Total Pageviews

Tuesday, July 10, 2018

டிப்ஸ் !

 
 
பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது.
 
அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாமல் இழுத்து சொருகப்பட்ட டிரவுசர். டிரெஸ் மட்டுமில்லை அவனும் ஏக அழுக்காக இருந்தான். ஒழுகும் மூக்குச்சளி. பரட்டைத் தலை.
 
பவ்யமாக தண்ணீரை மொண்டு வைத்து விட்டு,
“என்ன வேணும்?” என்றான் பரசு.
 
“இட்லி ஒரு ப்ளேட் என்ன விலை?”
 
“பதினஞ்சு ரூபா”
 
பையன் பையிலிருந்த சில்லறைக் காசுகளை எண்ணிப் பார்த்தான். ‘ப்ச்’ என்று சொல்லிக் கொண்டு,
 
“தோசை?” என்றான்.
 
“அதுவும் பதினஞ்சு ரூபாதான்”
 
பையன் யோசனையில் ஆழ்ந்தான்.
 
“பூரி என்ன விலை?”
 
பரசுவுக்குப் பொறுமை போயிற்று.
 
“டேய், பிச்சைக்காரப் பயலே. மத்தவங்களை கவனிக்க வேண்டாம் நானு? உங்கிட்டே எவ்வளவு இருக்குன்னு சொல்லு.”
 
“பத்து ரூபாய்க்கு என்ன இருக்கு?”
 
“சரியா எண்ணிப் பாத்தியா? பத்து ரூபா இருக்கா? இல்லே எட்டு ரூபாதான் இருக்கா?”
 
பையன் பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினான்.
 
“இடியாப்பம் இருக்கு, தரவா?”
 
மறுபடி தலையாட்டல்.
 
வந்த இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டான்.
 
“பில்” என்றான்.
 
“ம்ம்க்கும்… அதுலே எல்லாம் குறைச்சல் இல்ல ஆட்டுரா பூசாரின்னானாம்.” என்று முணுமுணுத்தபடி பில்லைக் கொண்டு வைத்தான் பரசு.
 
பையன் பையிலிருந்த சில்லறை மொத்தத்தையும் எடுத்து வைத்து மூடினான். எழுந்து வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 
அவசரமாக சில்லறையை எண்ணிப் பார்த்த பரசு திடுக்கிட்டான்.
 
அதில் பதினைந்து ரூபாய் இருந்தது.
 
“டேய், இதுலே அஞ்சு ரூபா கூட இருக்குடா”
 
பையன் திரும்பிப் பார்த்தான்.
 
“அது உங்களுக்கு டிப்ஸ்ண்ணே”

No comments:

Post a Comment

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

  ஒ ரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம...