
யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “
என்று கேட்டார் மானேஜர்.
“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. 
காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”
“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” 
என்று சொன்னார். 

மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். 
மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். 
மாதங்கள் போனது.

கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 
'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.
காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.
மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். 

எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். 

அதே கல்லாப்பெட்டி . 
எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். 
சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... 
மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.

உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். 
மேனேஜருக்கு புரிந்து விட்டது.
விசாரித்ததில்... 
அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். 
அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். 
இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.

“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 
“தெரியும் “என்று சொன்னார்.
“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். 

“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. 
எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.
அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். 
அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். 

அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.
என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 
இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” 
என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.
இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...

*இந்த உலகம் எப்படி பட்டது * என்று... 
எதையும் பெறுவதை விட... 
*கொடுப்பதில் தான்... * 
ஆனந்தம்,
அமைதி,
திருப்தி 
நிம்மதி உள்ளது. 
இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.

Monday, October 27, 2025

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

 

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!..

நீ கவலைப்படாதே!

இந்த வரனை ஒப்புக்கோ! உன் வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா!..

நான் அப்பா பேச்சை என்றுமே மறுத்து பேசியதில்லை என்பதால் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் மௌனமாக சம்மதித்தேன்...

கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டில் நுழைந்ததுமே திகைத்துப்போய்விட்டேன்..

சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், நரம்பு தளர்ச்சியால் கை கால் பாதித்த மாமியார்,மூளை வளர்ச்சி குறைந்த 25 வயது நாத்தனார்!..

கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று!.

பாழுங்கிணற்றில் வந்து விழுந்து விட்டேனே என்று மனசுக்குள் கதறினேன்!..

ஏனோதானோனு வீட்டு வேலைகள் செய்யறது, யார் எதை கேட்டாலும் எரிந்து விழறதுனு என்னை நானே ஒரு பழி வாங்குபவளாக மாற்றிக்கொண்டேன்!..

என் இவ்வளவு நடவடிக்கைகளுக்கு பிறகும் அந்த குடும்பம் என்னை தாங்கத்தான் செய்தது.

என் கணவர் என்மேல் வைத்த அன்பில் ஒரு குறையுமில்லை!..

நான் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் என்னை அன்போடு அரவணைத்து சென்றார் மாமியார்!..

புகுந்த வீட்டில் ஆறு மாசம், பொறந்த வீட்டில் ஆறுமாசம்னு என் வாழ்க்கை போயிட்டிருந்தது!...

ஒருநாள் என் வீட்டுக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பும் போது

என் மாமியார் "நீ உன் அம்மா வீட்டில எவ்வளவு நாள் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறியோ அவ்வளவு நாள் சந்தோஷமா இருந்திட்டு வா!

ஆனா! உன் வருகைக்காக இங்கே ஒரு குடும்பம் காத்திட்டிருக்கும் என்கிறதை எப்போதும் மறந்து விடாதே!"

அப்படின்னு சொன்னதுதான் தாமதம்

முன்னோக்கி நகர்ந்த என் கால்கள் சடாரென்று பின்னோக்கி நகர்ந்தது!

கைகள் பெட்டி படுக்கையை பட்டென்று கீழே உதறின!..

ஏதென்று புரியாமல் பார்த்த என் மாமியாரை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கதறினேன்!..

என் தலையை வருடி முன் நெற்றியில்

ஆதரவாய் முத்தமிட்டார் என் மாமியார்!..

எப்பேர்பட்ட குடும்பத்தை என் நடவடிக்கைகளால் கொத்தி குதறிபுட்டேன்!.

இதற்கு பரிகாரமாக நான் என்ன செய்வேன்! ஆண்டவனே என்னை மன்னித்து விடு!..

இப்போது என் பார்வையில் மாமியார் அம்மாவாக தெரிந்தார்

மாமனார் அப்பாவாக தெரிந்தார்

நாத்தனார் உடன்பிறப்பாக தெரிந்தாள்..

ஒரு நிமிடம்கூட என்னிடம் கடிந்திடாத என் கணவர் தெய்வமாக தெரிந்தார்!

இப்போது என் புகுந்த வீடு ஒரு கோயிலாக தெரிந்தது!...

ஒரு பெண் நினைத்தால்

குடிசையும் கோபுரம் ஆகும்

கோபுரமும் குடிசையாகும்..

எல்லாம் அவள் கையில் தான் இருக்கிறது........

Saturday, September 13, 2025

பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் ...?
இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்…
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...?
நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...!
இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி...
விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,
அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது.
படித்த அவன் அதிர்ந்து போனான் அதில்
அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை. நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.
இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?
ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.
அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...!
நான் போகிறேன்...?
அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை 'மனதிற்குள் சொல்லி'... சொல்லி...
'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...!
நண்பா...!
இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும்.
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!.
பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.
நான் படித்து நெகிழ்ந்த ஒரு கதை...
தாயை நேசிக்கும் சேய்களின் கண்ணீரில் இருக்கிறது ஈரம் ,,,,,
தாய்க்கு என்றுமே சேய்கள் இல்லை பாரம் ---

Thursday, September 11, 2025

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி !

 

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.

பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.

மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.

உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.

அதற்குத் திறமை வேண்டும்.

நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.

நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.

நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.

இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது.

அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.

அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.

அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.

கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.

சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.

வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன?

பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

கடவுள் நம்பிக்கை !

  கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும் போது பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்... !அருகிலுள்...