Total Pageviews

Friday, March 29, 2013

நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது



இளைஞர் ஒருவர் வண்டியை ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகிக் கால்கள் இரண்டையும் இழந்தார்.

அவருக்கு மரக்கால்கள் பொருத்தப்பட்டன.

அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்.

அங்குள்ள காட்டுவாசிகள் சிலர் அவரைக் கடத்திச் சென்றனர்.

அந்த காட்டுவாசிகளின் தலைவன், “இன்று நமக்கு நல்ல இளைஞன் ஒருவன் உணவாகக் கிடைத்திருக்கிறான். இவனுடைய மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னாதாக இவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என்றான்.

தலைவன் உத்தரவைக் கேட்ட காட்டுவாசிகள் அந்த இளைஞனை நெருங்கினர்.

அவர்கள் இளைஞனின் கால்களை வெட்ட முயன்ற போது, அந்தக் கால்கள் கடினமான வேறு பொருளாக இருப்பதைப் பார்த்தனர். கால்கள் மரக்கட்டையாக இருப்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பயந்து போனார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைவனிடம் கால்கள் மரக்கட்டைகளாக இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

தலைவனும் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அதைப் பார்த்த அவனுக்கும் பயம் உண்டானது.

தலைவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கடத்தி வந்திருக்கும் இந்த இளைஞன் மனிதனல்ல, கடவுளாகத்தானிருப்பான். இவரை வெட்ட வேண்டாம். அவரை விடுவித்து விடுங்கள்” என்றான்.

அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான். அவனிடம் அவர்கள் ஆசி பெற்றுக் கொண்டனர்.

தப்பி வந்த இளைஞன், “நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது. கடவுள் நமக்கு எப்போதும் தீமை செய்வதில்லை” என்றான்.

வெற்றியின் ரகசியம்


ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.

பேரரசனிடம் படை பலம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு வலிமையும் இருந்தது.

குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமுடையவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.

குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.

‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால் போரில் தோற்று விடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.

தலை விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகமடைந்தனர்.

அவர்களுக்குள் கடவுளே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் நிறைந்தது.

கடவுள் துணையுடன் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டார்கள். வென்றுவிட்டார்கள்.

தளபதி வந்தார்.

‘‘மன்னா கடவுள் நம்முடன் இருந்ததால் நாம் ஜெயித்து விட்டோம்’’ என்று உற்சாகமாய்ப் பேசினார்.

‘‘தளபதி நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம் நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’ என்று அவன் சுண்டிவிட்ட நாணயத்தை எடுத்துக் காட்டினான்.

அதில் இருபுறமும் தலைதான் இருந்தது.

Wednesday, February 20, 2013

தன்னம்பிக்கை

இளைஞன்  ஒருவன்  பட்டப்படிப்பு   படித்து முடித்து  விட்டு

வேலைத் தேடி அலைகிறான்.  ஏற்கனவே நிறைய வேலையில் சேர்ந்து,    ஒத்து வராமல் ஒரு  வேலை விட்டு இன்னொரு  வேலை என்று தாவிக் கொண்டேயிருக்கிறான்.

காரணம்  வேலை  பிடிப்பதில்லை. (உண்மையில்,  வேலையில்  பிடிப்பில்லாமை,,  தன்னம்பிக்கை   இல்லாமை......இப்படி  ' இல்லாமை '  தான் நிறைய.....)

ஒரு நண்பனின் உதவியுடன்  ஒரு பத்திரிகையில்   நிருபராக  சேர்கிறான்.

சேர்ந்தவுடன், அந்தநாட்டின்  சுதந்திர தினம்   வருகிறது.இந்த இளைஞனிற்கு
அந்நாட்டின்   முக்கிய  அலுவலகத்தில்  நடக்கும் சுதந்திர விழாவைப்  பற்றிய   அறிக்கை   சமர்ப்பிக்க   வேண்டிய   பொறுப்பு   அளிக்கப்படுகிறது.

இது அவனுடைய  முதல்  சந்தர்ப்பம்.மிக சிறப்பாக  செய்ய   வேண்டும்.  இந்த வேலையிலாவது   நிலைக்க வேண்டும்  என்பது  அவனுடைய  விருப்பம்.

அதனால் இந்த சந்தர்ப்பம்   தனக்கு கிடைத்தது   அதிர்ஷ்டம்  என்று நினைக்கிறான்.எடுத்தவுடனே  எவ்வளவு பெரிய பொறுப்பு ?

 உற்சாகத்துடனேயே      சென்று   ,நிகழ்ச்சி   தொடங்க   காத்திருக்கிறான்.

நேரம்  ஆகிக் கொண்டேயிருக்கிறது.   விழா ஆரம்பித்த பாடில்லை.  தேசியக்  கொடி,     இன்னும்  ஏற்றப்படவில்லை.

சிறிது நேரம்  கழித்து , ஒரே  சலசலப்பு.   என்னவென்று   புரியவில்லை.  ஒவ்வொருவராய்  அரங்கை  விட்டு சென்று கொண்டிருந்த்தார்கள்  .ஒருவரிடமும் சரியான பதில் இல்லை.

வெகு நேரக்   காத்திருப்புக்கு பின்னர் இன்று விழா நடக்கும்   போல்  தெரியவில்லை.

அவனுடைய  உற்சாகம்  அனைத்தும்   ஆற்று  நீராய்  வடிந்தது.  கொஞ்சமாய்  ஊற்றெடுத்திருந்த.....   நம்பிக்கை   சொல்லாமல் கொள்ளாமல்  விடை பெற்றது.

நம் இளைஞன்  தன்  விதியை நொந்து  கொண்டே   பயங்கர சோகத்துடன்  ஆபீஸ்  செல்கிறான்.நடந்ததை   சொல்கிறான்.

அவனுடைய உயரதிகாரி  அவனை கோபித்துக் கொள்கிறார். எவ்வளவு  அருமையான   சந்தர்ப்பம் ? தவற விட்டு வந்து நிற்கிறாய். எத்தனை விஷயங்கள்.மிஸ்  பண்ணிஇருக்கிறோம்  தெரியுமா?.  யாரிடமாவது, நான்   'press ' என்று  சொல்லிக் கேட்டிருந்தால்    ஒரு முழு  பக்கமே நிரம்பும்   அளவிற்கு    செய்தி கிடைத்திருக்குமே ? கோட்டை  விட்டு விட்டாயே  என்று  வேலையை விட்டு  நீக்குகிறார்.

தன்னுடைய   எதிர்மறை  சிந்தனையால்,  ....மீண்டும் வேலைத்  தேடி அலைவதாக  முடிகிறது  கதை.

விவேகானந்தரின்   150 வது பிறந்த வருடம் கொண்டாடுகிறோம்.விவேகானந்தர் என்ற பெயர்  காதில் விழுந்ததுமே   ஒரு தன்னம்பிக்கை   ஊற்று   நம் எல்லோருக்குள்ளும்    கிளம்புவதை   யாருமே  மறுக்க மாட்டார்கள்.

ஆனால் அவரிடமிருந்த   தன்னம்பிக்கையில்  சிறிதாவது    நமக்கு   யாருக்காவது  இருக்கிறதா?  தெரியவில்லை.

(இல்லை  என்று   சொல்லும் தைரியம்  கூட  இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் )

தன்னம்பிக்கை   விடுங்கள்.  , தன்னிரக்கம், எதிர்மறை  சிந்தனை  இதெல்லாம் இல்லாமல்,   எத்தனை   பேர்  இருக்கிறோம். ?

  பஸ்   நிலையத்தில்  ஒருவர் அன்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்."என் அதிர்ஷ்டம்  பற்றி உங்களுக்குத் தெரியாது சார்.  நான் உப்பு  விற்கப்  போனால்  மழை பெய்யும்.  மாவு விற்கப் போனால்  காற்றடிக்கும். பஸ்   கிடைக்காததற்கே    இப்படி என்றால்  மற்ற விஷயங்களில்.........

இந்த எதிர்மறை   சிந்தனை இல்லாமல்  இருந்தாலே நலமாயிருக்கும்.

  நம்  குழந்தைகளுக்கு    சாதத்துடன்   தன்னம்பிக்கையை   ஊட்டி  வளர்ப்போம்

தன்னிரக்கத்தை,எதிர்மறை  சிந்தனையை       இரக்கமின்றி    விரட்டி அடிக்கக்  கற்றுக் கொடுப்போம்.

Monday, December 31, 2012

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?



ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.

தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.

அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.

ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.

அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.

சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.
நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.

குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.


இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.
ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.

தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.

பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.

அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.

தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.

இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.

கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.

இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.
அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

 
நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.
உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.

பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.



மனிதனுக்கு கிடைத்த ஆயுள்



எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.

தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.

அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.
 
கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.
சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.
 
அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.
 

கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.
 
உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
 
மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.

குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.

 
பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.
இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.
குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.

 கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.
 
உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.

 
கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக 
நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
 
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.

இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.

மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான்.

 சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான்.

 அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.



பூனை

வீட்டில்  பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினார் அவர்.


அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய்  வளர்த்த கிளியை கவ்விக் கொன்றது. கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.

மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது. வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை, ஆத்திரமும் இல்லை

1) வேண்டாத எலியைக் கொன்ற போது மகிழ்ச்சி.

2) வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்; துக்கம்
.
3) வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக்குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை.

அது மட்டுமல்ல……

பசிக்கு, தனக்கு வாய்த்த இரை எது வாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.

இந்த மன நிலை தான் யோகியின் சம நிலை.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.  



மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.


அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.

'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ*ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...