ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.
பேரரசனிடம் படை பலம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு வலிமையும் இருந்தது.
குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமுடையவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.
குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.
‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால் போரில் தோற்று விடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.
தலை விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகமடைந்தனர்.
அவர்களுக்குள் கடவுளே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் நிறைந்தது.
கடவுள் துணையுடன் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டார்கள். வென்றுவிட்டார்கள்.
தளபதி வந்தார்.
‘‘மன்னா கடவுள் நம்முடன் இருந்ததால் நாம் ஜெயித்து விட்டோம்’’ என்று உற்சாகமாய்ப் பேசினார்.
‘‘தளபதி நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம் நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’ என்று அவன் சுண்டிவிட்ட நாணயத்தை எடுத்துக் காட்டினான்.
அதில் இருபுறமும் தலைதான் இருந்தது.
No comments:
Post a Comment