சந்திரன் மிக வேகமாகவே நடந்து கொண்டிருந்தான். அவனது கையைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்த சிறுவன் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடியபடியே உடன் வந்து கொண்டிருந்தான். சந்திரனின் ஒரு கை பேப்பர் கவரை பிடித்திருக்க அவனது மறுகையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தபடியே வருகிறான் சிறுவன்.
“என்ன பசிக்குதா..?” என்று சிறுவனை பார்த்து கேட்கிறான் சந்திரன். வாய் திறக்காமல் தலையை அசைத்து ‘ஆமாம்’ என்கிறான் சிறுவன். “பக்கத்துலதான் வீடு.. போனவுடனேயே சாப்பிடலாம்.. என்ன..?” என்று கேட்க சிறுவன் சரி என்று தலையசைக்கிறான்.
யாருமற்ற அந்த தெருவில் கதவுகளெல்லாம் சாத்தப்பட்டிருக்க தனது வீட்டின் வாசலுக்கு வந்து கதவைத் தட்டுகிறான் சந்திரன். பையன் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். கதவு திறந்த வேகத்தில் வார்த்தைகளும் வேகமாக பறந்து வருகின்றன சந்திரனை நோக்கி.
“ஐயா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரமா..?” என்கிறாள் துளசி.. பையனை இழுத்தபடியே பதில் சொல்லாமல் வீட்டுக்குள் நுழைகிறான் சந்திரன். அப்போதுதான் சிறுவனை பார்க்கும் துளசி, “இது யாரு..?” என்று கேட்க.. அதற்குள் வீட்டுக்குள்ளேயே வந்து நிற்கும் சந்திரன், “யாருன்னு தெரியலை. பார்க்ல உக்காந்திருந்தேன்.
கிளம்பும்போது வாசல்ல நின்னு அழுதுகிட்டிருந்தான். பாவம்.. யாருமில்லையாம்.. அவங்க மாமா ஊருக்கு போறானாம்.. காசில்லைன்னான்..” துளசியின் குரலைக் கேட்ட சிறுவன் பயந்து போய் சந்திரனின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.
சொல்லி முடிப்பதற்குள், “அதுக்கு.. அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தர்றதா..?” என்கிறாள் துளசி. “இல்ல துளசி.. ராத்திரியாயிருச்சு. பஸ் இருக்காது.. விடிஞ்சதும் அனுப்பி வைச்சிரலாம்…” என்றபடியே தனது கையில் இருந்த பேப்பர் கட்டை அவளிடம் கொடுக்கிறான் சந்திரன்.
“இதென்ன சத்திரமா..?” பேப்பர் கட்டில் இருந்த கீரையை வாங்கிக் கொண்டே துளசி கோபப்பட..
சந்திரன் பதில் சொல்லாமல் சிறுவனை பார்க்க சிறுவன் அண்ணாந்து பார்த்தவனின் முகத்தில் அர்த்தம் புரியாத கவலை. வெளியில் அனுப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் சிறுவன் நோக்க.. “மொதல்ல அவனை கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று கத்துகிறாள் துளசி. “இல்ல.. ஒரு ராத்திரிதான.. இங்கயே தங்கட்டுமே.. காலைல அனுப்பி வைச்சிரலாம்..” சந்திரன் பையனின் தலையை ஆறுதலாகத் தடவியபடியே சொல்ல..
“னக்குப் பிடிக்கலீங்க.. ராத்திரி தங்கிட்டு காலைல போறதுக்கு இதொண்ணும் மடமில்லை…. கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று ஹாலில் அவர்களை மறித்து நின்று கொண்டு துளசி சொல்ல.. சந்திரன் ‘பாவம்மா..’ என்று கண்களாலேயே கெஞ்சுகிறான்.
“முடியாது.. நான் விடமாட்டேன்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா உள்ள வாங்க.. ஏதோ பார்க்ல பார்த்தாராம்.. கூட்டிட்டு வந்தாராம்.. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..? இதென்ன விளையாட்டா..?” என்று கேட்டு டைனிங் டேபிளில் பேப்பர் கட்டை பொத்தென்று போட்டுவிட்டு சேரில் அமர்கிறாள்.
“அதை அப்புறமா பேசிக்கலாம்.. பையன் ரொம்ப பசியா இருக்கான்.. மொதல்ல அவனுக்கு கொஞ்சம் சோறு போடும்மா..” சந்திரன் சொல்லி முடிப்பதற்குள் துளசி வெடிக்கிறாள். “நான் என்ன வைச்ச வேலைக்காரியா..? வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆக்கிக் கொட்டணும்னு எனக்கென்ன தலையெழுத்தா..?” என்கிறாள் ஆக்ரோஷமாக..
சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது. இனியும் துளசியிடம் பேசினால் எட்டு வீடு கேட்கும் அளவுக்குத் தனது குரலை நிச்சயம் உயர்த்துவாள். நாளை காலையில் அக்கம்பக்கம் வீட்டினர் தன்னை பார்த்து சிரிப்பார்கள் என்பது புரிந்தது.. வழக்கம்போலத்தான் இது என்றாலும், அந்தச் சிறுவனை பார்க்க பரிதாபமாக இருந்தது அவனுக்கு. வெளியில் போ என்று சொல்ல வாய் வர மறுக்கிறது..
சந்திரனின் தயக்கத்தைக் கண்ட துளசி.. “டேய் யார்ரா நீ..? உன் பேரென்ன..?” என்று கேட்க பையன் அவள் முகத்தைக் கூட பார்க்க பயந்து சந்திரனுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள.. “அவன் பேர் என்ன..?” என்கிறாள் சந்திரனிடம்.
சந்திரன் உண்மையாகவே “தெரியலம்மா..” என்று சொல்ல.. “ஐயோ..” என்று சொல்லித் தன் வாயைப் பொத்திக் கொள்கிறாள் துளசி. “பேரே தெரியலை.. வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றீங்களா..? ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா..? யார், என்னன்னு கேக்க வேண்டாம்..? அப்படியே கூட்டிட்டு வந்தர்றதா..? நீங்கள்லாம் ஒரு ஆம்பளை.. ச்சே..” என்று வெறுப்பை கண்களிலேயே உமிழ்ந்த துளசியை ஏறெடுத்துப் பார்க்க பயந்து போய் சந்திரன் வேறு பக்கம் பார்த்தபடியே, “சரி.. கத்தாத.. இப்ப சோறு போடு. விடிஞ்சதும் முதல் வேலையா நானே பஸ்ஸ்டாண்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தர்றேன்..” என்கிறான்.
“இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா நீங்க உள்ள போங்க. இல்லேன்னா நீங்களும் சேர்ந்து வெளிய போயிருங்க..” என்று தீர்மானமாகச் சொல்கிறாள். சந்திரன் சிறுவனை பார்க்க சிறுவன் தன் கண்களில் உதிர்த்த சொட்டுக் கண்ணீருடன் சந்திரனை பார்க்கிறான்.
பட்டென்று எழுந்த துளசி, “ஊர் உலகத்துல எல்லா வீட்லேயும் ஆம்பளைங்க என்ன லட்சணத்துல இருக்காங்கன்னு நாலு வீட்டுக்கு போய் பார்த்தா தெரியும்.. இங்கதான் வீடு, வீடு விட்டா ஆபீஸ்ன்னு ஒரு சவம் மாதிரி போயிட்டிருக்கு.. எங்க தெரியப் போகுது..?” என்று சொல்லிக் கொண்டே பேப்பரில் சுருட்டியிருந்த கீரையைப் பிரித்து தனியே எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைகிறாள் துளசி.
சட்டென்று வெளியே எட்டிப் பார்க்கும் துளசி, “என்ன இன்னும் நின்னுக்கிட்டிருக்கீங்க.. மொதல்ல அவனை துரத்தி விடுங்க. ஏன் இப்படி என்னை அர்த்த ராத்திரில கத்த வைக்குறீங்க..?” என்கிறாள்.
மீண்டும் சமையலறையின் உட்பக்கம் திரும்பிக் கொண்ட துளசி “எவனையோ கூட்டிட்டு வந்து தங்க வைக்கணுமாம்.. அவன் யாரு, என்ன, எப்படின்னு தெரியலை.. விடிஞ்சு பார்த்தா வீட்ல என்னென்ன இருக்கோ இல்லையோ.. எதை எதை லவட்டிக்கிட்டு போகப் போறானோ.. யாருக்குத் தெரியும்..? ஆம்பளைன்னா இதையெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாம்.. செய்புத்திதான் இல்லை…. சொல்புத்தியையாவது கேட்டுத் தொலையலாம்ல.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருங்க..” என்றபடியே கீரைக்கட்டுக்களைப் பிரித்து பாத்திரத்தில் போடத் துவங்க..
வெளியில் தனது முகத்தைப் ஏக்கத்துடன் பார்த்தபடியே நிற்கும் சிறுவனை பரிதாபமாக பார்க்கிறான் சந்திரன். இனியும் நின்றால் இவளிடம் பேச்சுவாங்கியே விடிந்துவிடும்.. வேறு வழியில்லை.. என்று நினைத்த சந்திரன் மெதுவாக பையனின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வருகிறான்.
பையன் சொல்ல முடியாத சோகத்தை முகத்தில் எப்படி காட்டுவது என்பதுகூடத் தெரியாமல் மெளனமாக சந்திரனுடன் வெளியேறுகிறான். தெருவில் நாலைந்து நாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. பையனை தனியே அனுப்ப முடியாது என்பதால் தானே அவனை பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய்விட முடிவு செய்து நடக்கிறார்.
பையன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வர.. “மனுஷியா இவ.. ஏதோ ஒரு வேளை சோறு போட்டா எதுல குறைஞ்சு போயிருவாளாம்..? சின்னப் பையன்னு ஒரு இரக்கம் வேணாம்..” என்றெல்லாம் சந்திரனின் மனம் குமைந்தாலும் துளசியை எதிர்த்து பேசுவது அவனுடைய சுபாவம் இல்லாததால் அந்தக் கோபத்தை நடையில் காட்டுகிறான் சந்திரன்.
பஸ்ஸ்டாண்டில் பையனை நிறுத்திவிட்டு அவன் பாக்கெட்டில் நூறு ரூபாயை திணித்து வைத்து “எங்கயாவது போயி பொழைச்சுக்கப்பா..” என்று சொல்லி அவன் கன்னத்தை ஆசையாகத் தடவிக் கொடுக்க.. பையன் கண்களில் பொங்கி நின்ற கண்ணீருடன் பணம் இருந்த பாக்கெட்டைத் தொட்டபடியே நிற்க.. விருட்டென்று திரும்பிப் பார்க்காமல் வீடு நோக்கி நடக்கிறார் சந்திரன்.
ஒரு நொடியில் திரும்பிப் பார்த்தால்கூட தன் மனம் மாறிவிடுமோ என்கிற சந்தேகத்தில் மனதை கல்லாக்கிக் கொண்டு வெக்கு, வெக்கென்று வீடு நோக்கி நடக்கிறார். அந்தப் பையன் தன்னை பார்க்கிறானோ..? தன் பின்னால் வருகிறானோ என்றெல்லாம் திடீரென்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தவர் வந்தாலும் வரலாம் என்று நினைத்து ஓட்டமும், நடையுமாக செல்கிறார்.
வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க..
வீட்டு வாசலில் கையில் பேப்பருடன் துளசி நின்று கொண்டிருக்கிறாள். “பொண்டாட்டியா இவ.. சண்டாளி.. அகங்காரி.. ஆணவக்காரி.. பேய், பிசாசு.. கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டனான்றதைகூட வாசல்ல வந்து பாக்குறா பாரு..” என்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் குமைந்தபடியே அவளை நோக்கி வருகிறான் சந்திரன்.
துளசியே அவரை நோக்கி ஓடி வருகிறாள். “ஏங்க.. எங்க அந்த பையன்.. எங்க பையன்..?” என்று கேட்க அவளுடைய வாயில் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று எதிர்பார்த்திராத சந்திரன் திகைக்கிறான்.
அவரை உலுக்கிய துளசி, “எங்கங்க அந்த பையன்..?” என்று மீண்டும் கேட்க, “அதான்.. நீதான எங்கயாவது கொண்டு போய்விடச் சொன்ன..? பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டுட்டேன்..” என்று முறைத்தபடியே சொல்லி முடிப்பதற்குள், பதறுகிறாள் துளசி.
“போங்க.. போங்க.. போய் அந்தப் பையனை கூட்டிட்டு வாங்க..” என்கிறாள் பதட்டத்துடன்.. “எதுக்கு..? எதுக்கு..? நீதான அனுப்பச் சொன்ன..?” என்று சந்திரன் திடீர் அதிர்ச்சியோடு கேட்க.. “ஐயோ.. இத பாருங்க.. அந்தப் பையன் வீட்டை விட்டு ஓடி வந்துட்டானாம்..
அவனைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா பத்தாயிரம் ரூபாய் பரிசுன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்திருக்காரு.. போங்க.. போய் அவனை பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க.. நமக்குக் காசாவது வரும். போங்க…” என்று அவனைப் பிடித்து தள்ளிவிட..
பிரமை பிடித்தாற்போல் நிற்கிறான் சந்திரன்.
No comments:
Post a Comment