Total Pageviews

Tuesday, July 10, 2018

வேலைக்காரி !



நிர்வாக இயக்குனர் சேஷாத்ரியின் நடையிலேயே தோல்வி தெரிந்தது.

தாழ்ந்த நோக்கினன், தளர்ந்த நடையினன் என்கிற மாதிரி அறைக்குள் நுழைந்தார்.

அவரது அறையை பெருக்கிக் கொண்டிருந்த மஞ்சு,
“என்ன சாமி, வருத்தமா இருக்கீங்களா?” என்று கேட்டதும் அவர் ஆச்சரியப் பட்டார்.

“எப்படிம்மா தெரியும்?”

“என்ன சாமி, இது கூட தெரியாதா…. தினமும் நீங்க வர்றப்போ நிமிந்து பாத்துகிட்டு வேகமா வருவீங்களே”

“நிஜம்தான் மஞ்சு”

“என்ன ஆச்சு சாமி?”

சேஷாத்ரி ஒரு வினாடி யோசித்தார்.

“என்ன சாமி யோசிக்கறீங்க, இவ கிட்ட சொல்லி என்ன புண்ணியம்ன்னுதானே?”

படிப்பறிவே இல்லாவிட்டாலும் பண்பாலும், தெளிவாலும் அவளுக்குக் கிடைத்திருக்கிற இந்த மைன்ட் ரீடிங் திறமையை நினைத்து அவர் வியக்காத நாளே இல்லை.

“அதான் நிஜம் மஞ்சு, இது கொஞ்சம் பெரிய விஷயம்… உனக்குப் புரியாது”

“சாமி, விஷயம் பெருசாவே இருக்கட்டும், எனக்குப் புரியாமையே போகட்டும். அதைப் போட்டு உடைச்சிட்டீங்கன்னா நிம்மதியா அடுத்த வேலையை பார்ப்பீங்களே, அதனாலதான் கேட்டேன்”

இது மஞ்சுவுக்கு அவர் சொல்லித் தந்த பாடம்.

சில நாட்களில் குடிகாரக் கணவனையும், பொறுப்பில்லாத பிள்ளைகளையும் பற்றிய கவலையில் அவள் டல்லாக இருக்கிற போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்.

“இல்லம்மா, நம்ம கம்பெனி டயர் தயாரிக்கிற கம்பெனி. கடந்த ரெண்டு மாசமா வியாபாரம் குறைஞ்சு போச்சு. போட்டிக் கம்பெனி யாரும் வரல்லை. நம்ம கிட்டே வாங்கறவங்க யாரும் உற்பத்தியை குறைக்கவும் இல்லை. என்னய்யா ஆச்சுன்னு எல்லா மேனேஜரையும் கூப்பிட்டுக் கேட்டேன். யாருக்குமே பதில் தெரியலை. இப்படியே போனா எனக்கு வேலை போய்டும்.”

இதற்கு பதில் சொல்ல மஞ்சு ஒரு நிமிஷம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

“சாமி, இப்படித்தான் எங்க சூபர்வைசர் அருணாவைக் கூப்பிட்டு நீ மட்டும் மாசம் ரெண்டு விளக்குமாறு கேட்கிறே, மஞ்சுவைப் பார், வருஷம் ரெண்டுதான் கேட்கிறா உனக்கு பொறுப்பே இல்லைன்னு திட்டினாரு. அவ அழுதுகிட்டே என்கிட்டே வந்து சொன்னா. நான் சொன்னேன், அடி அசடே விளக்குமாறு எவ்வளவு செலவாகும்கிறது எப்படிப்பட்ட தரையை பெருக்கறோம்கிறதை பொறுத்தது. நீ பெருக்கறது எல்லாம் கரடு முரடான தரைன்னு சொல்லுடீன்னேன்”

சேஷாத்ரிக்கு சட்டென்று உறைத்தது.

அரசின் கோல்டன் குவாட்டலேட்டறல் திட்டத்தால் சாலைகள் சீரானதுதான் காரணம்! சட்டென்று எழுந்தார்.

“எங்க சாமி போறீங்க?”

“இல்லம்மா, உன்னை அறியாமையே ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்துட்டே. ரோடெல்லாம் நல்லா ஆயிடுச்சு. அதனாலதான் டயர் தேய்மானம் குறைஞ்சிரிக்கு. அதுக்கேத்த மாதிரி டயரோட தரத்தை குறைச்சிட்டா பழைய வியாபாரம் திரும்பிடும். அதை உற்பத்தி பண்றவங்க கிட்டே சொல்லத்தான் போறேன்”

“சாமி, ஒண்ணு சொன்னா கோபப் படக் கூடாது”

“என்னம்மா?”

“தரத்தை எப்பவுமே குறைக்கக் கூடாது. தரம் உயர்ந்தா வியாபாரம் ஜாஸ்திதான் ஆகும்”

“இல்லையேம்மா, இப்ப ரோடோட தரம் நம்ம வியாபாரத்தை குறைச்சிடுச்சே?”

“சாமி, தரை சரியில்லாததாலதான் விளக்குமாறு தேயுதுன்னு தெரிஞ்சதும் நீங்க என்ன பண்ணீங்க? தரையை சரி பண்ணீங்க. தரையை சரி பண்ணதும் என்ன ஆச்சு? அருணாவுக்கு வேலை சுளுவாச்சு. சூபர்வைசர் அவளுக்கு இன்னும் ரெண்டு ஷாப் அதிகமா குடுத்திட்டாரு”

“அதனாலே?”

“தரை நல்லா ஆனதும் அவளுக்கு நிறைய வேலை கொடுத்த மாதிரி, ரோடு நல்லா ஆனதும் வண்டிங்க வியாபாரமும் ஜாஸ்தி ஆகுமே? அப்ப நம்ம நிறைய டயர் விக்கலாமே? கொஞ்சம் பொறுமையா இருந்து பாருங்களேன்”

No comments:

Post a Comment

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

  ஒ ரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம...