புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு
முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு
அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால்
மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின்
கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன்
வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப்
பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க
வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள்,
சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும்.
இதுதான் தேர்வு"
என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால்
எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப்
படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப்
பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே
இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர்,
அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர்
தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு"
என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம்
காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்