பரமசிவனும், பார்வதியும் பொழுது போகாமல் பூலோகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாறுவேடத்தில் இருந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பூலோகத்தில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது சோதனைகள் வைத்து யார் சிறந்தவர் என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொள்வது சிவனுக்கும் பார்வதிக்கும் பிடித்த பொழுது போக்கு. அந்த ஊரிலும் அதே விளையாட்டை விளையாடத் தீர்மானித்தார்கள்.
வழியில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் “உங்க ஊர்லயே பெரிய வள்ளல் யாருப்பா?” என்று கேட்டார் சிவன்.
“அண்ணாமலை ஐயாதானுங்க” என்றார் அவர்.
இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இன்னொருவரை பார்வதி கேட்க, அவர்
“பெரியண்ணன் ஐயாதானுங்கம்மா” என்றார்.
தொடர்ந்து கேட்டுக் கொண்டே போக மாற்றி
மாற்றி இந்த இருவரின் பெயரையே எல்லாரும் சொன்னார்கள். யார்தான் சிறந்த
வள்ளல் என்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். முதலில் அண்ணாமலை
வீட்டுக்குப் போனார்கள். தாங்கள் ஒரு வண்டி நிறைய பணம் கொண்டு
வந்திருப்பதாகவும் அதை ஒரு மணி நேரத்துக்குள் மக்களுக்கு தானம் செய்து விட
வேண்டும் என்றும் மிச்சமிருந்தால் அவரே வைத்துக் கொள்ளலாம் என்றும்
சொன்னார்கள். அண்ணாமலை ஒப்புக் கொண்டார். சிவனும் பார்வதியும் தங்களை
மறைத்துக் கொண்டு கவனித்தார்கள்.
அண்ணாமலை வருவோர் போவோருக்கெல்லாம் ஒவ்வொரு
கட்டாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து ஏகப்பட்ட பணம்
மிச்சமாகி விட்டது.
அடுத்ததாக பெரியண்ணன் வீட்டுக்குப் போய் ஆக்ஷன் ரீபிளே செய்தார்கள்.
பெரியண்ணன் வந்தவர்கள் எல்லாருக்கும்
கைநிறைய கட்டுக் கட்டாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒரு மணி நேரம் கழித்து
பத்துப் பதினைந்து கட்டுகள் மிச்சமிருந்தன.
பெரியண்ணன்தான் சிறந்த வள்ளல் என்று
பரமசிவன் முடிவு செய்தார். இல்லை அண்ணாமலைதான் என்று பார்வதி சொன்னார்.
விவாதிக்க ஆரம்பித்தார்கள். தனக்கு நிறைய வேண்டும் என்றுதான் அண்ணாமலை
ஒவ்வொன்றாகக் கொடுத்தார் என்பது சிவபெருமானின் வாதம். பார்வதி வாதிடவில்லை.
‘நாளைக்குச் சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னார்.
மறுநாள் இருவரும் நகர்வலம் போனார்கள்.
பெரியண்ணனிடம் பணம் வாங்கியவர்கள் எவ்வளவு
செலவு செய்தும் இன்னும் பணம் மீதமிருக்க பணத்தைக் குடிப்பதிலும்,
விபச்சாரத்திலும் செலவு செய்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலையிடம் பணம்
வாங்கியவர்கள் பணம் கொஞ்சமாக இருந்ததால் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும்
தின்பண்டங்களும், உடைகளும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
இதைச் சொல்லி விட்டு ”மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்ன?” என்று இல்லத்தரசியிடம் கேட்டேன்.
“எப்பவுமே பொண்டாட்டி சொல்றதுதான் சரியா இருக்கும். இதான் மாரல்” என்கிறார்!
தானத்தில் சிறந்தவர் யார்?
எதையும் சிந்தித்து நிதானமாக செய்பவரே!