ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.
‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.
சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.
சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.
‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’
‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’
‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’
‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.
‘‘வேறே எப்படி வாங்கறது?’’
‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’
‘‘என்ன சொல்றே நீ?’’
‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.
‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’
‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’
பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’
‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.
‘‘என்ன உத்தரவு?’’
‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.
‘‘அப்புறம்?’’
‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.
ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.
#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்