Total Pageviews

Wednesday, December 12, 2012

வட்டிக்கு குட்டி

விஜய நகரத்தில் வட்டித் தொழில் நடத்தி வந்த ஒருவன் மக்களிடம் அநியாயமாக அதிக அளவில் வட்டி வாங்கி வந்தான். இதனால் அவனிடம் வட்டிக்குப் பணம் வாங்கும் பலரும் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த வட்டிக் கடைக்காரரை நயவஞ்சகமாகத்தான் திருத்த வேண்டுமென்று முடிவு செய்தான்.

அந்த வட்டிக் கடைக்காரன் திருமணம் போன்ற விழாக்களுக்கு பாத்திரங்களையும் வாடகைக்கு விடும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்தான்.

தெனாலிராமன் ஒருநாள் அவனிடம் தன் வீட்டில் விஷேசம் ஒன்று வைத்திருப்பதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் திரும்பத் தந்து விடுவதாகவும் கூறினான்.

அதன்படி அவனும் தெனாலிராமனுக்கு பாத்திரங்களைக் கொடுத்து அனுப்பினான்.

சில நாட்கள் கழித்து தெனாலிராமன் வாடகைக்கு எடுத்துச் சென்ற பாத்திரங்களுடன் சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

இதைப் பார்த்த வட்டிக் கடைக்காரன், " நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே..." என்றான்.

அதற்குத் தெனாலிராமன், " உமது பாத்திரங்கள் குட்டி போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பதுதானே முறை. ஆகவே அவற்றையும் சேர்த்துக் கொண்டு வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டிய முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணியபடி " ஆமாம் நான் உன்னிடம் பாத்திரங்களைக் கொடுக்கும் போது அது கர்ப்பமாக இருந்தது. அதனால் குட்டி போட்டிருக்கும்..." என்றவாறு அனைத்துப் பாத்திரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டான்.

சில மாதங்கள் கழித்து தெனாலிராமன் , தன் வீட்டில் சிறப்பு விழா ஒன்று இருப்பதாகவும் அதில் அரசர், மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்குத் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் வேண்டும் என்றும் கேட்டான்.

ஏற்கனவே பாத்திரங்கள் குட்டி போட்டதாகக் கூறி கூடுதலாகப் பாத்திரங்கள் கொண்டு வந்து கொடுத்த தெனாலிராமனைப் பார்த்து, என்னிடம் உள்ள தங்கப் பாத்திரங்களும் , வெள்ளிப் பாத்திரங்களும் கர்ப்பமாக இருக்கின்றன. கவனமாகக் கொண்டு செல்வதுடன் வரும் போது குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வந்து தர வேண்டும்." என்றபடி தங்க,வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுத்தனுப்பினான்.

சரி என்று ஒப்புக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை தெனாலிராமன் வாங்கிச் சென்றான்.

சில மாதங்கள் கடந்தும் வாடகைக்கு விட்ட தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் வந்து சேராததால் வாடகைக்குக் கொடுத்தவன் தெனாலிராமன் வீட்டுக்குத் தேடிச் சென்றான்.

தெனாலிராமனைப் பார்த்து, "வாடகைக்குப் பாத்திரங்கள் வாங்கி வந்து எவ்வளவு நாட்களாகி விட்டது. பாத்திரங்களை ஏன் திருப்பிக் கொண்டு வந்து தரவில்லை" என்று சத்தம் போட்டான்.

தெனாலிராமனும் அமைதியாக , "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்றுதான் நான் தங்களைப் பார்க்க வரவில்லை. நீங்கள் வாடகைக்கு பாத்திரங்கள் கொடுக்கும் போது அவையெல்லாம் கர்ப்பமாக இருந்ததல்லவா? அதனுடைய பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு அவையெல்லாம் இறந்து போய்விட்டன " என்றான்.

இதைக் கேட்ட வட்டிக் கடைக்காரன் மிகவும் கோபமடைந்தான்.

" யாரிடம் விளையாடுகிறாய் ? பாத்திரங்கள் எப்படி சாகும்?" என்று கத்தினான்.

தெனாலிராமன் அமைதியாக, "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது? " என்று கேட்டான்.

இருவரும் மன்னரிடம் சென்று இது குறித்து முறையிடுவது என்று முடிவு செய்து அரண்மனைக்குச் சென்றனர்.

அனைத்து விபரங்களையும் கேட்ட மன்னர், "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இதுதான் சரியான தண்டனை. இனியாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என்று புத்திமதி கூறி அனுப்பி வைத்தார்.

தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி பரிசுகளும் வழங்கினார். 

Thanks to Muthukamalam.com

பந்த பாசம்

போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.

புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.

புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.

அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.

புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.

அபிநந்தன், " பெருமானே, நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும், உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.

புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமா? காற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.

அபிநந்தன், " புத்த பெருமானே , என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.

" சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.

சில நாட்கள் கடந்தன.

ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் , அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

புத்தர் அவனிடம், " அபிநந்தா, இது ஏது? " என வினவினார்.

அபிநந்தன், " பெருமானே, இது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.

இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

புத்தர் " அபிநந்தா, இந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.

அபிநந்தன், " ஐயனே, இவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.

புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டி, சிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.

புத்தர்," அபிநந்தா, யார் இந்தப் பெண் ? " என்றார்.

" பெருமானே, இவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.

" அபிநந்தா, இதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.

மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.

" அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.

தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள், தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.

உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள், உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.

உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும், சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம், போய் வா " என்றார் புத்தர்
.

Friday, November 23, 2012

பிரார்த்தனை




ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “ என்று கூறியது .

 அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன

நான் ஒன்று நினைத்தேன் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது





 ஒரு அரசன் தன் அரண்மனை ஜோஸியரிடம் கூறினான்:-

“ஒருவரின் நடத்தை,எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி கணித்துக் கூறுவது என்பது இயலாத காரியம்.ஏனெனில் வாழ்வின் பாதையில் பல குறுக்கு வழிகள் அமைந்து உள்ளன.ஒருவன் எந்த சமயத்தில் என்ன மாதிரி சிந்திப்பான்,நடப்பான்,எப்படிக் குட்டிக்கரணம் அடித்து மாறுவான் என்பதை யாரும் அறிய முடியாது. வாழ்க்கை என்பது ஒரு புரிந்துக்கொள்ள முடியாத ஒரு புதிர் ஆகும்.”

ஜோஸியன் இதை மறுத்தான்.

அரசன் “ஒரு செயல் நடத்திக் காட்டி அதை நான் நிருப்பிக்கிறேன்” என்றார்.

அரண்மனைக்கு எதிரே ஒரு ஏரி உள்ளது. அரண்மனையிலிருந்து அதைக் கடந்து அந்தப் பக்கம் போக ஒரு பாலம் உள்ளது.அந்தப் பாலத்தைக் கடந்து வந்து அரண்மனைக்கு அருகில் தினமும் முதல் மனிதனாக உட்கார்ந்து ஒரு பிச்சைக்காரன்  பிச்சை எடுப்பான்.

”நாளைக் காலையில் அவன் நடந்து வருகிற பாலத்தின் நடுவில் ஒரு துணிப் பையில் தங்க காசுகள் போட்டு வைங்கள்.அவன் முதலில் கடப்பதால் அவன் அதிர்ஷ்டக் காரனா என்று பார்ப்போம்.”

அவ்வாறே ஜோசியன் வைத்து விட்டு அவன் அதிர்ஷ்டக்காரன்தான் என்று ஜோஸ்யம் சொன்னார்.

மறுநாள் பிச்சைக்காரன் வந்தான். பாலத்தின் ஆரம்பத்தில், வழக்கத்திற்க்கு மாறாக கண்களை மூடிக்கொண்டு பாலத்தைக் கடந்து அரண்ம்னை வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டான். சற்று நேரம் கழித்து அதே வழியில் வந்த ஒரு உண்மை குருட்டுப் பிச்சைக்காரி  காலில் தட்டுப் பட்டதை எடுத்துணர்ந்து அதிர்ந்து தன் பையில் ஒளித்துக் கொண்டு நடையைக் கட்டினாள்.

பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஜோஸ்யனும் அதிர்ந்துப் போனார்கள்.

ஜோஸ்யன் அந்த பிச்சைக்காரனிடம் , “உனக்குதான் கண் தெரியுமே ஏன் கண்ணை மூடிக் கொண்டு பாலத்தைக்கடந்தாய்?”

“காலையில் மனசுல ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. ஒரு வேளை எனக்குக் கண் பார்வை போய்ட்டா ,எப்படி தின்மும் இங்கு வந்து பிச்சை எடுப்பது.எனக்குத் துணை யாரும் கிடையாது. யோசித்தேன். இன்றையிலிருந்து கண் இல்லாமல் நடந்து ஒத்திகை பார்த்து பழகி விட்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. யாரையும் நம்பி இருக்க வேண்டாம்... அதான் கண் முடி நடந்தேன்.”

அரசன் “நாம் இந்தச் செயலை நடத்தியதும் அவனுடைய குருட்டு நடை ஒத்திகை எண்ணமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட்டது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?”

ஜோஸியன் “நான் ஒன்று நினைத்தேன் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது” என்றார்.

எல்லாம் அவளுக்காக !




ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.

பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.

பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார்.

இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.

இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்
.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

Wednesday, August 22, 2012

மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''


ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம். 

தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். 

அவரிடம், ''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார். 

அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி. 

வாழ்நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். 

ஞானி எங்கெங்கோ சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.

பணக்காரனும் மூச்சிரைக்க பின்னாலேயே அங்கு வந்து சேர்ந்தான். ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.

அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.

இப்போது ஞானி அவனிடம் சொன்னார், ''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம் தான் இருந்தது. அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு மகிழ்ச்சி இல்லை. அதே பெட்டிதான் உன்னிடம் இப்போது இருக்கிறது. ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி; நிம்மதி. மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி?


ஒரு சம்சாரி எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.
நூறாண்டுகள் வாழ்ந்த ஒருவரைப் போய்ப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா! நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டீர்களே எப்படி என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமாட்டேன்.  குடிப்பழக்கம் என்னிடம் உண்டு அதனால் தான்!” என்று பதிலளித்தார்.
உள்ளறையிலிருந்து இலேசான இருமல் சத்தம் கேட்டது.
அங்கே இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.
 
“எனது அண்ணன்தான்” என்றார் அந்த நூறாண்டு மனிதர்.
 “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார் சம்சாரி.
அவரைப் பார்த்த சம்சாரி,  “அய்யா! உங்க தம்பி நூறு வருடம் வாழ்வதைப் பெருமையாக இருக்கிறது, ஆனால் அவருடைய அண்ணன் நீங்கள் அதைக் காட்டிலும் கூடுதலான் ஆண்டு வாழ்ந்து வருகிறீர்களே? எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது?” என்று கேட்டார்.
“நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன். குடிப்பழக்கம் எனக்கு இருப்பதால் தினமும் எனக்கு குடிக்காமல் இருக்க முடியாது” என்றார் அந்த நூறாண்டு மனிதரின் அண்ணன்.
சம்சாரிக்குத் தலையைச் சுற்றியது.
-நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...