Total Pageviews

Tuesday, December 20, 2011

அப்பாவின் ஆசை

இணைய தளத்தில் www.vaangapazhakalam.com என்ற வெப்சைட்டை உலவ விட்டான் மனோகர். 

மறுநாளே மலைபோல் வந்து குவிந்தன மின்ன்ஞ்சல்கள். நிறைய கடிதங்கள் ' பெண்களுடன் பழக ஆசை!' என்று வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமானான் மனோகர். 

ஒரு பெண் பெயரில் மின்ன்ஞ்சல் முகவரி உருவாக்கி அதிலிருந்து பெண் எழுதுவதுபோல் ஒருவருக்கு பதில் அனுப்பினான் மனோகர். மறுநாளே உங்களைப்பார்க்க ஆசை, புகைப்படம் அனுப்பவும்' என்று கேட்டு பதில் வந்த்து. மனோகர் சிரித்தான். ' 

இந்த அப்பாவியை கீழ்ப்பாக்கம் அனுப்புவது என்று முடிவு செய்து, வெனிசுலா நாட்டு நடிகையின் புகைப்பட்த்தை வைத்து " நீங்களும் இதுபோல் புகைப்படம் அனுப்பி வைக்கவும்" என்று பதில் அனுப்பினான். எதிர்பார்த்த்துபோல் பதிலும் புகைப்படமும் இமெயிலில் வர யார் அந்த அப்பாவி என்று திறந்து பார்த்து அதிர்ந்தான். 

 அது அவனது அப்பாவின் புகைப்படம்.

ரொம்ப பிடிச்ச விஷயம்

சாயங்கால வேளையில் தனது தோழி அம்பிகாவைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றாள் அனு. பூட்டிய வீட்டுக்குள் அவளது கணவன் காட்டு கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார். அழைப்பு மணியை அடிப்பதா வேண்டாமா என தயங்கி பின்பு அடித்தாள். கதவை திறந்து வெளியே பார்த்த அவளது கணவர் '' வாங்க என்று அழைத்துவிட்டு வெளியேறிப்போனார். அம்பிகாவின் முகத்தில் எந்த வித வருத்தமுமின்றி இயல்பாகவே இருந்தாள். ''என்னடி உன் புருஷன் இந்த திட்டு திட்டுறாரு கேட்டுகிட்டு சும்மா நிக்கற!'' அனு ஆதங்கத்துடன் கேட்டாள். `` எப்பவுமே அவர் சட்டப்பாட்கெட்டுலயிருந்து செலவுக்கு பணத்த எடுத்துட்டு சொல்லிடுவேன், இண்ணைக்கு சொல்ல மறந்துட்டேன், பாவம் அவர் பாக்கெட்டுல பணமிருக்குன்னு நெனச்சு பிரண்ட்ஸ்சோட ஹோட்டலுக்கு போய் ஏமார்ந்துட்டாராம்!'' தனது கணவரைப்பற்றி ஆதரவாகப்பேசிய அவளை ஆச்சரியமாகப்பார்த்தாள். `` அதுக்காக இப்பிடியா கண்டபடி திட்டுறது, உனக்கு வருத்தமே இல்லையா? '' நான் எதுக்கு வருத்தப்படணூம், அவர்தான் ரொம்ப வருத்தப்படுவாரு, என்ன அதிகமா திட்டியிட்டேன்னு வர்றப்போ மல்லிகைப்பூவோட வந்து என்ன சமாதானப்படுத்துவார், எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அதுதான் என்றபோது அனு அசந்துபோனாள்

சிலிர்ப்பு

ரம்யாவின் திருமணத்திற்க்கு முந்தின நாள் இன்னொரு தோழி சொன்ன தகவலைக் கேட்டு திருமணத்திற்க்கு போக வேண்டாமென முடிவெடுத்தாள் மேகலா. `ஏன் போகல' அப்பா கேட்டார்.

 ரம்யாவ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை முதல்ல நம்ம வீட்டுக்கு வந்து என்னத்தான் பொண்ணு பார்த்துட்டு போனார். நகை ரொக்கம் ரொம்ப குறைச்சலா இருக்குன்னு அவங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டாங்க, ரெண்டு நாள் கழிச்சு மாப்பிள்ளை என்ன சந்திச்சு பெத்தவங்க பேச்ச மீற முடியல, என்ன மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டுப்போனார். 

நாளைக்கு ரம்யா கல்யானத்துக்குப்போயி வாழ்த்துறப்போ மாப்பிள்ளை என்னை பார்த்துட்டாருன்னா ஒரு குற்ற உணர்வு வரலாம், சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு சங்கடம்' என்ற அவளது பதிலில் சிலிர்த்தார் அப்பா.

Monday, December 19, 2011

மிரட்டல்

ஏரியா மேனேஜர் வேலை எனக்கு சரிப்பட்டுவராது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது நாற்பத்திரண்டை நெருங்கியிருந்தது. பஸ்ஸில் இரவு நெடுந்தூரம் பயணம் செய்யும்போது குறைந்தது இரண்டு முறையாவது டிரைவர் அருகில் சென்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி சிறுநீர் கழிக்கச் சென்றுவிடுவேன் . சர்க்கரை வியாதி இருக்கிறது 

தினமும் காலையில ஒருமணி நேரம் நடக்கணும் என்று டாக்டர் சொன்னபோது முயற்சி செய்வதாய் சொல்லிவிட்டு கிளம்பி வந்தேன். சோடா புட்டியின் மூடியை திறந்ததும் வரும் கேஸ் போல ஆரம்பத்தில் சில நாள் நடக்கச்சென்றேன், பிறகு அதையும் நிறுத்திக்கொண்டேன். 

’’மாதத்தில் பதினைந்து நாட்கள் டூர் சென்று ஆர்டர் சேகரிக்க உங்களால் முடியாது பேசாமல் தலைமை அலுவலகம் வந்து விடுங்கள், கிளை அலுவலகங்களிலிருந்து சேல்ஸ், அவுட்ஸ்டேண்டிங், ஸ்டாக் தகவல் வாங்கி எனக்கு ரிப்போர்ட் தந்தால் போதும்!’’ என்று ஜி.எம் ஷானிஷ் சொன்ன போது எனக்கு அது நல்ல விஷயமாகவேபட, தலைமையகம் இருக்கும் மும்பைக்குச்சென்றேன் . கிட்டத்தட்ட ஷானிஷ்சின் தனி செக்ரட்டரி போலவே நடந்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டேன். அவரது இ.மெயில் ஐ.டியும் பாஸ்வேர்டும் என்னிடம் தரும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது.. அவருக்கு வரும் மெயில்களைப் படித்து நானே அவரது பெயரில் பதில் எழுதிவிட்டு அதை அவருக்கு தெரிவிப்பேன். 

ஷானிஷ்சின் பிறந்த நாளை அவரது பாஸ்போர்ட்டில் பார்த்து தெரிந்த போது நானே அசந்து போனேன். இன்றைய நாளில் நாற்பத்திஐந்து வயது கடந்தவர் அவர். ஆனால் என்னைவிட பத்து வயது குறைந்தவராகவே எனக்குத்தெரிந்தார். சிவந்த அவரது இதழோரம் தெரிந்த கறுப்பு மச்சம் பார்க்க என்க்கே ஒரு மாதிரியாக இருக்கும் இதில் பெண்களைப்பற்றி சொல்லத்தேவை இல்லை. எல்லாப் பெண்களுக்கும் ஏன் அவர் மீது ஒரு கள்ளப்பார்வை என்று எனக்கே சில நேரங்களில் பொறாமை வந்ததுண்டு. மனுஷர் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் போவது அவரது பதவிக்கு பெருமை சேர்த்திருந்தது, 

ஆனால் சம்பந்தமே இல்லாமல் புரோடக்சன் துறையில் புதிதாய் சேர்ந்த பார்வதி உன்னிக்கிருஷ்ணனிடம் எப்படி விழுந்தார் என்ற ஆச்சரியம் என்னை விட்டு விலக வெகுநாள் ஆனது. ஒருநாள் அவரது இ.மெயில் ஐ.டி யிலிருந்து காதல் வயப்பட்ட கடிதம் ஒன்றை அழகாய் தீட்டி, பார்வதி உன்னிக்கிருஷ்ணனுக்கு அனுப்பியிருந்தார். அவரது இ.மெயில் ஐடி யின் பாஸ்வேர்ட் எனக்கு தெரியும் என்பதை மறந்து அப்படியே விட்டுவிட்டார். அன்று எதோச்சையாக நான் மெயில் ஐ.டியை செக் செய்துவிட்டு அலுவலக விஷயமாக அனுப்பிய வேறு ஒரு மெயிலின் தேதியை தெரிந்து கொள்ள சென்ட் பகுதிக்குச் சென்றபோது ஷானிஷ் எழுதிய கடிதம் என் பார்வையில் பட்டது. அந்த கடிதத்தில் இருவரும் ஏற்கனவே சந்தித்த விஷயங்கள், வரும் நாட்களில் எங்கு எந்த ஹோட்டலில் சந்திப்பது போன்ற விபரங்கள் முழுவதும் அதில் பதிவாகி இருந்தது. கடிதத்தை படித்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த பூனையும் பால்குடிக்குமா, அமைதியாக இருக்கும் பூனை தான் பானையை உருட்டும் என்றெல்லாம் எனக்குள் சிந்தனைகள் சிதறிக்கொண்டிருந்தது.

 ஏதோ ஒருவகையில் எனக்கு வேலை விஷயமாக ஏதாவது ஆபத்து வந்தால் இந்த கடிதத்தை காட்டி மிரட்டலாம் என்ற அல்ப ஆசையுடன் அந்த கடிதத்தை தனியாக காப்பி செய்து எனது தனி மெயிலில் பத்திரப்படுத்திக்கொண்டேன். எனக்கு பாஸ்வேர்டு தெரியும் என்ற விபரம் ஷானிஷ்க்கு எப்பொழுது நினைவு வந்ததோ தெரியவில்லை அந்த கடிதத்தை நான் பார்த்திருப்பேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் அதை அழித்துவிட்டு என்னிடம் அதை காட்டிக்கொள்ளாதது போல் நடித்தார். நானும் அவரைபோலவே நடித்தேன். இரண்டு வாரம் கழிந்து அலுவலகத்தில் என்னை கடந்து போன பார்வதி உன்னிக்கிருஷ்ணனை முகத்துக்கு நேராகப் பார்த்தேன். என்வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும் அவளைப்பற்றியும் அவள் குடும்பத்தைப்பற்றியும் ரிசப்சன் மேடத்திடம் அக்கறையாய் விசாரித்தேன். பிரச்சனை அங்கிருந்துதான் உதயமாகி இருக்கவேண்டும் ரிசப்சன் மேடமும் பார்வதி உன்னிக்கிருஷ்ணனும் ஒரு மதிய உணவு இடைவேளையில் நான் அவளைப்பற்றி விசாரித்த விஷயத்தை பரிமாறிக்கொள்ள, அதை ஷானிஷ்சிடம் அவள் சொல்லியிருக்கவேண்டும். மறுநாள் காலையில் அவரது முகம் உம்மென்றிருந்தது. இவன் அந்த கடிதத்தை நிச்சயம் படித்திருப்பான் என்று உறுதியாய் நம்பி என்னை வேலையிலிருந்து எப்படி தூக்குவது என்று காரணம் தேடிக்கொண்டிருந்தார். 

அமெரிக்காவில் லேமன் பிரதேர்ஸ் வங்கி திவாலாகி பலரும் வேலை வாய்ப்பிழந்து வெளியேறிக்கொண்டிருந்த நேரம், பொருளாதார சறுக்கல், விற்பனை குறைவு அதனால் ஆட்கள் குறைக்கிறோம் ஒரு மாதம் சம்பளம் வாங்கிவிட்டு நின்று விடுங்கள் என்று என் கண்கள் பார்த்துச் சொன்னபோது அதன் உள்குத்து புரிந்தது. வேறு வேலை தேடிக்கொள்ள குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் அதுவரையிலான சம்பளத்தை தந்தால்தான் என் ராஜினாமா கடிதத்தை தருவது என்று நான் பிடிவாதம் பிடித்தேன். மறுநாள் காலையில் வழக்கம் போல் அலுவலகம் சென்ற போது செக்யூரிட்டி என்னை உள்ளே விடாமல் தடுத்தான். என்னை உள்ளே விடக்கூடாது என்று கடிதம் தயாரித்து அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்ததைப்பார்த்த போது எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. இத நான் சும்மா விடமாட்டேன் என்ற வைராக்கியத்தை மனதில் பூட்டி வைத்துவிட்டு, ராஜினாமா கடிதத்தை எழுதி தந்துவிட்டு ஒரு மாத ஊதியத்தையும் செட்டில்மென்ட் பணத்தையும் வாங்கிக்கொண்டு வேகமாய் வீடு திரும்பினேன். மூன்று மாத சம்பளத்தை தராவிட்டால் . அந்த கடிதத்தை ஷானிஷ்சின் மனைவியிடம் காட்டிவிடுவேன் என்று முதலில் மிரட்டல் கடிதம் தயாரிக்கவேண்டும். அந்த கடிதத்தைப்பார்த்ததும் அவர் அலறி அடித்துக்கொண்டு மூன்று மாத சம்பளத்தை எனது வங்கிக்கணக்கில் சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கை என்னோடு பயணமானது. 

ஷானிஷ்சுடன் நான் வேலை பார்த்த தினங்களில் ஒரிரு தினங்களில் அவரது வீட்டு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். எனது மிரட்டல் மெயிலுக்கு ஷானிஷ் பதில் தராமல் போனால் அந்த நம்பரில் தொடர்பு கொண்டு அவரது மனைவியிடம் ஷானிஷ்சின் வண்டவாளங்களைச்சொல்லி அவரது மனைவிக்கு டார்ச்சர் தர வேண்டும் என தீர்மானித்திருந்தேன். பார்வதி உன்னிகிருஷ்ணனின் முழு விபரம் தெரியாது என்பதால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு வைத்தேன். இரவு மணி பத்தரை இருக்கும் என்னுடம் வேலை பார்த்த நண்பன் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது . எனது வேலை பறிபோன விபரம் கேட்கப்போகிறான் என்ற எண்ணத்தில் தொலைபேசியை எடுத்து ஹலோ சொன்னேன். ’’ என் மனைவிய ரெகுலர் செக்கப்புக்கு கூட்டிகிட்டு போனேன் டாக்டர் உடனே சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்துடணும் இல்லையின்னா ரெண்டு பேருக்கும் ஆபத்து ன்னு சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு , கொஞ்சம் ஆஸ்பத்திரி வரைக்கும் வ்ரமுடியுமா?’’ மிகவும் தாழ்ந்த குரலில் அழாத குறையாக என்னை கேட்டபோது சரி வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன் . பாவம் எனது நண்பர் குமார் அடுத்த வாரம் அவரது சொந்த ஊரான வேலூர் சென்று மனைவிக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு ஊரில் அவரது சகோதரர் மூலமாக உறவுக்காரர்களுக்கு அழைப்பிதழ் த்ந்திருந்திருந்தார். இன்னும் கொஞ்சநேரத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. இனி அழைப்பிதழ் தந்த வீடுகளில் விஷயத்தை சொல்லி வளைகாப்புக்கு வரவேண்டாம் எனச்சொல்ல வேண்டும் எத்தனை சிரமங்கள் என்று நினைத்தவாறே நண்பர் சொன்ன ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். முகத்தில் பதட்டமும் கண்கள் சிவந்தும் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த எனது நண்பன் குமாரைப்பார்த்து “ கவலைப்படாத ஒண்ணும் அகாது என்று ஆறுதல் சொன்னேன். நள்ளிரவு ஒரு மணிக்கு பெண் டாக்கர் வந்தார். நண்பரின் மனைவியை ஒருமுறை கூட ஸ்கேன் செய்து உறுதிபடுத்திவிட்டு ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த நள்ளிரவில் தனது தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடமையே கண் என்று கருதி தன்னந்தனியாக நள்ளிரவு காரோட்டிவந்த அந்த டாக்டரைப்பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது. எனது மகனையோ அல்லது மகளையோ டாக்டர் படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்ற ஆவல் அந்த டாக்டரைப் பார்த்த போது எனக்குள் எழுந்தது. இரண்டு மணிவாக்கில் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. 
 
குமாரின் முகத்தில் அப்பொழுதுதான் மகிழ்ச்சி படர்ந்தது. டாக்டர் வெளியே வந்து எனது நண்பரை அழைத்து “ உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு “ என்றபோது குமார் இன்னும் சந்தோசப்பட்டான். அவன் பெண்குழந்தையைத்தான் எதிர்பார்த்தானாம் என்ற போது நானும் மகிழ்ந்து போனேன். “ குழந்தை வெயிட் கம்மியா இருக்கு, உடனே இங்குபேட்டர்ல வைக்கணும் இந்த ஆஸ்பத்திரியுல அந்த வசதி இல்ல, குழந்தைய வேற ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு போகணும், இந்த ராத்திரி நேரத்துல ஆட்டோவில போக வேண்டாம் , என் காருல வந்துடுங்க “ டாக்டர் சொன்னபோது அவர்கள் மீதிருந்த மதிப்பு மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போனது. குழந்தையை இங்குபேட்டரில் வைத்துவிட்டு மீண்டும் குமாரின் மனைவி படுத்திருக்கும் ஆஸ்பத்திரிக்கு எங்களை கொண்டு வந்து விட்டுவிட்டு டாக்டர் வீடு திரும்பியபோது மணி நான்கை தாண்டியிருந்தது. டாக்டரின் கடமை உணர்வு பற்றி குமாரிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தேன். 

 ” அந்த டாக்டர் யார் தெரியுமா? ஜி.எம் ஷானிஷ் சாரோட மனைவி” என்றபோது ஒருகணம் நான் அதிர்ந்தேன். இந்த டாக்கரையா டார்ச்சர் செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன், இவர்களது நிம்மதியையா கெடுக்கப்பார்த்தேன் மனம் புயல் அடங்காத கடலாய் கொந்தளித்தது. 

இப்படியொரு எண்ணம் எனக்குள் எப்படி வந்தது என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். மொத்த திட்டத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு வேறு கம்பெனியில் வேலை தேடுவது என்று தீர்மானித்து இப்பொழுது தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். மனசு களங்கமில்லாமல் சலவைக்குப்போய் திரும்பியது போல் இருந்தது.

திவ்யா - காதல் பாசிகள்

சுதா வீட்டுக்கு ரமேஷ்சும் அவன் தாய் தந்தையரும் உறவினர்களும் காரில் வந்து இறங்க, மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று ஹாலில் அமர வைத்தார் சுதாவின் தந்தை ஆறுமுகம். " 

அடுத்த மாசம் பதினைந்தாம் தேதி நாள் நல்லாயிருக்கு, அண்ணைக்கு கல்யாணத்த வெச்சுடலாம்!" புரோகிதர் சொன்னபோது அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. " ஒரு நிமிஷம்!" மணப்பெண் சுதா குரல் கொடுத்த போது மொத்த கூட்டமும் அவளை திரும்பிப் பார்த்தது. " இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்ல!" பதட்டமான குரலில் சொன்னாள் சுதா.

 "என்ன விளையாடுறியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வரவழைச்சுட்டு இப்பிடியா பொறுப்பில்லாம பேசறது!" சுதாவின் தந்தை ஆறுமுகம் கோபத்தில் கொதித்தார். " என்னம்மா போன வாரம் உன்ன பொண்ணு பார்க்க வந்தப்போ மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதால தானே பெரியவங்க நாங்க பேசி முடிவு பண்ணி இண்ணைக்கு நிச்சயதார்த்தம் வைக்க தீர்மானிச்சோம், இப்போ திடீர்ன்னு என் மகன பிடிக்கலையின்னு சொன்னா அவன் மனசு என்ன பாடு படுமுன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?" ரமேஷின் தந்தை வேலுச்சாமி தனது மகனுக்காக பரிந்து பேசினார். 

 "அங்கிள், உங்க மகன் ரெண்டு வருஷமா ஒரு பொண்ண காதலிச்சுட்டு அவ வசதி வாய்ப்புல குறைஞ்சவன்னு தெரிஞ்சதும் அவள கைகழுவி விட்டுட்டு வந்திருக்காரே அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபட்டிருக்குமுன்னு உங்க மகன் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாரா?" சுதா தீர்க்கமான குரலில் சொல்ல. அனைவருக்கும் அது சுருக்கென்றிருந்தது. " சுதா நீ சொல்றது உண்மையா?" பதட்டக்குரலில் கேட்டார் வேலுச்சாமி. "ஆமா அங்கிள் அவ பேரு திவ்யா, பத்தாம் வகுப்பு வரைக்கும் என்கூட ஒண்ணா படிச்சவ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் எல்லா விபரமும் என்கிட்ட போன்ல சொன்னா, என்ன மன்னிச்சிடுங்க அங்கிள்!" சுதாவின் தலை குனிந்திருந்தாலும் அவள் குரல் உயர்ந்திருந்தது. " டேய், சுதா சொல்றதெல்லாம் உண்மையாடா?" ரமேஷை உலுக்கிக் கேட்டார் வேலுச்சாமி. அவன் பதிலெதுவும் பேசாமல் சிலையாய் நின்றான்.

 "டேய், உங்கம்மாவும் நானும் காதலிச்சு அப்பறம் பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணுனவங்க, எங்களுக்கு பிறந்த நீ காதலுக்கு துரோகம் பண்ணிகிட்டு எப்பிடிடா இன்னொரு பொண்ண கட்டிக்க ஆசப்படுவ!" தனது நம்பிக்கைகள் நொறுங்கிப்போக தலைகுனிந்தபடியே வெளியேறினார் வேலுச்சாமி " வண்டிய திவ்யா வீட்டுக்கு திருப்புப்பா, அந்த பொண்ணு தான் என் மருமக, ரமேஷ் நீ தாலி கட்டுறதா இருந்தா அவ கழுத்துல தான் கட்டணும், சம்மதமா?" ரமேஷ் தலையாட்டினான். தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்ற குற்ற உணர்வு அவனை புரட்டிப்போட்டது. கார் திவ்யா வீட்டு வாசல் முன்பு வந்து நின்றது. அனைவரும் திடுதிப்பென வீட்டுக்குள் நுழைய திவ்யாவும் அவள் குடும்பத்தாரும் ஆச்சரியமானார்கள்.

 "திவ்யா, நான் ரமேஷ்சோட அப்பா, எனக்கு உங்க காதல் விஷயமெல்லாம் தெரியாது, தெரிஞ்சிருந்தா என் மகனுக்கு உன்ன எப்பவோ கட்டி வெச்சிருப்பேன்!" வேலுச்சாமியின் வார்த்தைகள் திவ்யாவுக்க்கு ஆறுதலாக இருந்தது. " இருங்க, எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்!" திவ்யா சமையலறைக்குள் நுழைந்து பம்பரமாய் சுழன்று காபி போட்டு எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறினாள். "என்ன மன்னிச்சுடு திவ்யா அண்ணைக்கு நான் என்ன மறந்துடுன்னு உன்கிட்டச் சொன்னேன், அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ நான் புரிஞ்சுகிட்டேன். இனிமே நீ தான் என் மனைவி, உன்னத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!" ரமேஷ் தனது தவறை உணர்ந்தபடியே சொன்னான். " ரமேஷ், நீங்க மனசு மாறுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். 

வாழ்க்கையுல காதல்ங்கறது ஒருத்தருக்கு ஒரு தடவ தான் வரும், அந்த காதல் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிடும். ஒரு தடவ மனச மாத்திகிட்டு மறுபடியும் காதல அழிச்சுட்டு எழுதறதுக்கு மனசு ஒண்ணும் சிலேட்டுப் பலகை இல்ல, நீ என்ன மறந்துடுன்னு சொன்னப்பவே நான் உன்ன மறந்துட்டேன். இப்போ நீ திருந்தியிட்டதால மறுபடியும் என் மனசுல இடம் குடுத்துட்டா அது காதலையே களங்கப்படுத்தறமாதிரி ஆயிடும், உன்ன கட்டிக்க எனக்கு விருப்பம் இல்ல, நீங்க போலாம்!" திவ்யாவின் வார்த்தைகள் நெருப்பாய் வந்துவிழ தொங்கிய முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான் ரமேஷ். 

 " ஒரு பொண்ண காதலிச்சுட்டு அவள கைகழுவி விடுற ஆளுங்களுக்கு நீ எடுத்த முடிவுதாம்மா சரி, நாங்க வர்றோம்!" வேலுச்சாமி வேகமாய் வெளியேற அவருக்குப் பின்னால் அவரது உறவினர்களும் வெளியேறினார்கள். படித்துறைகளில் படிந்திருக்கும் நீர்பாசிகளை மீன்கள் வந்து கொத்தி தின்று அது சுத்தமாவதைப்போல் திவ்யாவின் மனதில் படிந்து கிடந்த காதல் பாசிகள் மறைந்து சுத்தமாக இருந்தது

நா நயம்















இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெலினாவிடம் பத்து ருயாய் நோட்டை கொடுத்து பக்கத்து கடைக்கு சென்று வாசிங் சோப்பும் ஷாம்புவும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ராதிகா.

 ``சரிம்மா!'' என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள் ஜெலினா. கடைக்காரரிடம் வாசிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ருபாய் நோட்டை நீட்டினாள். ``மொத்தம் ஒன்பது ரூபாய் ஆச்சு மீதி ஒரு ருபாய்க்கு சில்லரை இல்லை அதுக்கு ஒரு சாக்லெட்டு வாங்கிக்க!'' என்றார் கடைக்காரர். ``எனக்கு சாக்லெட் வேண்டாம், பாக்கி ஒரு ரூபா தான் வேணும்!'' அடம் பிடித்தாள் ஜெலினா. 

``ஏம்மா சாக்லெட் வேண்டாங்கறே, சாக்லெட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமுன்னு உன் அம்மா சொன்னாங்களா? ஆச்சர்யமாய் கேட்டார் கடைக்காரர். ``சாக்லெட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ உங்ககிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க, 

நான் தான் வேணுமுன்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கிட்டேன்னு என்ன தப்பா நினைப்பாங்க.!"" ஜெலினா சொல்லச்சொல்ல இந்த சின்ன வயதில் அவளுக்கிருக்கும் நாணயத்தை பாராட்டியபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ருபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்  

Posted by kumutham

புகழ்ச்சி

மாதவன் தனி வீடு கட்டிப்போனதிலிருந்து அவனது அப்பாவை அவனது இளைய தம்பி மதுரவன் பார்த்துக் கொண்டான். மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் மாதவன் மாதமொருமுறை வீடு திரும்பும்போதெல்லாம் அவனது அப்பா அவனது வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புறப்படுவார். 

 மாதவனின் தந்தை வரும்போதெல்லாம் மதுரவனைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார். தனது தம்பி அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறான் என்பதைக்கேட்க கேட்க மாதவனுக்கு சந்தோஷமாக இருக்கும். 

அவர் திரும்பிப்போனதும் மாதவனின் மனைவி கேட்டாள். `` ஏங்க, மாசம்தோறும் உங்கப்பா வரும்போதெல்லாம் அவர் செலவுக்கு காசு தர்றீங்க, பணம் தர்ற உங்களப்பத்தி ஒரு வார்த்த சொல்லம எப்பப்பாத்தாலும் உங்க தம்பியப் பத்தியே உயர்வா பேசறாரு, இது நல்லாவா இருக்கு!’’ 

மாதவனின் மனைவி மனசு நொந்தபடியே கேட்டாள். `` நான் காசு குடுக்கிறது வாஸ்தவம் தான், ஆனா எல்லாநாளும் அப்பா யார்கூட தங்கறாரு என் தம்பிகூடத்தானே, அவனப்ப்ற்றி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாரு!’’ 

அவனது ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி. `` என்னங்க, மாமா உங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாரு இனிமே உங்க அண்ணனப்பற்றித்தான் புகழ்ந்து பேசிகிட்டே இருப்பாரு, அவரு நம்ம கூடத்தானே தங்கறாரு, எப்பவாவது நம்மளப்பத்தி உயர்வா பேசறாரா?’’ 

மதுரவனின் மனைவியும் மனசு நொந்தபடியே கேட்டாள். `` அண்னன் மாசந்தோறும் காசு குடுக்கிறாரு நாம வெறும் சோத்தத்தானே போடறோம், காசு குடுக்கிற அண்ணனப்பத்தி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாங்க!’’ மதுரவனின் ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி. 

குங்குமம் 26-06-2011

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...