Total Pageviews

Friday, July 27, 2018

மனிதர்களின் மனம் !



பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள்.

 அவரிடம், 'எனக்கு அது வேண்டும்; இது வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள். 

சலித்து போன கடவுள், எத்தனையோ இடம் மாறினார்.

ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது.

தேவர்களிடம் கருத்து கேட்டார்.

"இமயமலைக்கு சென்று விடுங்கள்..." என்றனர் சிலர்.

"அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவாரகளே" "நிலாவுக்கு செல்லுங்கள்" என்றனர் வேறு சிலர்.

"எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள்... ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்" என்றார் கடவுள்.

அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது.

"யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதர்களின் மனம் மட்டுமே" அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது. என்பது தான் அது.

"கடவுளை வெளியுலகில் மனிதன் தேட, கடவுளோ நெஞ்சினில் குடியிருக்கிறார்".

Tuesday, July 10, 2018

டிப்ஸ் !

 
 
பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது.
 
அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாமல் இழுத்து சொருகப்பட்ட டிரவுசர். டிரெஸ் மட்டுமில்லை அவனும் ஏக அழுக்காக இருந்தான். ஒழுகும் மூக்குச்சளி. பரட்டைத் தலை.
 
பவ்யமாக தண்ணீரை மொண்டு வைத்து விட்டு,
“என்ன வேணும்?” என்றான் பரசு.
 
“இட்லி ஒரு ப்ளேட் என்ன விலை?”
 
“பதினஞ்சு ரூபா”
 
பையன் பையிலிருந்த சில்லறைக் காசுகளை எண்ணிப் பார்த்தான். ‘ப்ச்’ என்று சொல்லிக் கொண்டு,
 
“தோசை?” என்றான்.
 
“அதுவும் பதினஞ்சு ரூபாதான்”
 
பையன் யோசனையில் ஆழ்ந்தான்.
 
“பூரி என்ன விலை?”
 
பரசுவுக்குப் பொறுமை போயிற்று.
 
“டேய், பிச்சைக்காரப் பயலே. மத்தவங்களை கவனிக்க வேண்டாம் நானு? உங்கிட்டே எவ்வளவு இருக்குன்னு சொல்லு.”
 
“பத்து ரூபாய்க்கு என்ன இருக்கு?”
 
“சரியா எண்ணிப் பாத்தியா? பத்து ரூபா இருக்கா? இல்லே எட்டு ரூபாதான் இருக்கா?”
 
பையன் பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினான்.
 
“இடியாப்பம் இருக்கு, தரவா?”
 
மறுபடி தலையாட்டல்.
 
வந்த இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டான்.
 
“பில்” என்றான்.
 
“ம்ம்க்கும்… அதுலே எல்லாம் குறைச்சல் இல்ல ஆட்டுரா பூசாரின்னானாம்.” என்று முணுமுணுத்தபடி பில்லைக் கொண்டு வைத்தான் பரசு.
 
பையன் பையிலிருந்த சில்லறை மொத்தத்தையும் எடுத்து வைத்து மூடினான். எழுந்து வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
 
அவசரமாக சில்லறையை எண்ணிப் பார்த்த பரசு திடுக்கிட்டான்.
 
அதில் பதினைந்து ரூபாய் இருந்தது.
 
“டேய், இதுலே அஞ்சு ரூபா கூட இருக்குடா”
 
பையன் திரும்பிப் பார்த்தான்.
 
“அது உங்களுக்கு டிப்ஸ்ண்ணே”

வேலைக்காரி !



நிர்வாக இயக்குனர் சேஷாத்ரியின் நடையிலேயே தோல்வி தெரிந்தது.

தாழ்ந்த நோக்கினன், தளர்ந்த நடையினன் என்கிற மாதிரி அறைக்குள் நுழைந்தார்.

அவரது அறையை பெருக்கிக் கொண்டிருந்த மஞ்சு,
“என்ன சாமி, வருத்தமா இருக்கீங்களா?” என்று கேட்டதும் அவர் ஆச்சரியப் பட்டார்.

“எப்படிம்மா தெரியும்?”

“என்ன சாமி, இது கூட தெரியாதா…. தினமும் நீங்க வர்றப்போ நிமிந்து பாத்துகிட்டு வேகமா வருவீங்களே”

“நிஜம்தான் மஞ்சு”

“என்ன ஆச்சு சாமி?”

சேஷாத்ரி ஒரு வினாடி யோசித்தார்.

“என்ன சாமி யோசிக்கறீங்க, இவ கிட்ட சொல்லி என்ன புண்ணியம்ன்னுதானே?”

படிப்பறிவே இல்லாவிட்டாலும் பண்பாலும், தெளிவாலும் அவளுக்குக் கிடைத்திருக்கிற இந்த மைன்ட் ரீடிங் திறமையை நினைத்து அவர் வியக்காத நாளே இல்லை.

“அதான் நிஜம் மஞ்சு, இது கொஞ்சம் பெரிய விஷயம்… உனக்குப் புரியாது”

“சாமி, விஷயம் பெருசாவே இருக்கட்டும், எனக்குப் புரியாமையே போகட்டும். அதைப் போட்டு உடைச்சிட்டீங்கன்னா நிம்மதியா அடுத்த வேலையை பார்ப்பீங்களே, அதனாலதான் கேட்டேன்”

இது மஞ்சுவுக்கு அவர் சொல்லித் தந்த பாடம்.

சில நாட்களில் குடிகாரக் கணவனையும், பொறுப்பில்லாத பிள்ளைகளையும் பற்றிய கவலையில் அவள் டல்லாக இருக்கிற போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்.

“இல்லம்மா, நம்ம கம்பெனி டயர் தயாரிக்கிற கம்பெனி. கடந்த ரெண்டு மாசமா வியாபாரம் குறைஞ்சு போச்சு. போட்டிக் கம்பெனி யாரும் வரல்லை. நம்ம கிட்டே வாங்கறவங்க யாரும் உற்பத்தியை குறைக்கவும் இல்லை. என்னய்யா ஆச்சுன்னு எல்லா மேனேஜரையும் கூப்பிட்டுக் கேட்டேன். யாருக்குமே பதில் தெரியலை. இப்படியே போனா எனக்கு வேலை போய்டும்.”

இதற்கு பதில் சொல்ல மஞ்சு ஒரு நிமிஷம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

“சாமி, இப்படித்தான் எங்க சூபர்வைசர் அருணாவைக் கூப்பிட்டு நீ மட்டும் மாசம் ரெண்டு விளக்குமாறு கேட்கிறே, மஞ்சுவைப் பார், வருஷம் ரெண்டுதான் கேட்கிறா உனக்கு பொறுப்பே இல்லைன்னு திட்டினாரு. அவ அழுதுகிட்டே என்கிட்டே வந்து சொன்னா. நான் சொன்னேன், அடி அசடே விளக்குமாறு எவ்வளவு செலவாகும்கிறது எப்படிப்பட்ட தரையை பெருக்கறோம்கிறதை பொறுத்தது. நீ பெருக்கறது எல்லாம் கரடு முரடான தரைன்னு சொல்லுடீன்னேன்”

சேஷாத்ரிக்கு சட்டென்று உறைத்தது.

அரசின் கோல்டன் குவாட்டலேட்டறல் திட்டத்தால் சாலைகள் சீரானதுதான் காரணம்! சட்டென்று எழுந்தார்.

“எங்க சாமி போறீங்க?”

“இல்லம்மா, உன்னை அறியாமையே ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்துட்டே. ரோடெல்லாம் நல்லா ஆயிடுச்சு. அதனாலதான் டயர் தேய்மானம் குறைஞ்சிரிக்கு. அதுக்கேத்த மாதிரி டயரோட தரத்தை குறைச்சிட்டா பழைய வியாபாரம் திரும்பிடும். அதை உற்பத்தி பண்றவங்க கிட்டே சொல்லத்தான் போறேன்”

“சாமி, ஒண்ணு சொன்னா கோபப் படக் கூடாது”

“என்னம்மா?”

“தரத்தை எப்பவுமே குறைக்கக் கூடாது. தரம் உயர்ந்தா வியாபாரம் ஜாஸ்திதான் ஆகும்”

“இல்லையேம்மா, இப்ப ரோடோட தரம் நம்ம வியாபாரத்தை குறைச்சிடுச்சே?”

“சாமி, தரை சரியில்லாததாலதான் விளக்குமாறு தேயுதுன்னு தெரிஞ்சதும் நீங்க என்ன பண்ணீங்க? தரையை சரி பண்ணீங்க. தரையை சரி பண்ணதும் என்ன ஆச்சு? அருணாவுக்கு வேலை சுளுவாச்சு. சூபர்வைசர் அவளுக்கு இன்னும் ரெண்டு ஷாப் அதிகமா குடுத்திட்டாரு”

“அதனாலே?”

“தரை நல்லா ஆனதும் அவளுக்கு நிறைய வேலை கொடுத்த மாதிரி, ரோடு நல்லா ஆனதும் வண்டிங்க வியாபாரமும் ஜாஸ்தி ஆகுமே? அப்ப நம்ம நிறைய டயர் விக்கலாமே? கொஞ்சம் பொறுமையா இருந்து பாருங்களேன்”

தானத்தில் சிறந்தவர் யார்?




பரமசிவனும், பார்வதியும் பொழுது போகாமல் பூலோகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாறுவேடத்தில் இருந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பூலோகத்தில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது சோதனைகள் வைத்து யார் சிறந்தவர் என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொள்வது சிவனுக்கும் பார்வதிக்கும் பிடித்த பொழுது போக்கு. அந்த ஊரிலும் அதே விளையாட்டை விளையாடத் தீர்மானித்தார்கள்.


வழியில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் “உங்க ஊர்லயே பெரிய வள்ளல் யாருப்பா?” என்று கேட்டார் சிவன்.


“அண்ணாமலை ஐயாதானுங்க” என்றார் அவர்.


இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இன்னொருவரை பார்வதி கேட்க, அவர்

“பெரியண்ணன்  ஐயாதானுங்கம்மா” என்றார்.


தொடர்ந்து கேட்டுக் கொண்டே போக மாற்றி மாற்றி இந்த இருவரின் பெயரையே எல்லாரும் சொன்னார்கள். யார்தான் சிறந்த வள்ளல் என்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். முதலில் அண்ணாமலை வீட்டுக்குப் போனார்கள். தாங்கள் ஒரு வண்டி நிறைய பணம் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஒரு மணி நேரத்துக்குள் மக்களுக்கு தானம் செய்து விட வேண்டும் என்றும் மிச்சமிருந்தால் அவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். அண்ணாமலை ஒப்புக் கொண்டார். சிவனும் பார்வதியும் தங்களை மறைத்துக் கொண்டு கவனித்தார்கள்.


அண்ணாமலை வருவோர் போவோருக்கெல்லாம் ஒவ்வொரு கட்டாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து ஏகப்பட்ட பணம் மிச்சமாகி விட்டது.


அடுத்ததாக பெரியண்ணன் வீட்டுக்குப் போய் ஆக்‌ஷன் ரீபிளே செய்தார்கள்.

பெரியண்ணன் வந்தவர்கள் எல்லாருக்கும் கைநிறைய கட்டுக் கட்டாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒரு மணி நேரம் கழித்து பத்துப் பதினைந்து கட்டுகள் மிச்சமிருந்தன.


பெரியண்ணன்தான் சிறந்த வள்ளல் என்று பரமசிவன் முடிவு செய்தார். இல்லை அண்ணாமலைதான் என்று பார்வதி சொன்னார். விவாதிக்க ஆரம்பித்தார்கள். தனக்கு நிறைய வேண்டும் என்றுதான் அண்ணாமலை ஒவ்வொன்றாகக் கொடுத்தார் என்பது சிவபெருமானின் வாதம். பார்வதி வாதிடவில்லை. ‘நாளைக்குச் சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னார்.


மறுநாள் இருவரும் நகர்வலம் போனார்கள்.


பெரியண்ணனிடம் பணம் வாங்கியவர்கள் எவ்வளவு செலவு செய்தும் இன்னும் பணம் மீதமிருக்க பணத்தைக் குடிப்பதிலும், விபச்சாரத்திலும் செலவு செய்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலையிடம் பணம் வாங்கியவர்கள் பணம் கொஞ்சமாக இருந்ததால் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தின்பண்டங்களும், உடைகளும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.


இதைச் சொல்லி விட்டு ”மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்ன?” என்று இல்லத்தரசியிடம் கேட்டேன்.

“எப்பவுமே பொண்டாட்டி சொல்றதுதான் சரியா இருக்கும். இதான் மாரல்” என்கிறார்!
 தானத்தில் சிறந்தவர் யார்?
 எதையும் சிந்தித்து நிதானமாக செய்பவரே!

பொறுப்பு !



திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.

“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான்.

இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம்.

ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். 

அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் !



எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'

"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.

"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள்.

மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.

மறுநாள் காலை...

"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.

முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள் அபியின் அம்மா.

"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'

"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.

"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக் கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி அம்மா.

சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல் எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம். அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்' என உறுதியளித்தார்.

கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால் புன்னகையுடன் வெளியே வந்தாள்.

- ச. தமிழ்மாறன்

வாழ்க்கை!






சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். 

பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில், சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க' என்றார் வக்கீல் செந்தில்நாயகம்!

எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்!

என்ன?

நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க! 

நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்க தான்! 

ஆனா நான் சாகணும்னு நினைக்க மாட்டாங்களே!  

நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன! 

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார்!  

நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது!

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...