Total Pageviews

Tuesday, December 20, 2011

என் புருஷன் பரவாயில்ல

நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம் தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு,

 வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு" தனது தோழி மாலதியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ரேவதி. மாலதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"உன் புருஷனால உனக்கு நிம்மதி அத நெனச்சி சந்தோஷப்படு" என்று சொன்ன மாலதியை வெறுப்புடன் பார்த்தாள் ரேவதி. "உனக்கொரு விஷயம் தெரியுமா, பார்வதியோட புருஷன் தினமும் போன் பண்ணுறது அவள திட்டுறதுக்குக்தான், அவர் ஒரு சந்தேகப்பேர்வழி, அடிக்கடி போன் பண்ணி பார்வதி வீட்டுல இருக்காளா இல்ல ஊர் சுற்ற போனாளாண்ணு பார்கிறதுக்குத்தான் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பாராம்"

மாலதியின் பேச்சை கேட்டு "என் புருஷன் பரவாயில்ல "என்று தனக்குத்தானே பெருமை பட்டுக்கொண்டாள் ரேவதி.

நன்றி :பாக்யா

சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு

சூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி " வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்" என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.

 "இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு " என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன். 

 "என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்." 

நொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன்.

 தூரத்தில் "எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

பாக்யா

சந்தேகம்

தனக்கு வரும் வரன்களையெல்லாம் வீட்டில் அம்மா வேண்டாமென்று ஒதுக்கி விடும்போதெல்லாம் சரஸ்வதிக்கு ஒரு வித கவலை வந்து ஒட்டிக்கொண்டது. 

 எனது சம்பாத்யம் அம்மாவுக்கு தேவை அதனால் மறுக்கிறார்களா என்ற சந்தேகம் மெல்ல எழுந்தது. அதை உறுதி செய்வது என தீர்மானித்தாள். '' 

அம்மா ஆபீஸ்சுல என்கூட வேலை பார்க்குற ஒருத்தர விரும்பறேன் அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கிறேன்!" 

அம்மாவின் மனநிலையை புரிந்துகொள்ள அசாத்யமாய் ஒரு பொய்யைச் சொன்னாள் சரஸ்வதி. " கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்சியா இருக்கு, உன் ஜாதகத்துல காதல் கல்யாணம் தான் கைகூடுமுன்னு எழுதியிருக்கு அதனாலதான் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமுன்னு திருப்பி அனுப்பியிட்டேன்!'' 

மகிழ்ச்சி பொங்க சொன்ன தனது அம்மாவை அனியாயமாக சந்தேகப்பட்டுவிட்டோமே என்று கவலை படிந்த முகத்துடன் பார்த்தாள். 

வேலையில் கண்ணாக இருந்ததில் எந்த காதலும் வந்து ஒட்டாமல் போக, ஏன் அம்மாவிடம் ஒரு பொய்யைச்சொல்லி மாட்டிக்கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் சரஸ்வதி 

பாக்யா

பேச்சு துணை

கோவையில் தனது நண்பனின் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று ஆர்வத்துடன் வேலை தேடி வந்த ஜேக்கப்பிற்கு அது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 

கோவைக்கு வெளியே பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் எண்ணூறு ருபாய் வாடகையில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, இல்லாத அறையில் தங்கியிருந்தான் அவனது நண்பன் வினோ. 

மறுநாள் காலை தனது பெட்டி படுக்கையுடன் புறப்பட்டு லாட்ஜில் தங்கிக்கொண்டான். ஒரு வாரம் கழிந்து வினேவை பார்க்க வந்த்தான் ஜேக்கப். 

 ''பஸ்டேண்டு பக்கத்துல சகல வசதியோட ஒரு வீடு இருக்கு, வாடகைய நாம ரெண்டு பேரும் பகிர்ந்துக்கலாம் வர்றியா" தனது நண்பனைப் பார்த்து கேட்டான் ஜேக்கப். " நான் வரலை'' என்று மறுத்தான் வினோ. '' 

மாசம் பத்தாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற ஒரு நல்ல வீடாப்பாத்து இருக்ககூடாதா? சற்று கோபமாகவே கேட்டான் ஜேக்கப். ''இருக்கலாம் தான், ஆனா இந்த வீட்டு ஓணரோட அப்பா ரொம்ப வயசானவர், 

அவர்கூட அவர் மகனோ, மருமகளோ, பேரக்குழந்தைகளோ சரிவர பேசுறதில்ல, அவரோட பேச்சுதுணைக்கு நான் ஒருத்தன் தான் இருக்கேன், 

நானும் விட்டுட்டு போயிட்டா பாவம் அவர் ரொம்ப கஷ்டப்ப்டுவார்'' பெரியவருக்கு துணையாக இருக்கும் வினோவை பாராட்டிவிட்டு வந்த வழியே திரும்பி நடந்தான் ஜேக்கப்

பெருமை

துணி வியாபாரம் செய்யும் எனது நண்பனின் கடைக்குச் சென்றிருந்தேன். சூரத்திலிருந்து வந்திருந்த விற்பனை பிரதிநிதி ஒருவர் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்தி தெரிந்த அவர் தமிழை அரையும் குறையுமாக பேசியது என்க்கு சலிப்பை ஏற்படுத்தியது. என் நண்பனுக்கு இந்தியில் சரளமாக பேச வரும், இருந்தாலும் அவருடன் தமிழிலேயே பேசினான். ஒரு வழியாக தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியேறியதும் என் நண்பனிடம் மெல்ல கேட்டேன்.

 " உனக்குததான் இந்தி நல்லா பேச வருமே பிறகு ஏன் இந்தியுல பேசல!" மெல்லிய புன்னகை ஒன்றை நழுவ விட்டு சொன்னான். 

 " வட நாட்டுலயிருந்து இங்க வந்து தமிழ் மொழிய கத்துகிட்டு நம்ம கிட்ட பேசுறப்போ நான் இந்தியுல பேசியிருந்தா தமிழ் மொழிய இன்னும் கத்துக்கணுங்கற ஆர்வத்த விட்டுடுவார், 

தொடர்ந்து இப்பிடி பேசினா இன்னும் கொஞ்ச நாள்ல தெளிவா பேச ஆரம்பிப்பார்., 

நம்ம தாய் மொழிய வட நாட்டுக்காரங்க பேசுறது நமக்கு பெருமை தானே!" என்ற்போது என் நண்பனைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது. 

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

ஏமாற்றம்

ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மணியார்டர் அனுப்பி வைத்தால் தாமதமாகப் போய்ச் சேருமென்று கருதி, வங்கியில் அப்பா பெயரில் கணக்கு ஒன்று தொடங்கி டெபிட் கார்டும் வாங்கித்தந்தேன்.

சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக அப்பா கணக்கில் பணம் போட்டுவிட்டு தகவல் தெரிவித்தேன். ஏ.டி.எம் சென்டரிலிருந்து பணம் எடுத்துக்கொண்டதாக அப்பாவும் தகவல் தெரிவித்தார்.அடுத்து நான்கு மாதங்கள் தொடர்ந்து வங்கியில் பணம் போட்டும் அவர் எடுக்கவில்லை.

தொலைபேசியில் அப்பாவை தொடர்பு கொண்டு "வங்கியிலிருந்து ஏன் பணம் எடுக்கவில்லை" என்று கேட்டேன். ``முன்னயெல்லாம் மணியார்டர் வரும். நீ பணத்த அனுப்பியிருக்கிற விசயத்த தபால்காரர் வந்து சொல்றப்போ கேக்குற என்க்கு ஒரு சந்தோஷம், 

அந்த பணத்துலயிருந்து அஞ்சோ பத்தோ இனாமா தபால்காரருக்கு தர்றப்போ அவர் முகத்துல தெரியுற மகிழ்ச்சி

 இதெல்லாம் டெபிட் கார்டுல பணம் எடுக்கறப்போ கிடைக்கலப்பா என்ற போது அவரது ஏமாற்றம் புரிந்தது. 


குங்குமம் வார இதழில் வெளிவந்தது

பீடி புகைப்பதை நிரந்தரமாக நிறுத்த

மடியிலிருந்த பீடிகட்டிலிருந்து ஒன்றை உருவி பற்றவைத்து, பீடிக்கட்டை தலைமாட்டில் வைத்துவிட்டு தூங்கிப்போனான் தாசையா. 

விடிந்ததும் புகை பிடிக்க பீடிக்கட்டை துளாவியபோது அது இல்லாமல் குழம்பிப்போனான். மறுநாள் ராத்திரி வழக்கம்போல் பீடி புகைத்துவிட்டு தூங்குவதுபோல் நடித்தான். 

ஒரு மணி நேரம் கழிந்ததும் அவனது மகன் ரமேஷ் பூனை நடை நடந்து வந்து பீடிக்கட்டை மெல்ல எடுத்தான். சட்டென்று அவனைப் பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்தான் தாசையா. '' ஏண்டா இந்த வயசுல உனக்கு பீடி கேக்குதா உன்ன...'' மீண்டும் அடிக்க கையை ஓங்கினான் தாசையா. '' அடிக்காதீங்கப்பா, 

விடிஞ்சா பீடிகட்ட எடுத்துகிட்டு டாய்லெட் போவீங்க, உள்ளேயிருந்து பீடி குடிப்பீங்க, அப்பறமா நான் போகும்போது உள்ளே ஒரே பீடி நாத்தமா இருக்கும், 

அதான் உங்க பீடிகட்ட எடுத்து ஒளிச்சு வெச்சேன்!'' மகன் சொன்னது சுளீரென்று வலிக்க பீடி புகைப்பதை நிரந்தரமாக நிறுத்துவது என அந்த நிமிடமே தீர்மானித்தான் தாசய்யா

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

  மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?! அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!.. நீ கவலைப்படாதே! இந்த வரனை ஒப்புக்கோ! உ...