Total Pageviews

Tuesday, December 20, 2011

'ம்' புடிச்சிருக்கு,

ராஜேந்திரனும் அவன் தாயாரும் தரகர் சொன்ன வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்ற போது, இருவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து காபி பரிமாறினார்கள். " நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்கறீங்க?" ஹாலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியான மைதிலி மெல்லக் கேட்டாள். " பி.காம் முடிச்சிருக்கேன், ஒரு தனியார் கம்பனியுல அக்கவுண்டெண்டா வேல பார்க்கறேன்!" தான் பார்க்க வந்த மணப்பெண்ணின் தோழியாக இருக்கக்கூடும் என நினைத்து பவ்யமாய் பதிலளித்தான் ராஜேந்திரன். " உங்க உதடு கறுத்திருக்கு, நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?" மறுபடியும் கேட்டாள் மைதிலி. " கல்லூரியில படிக்குறப்போ புடிச்சிருக்கேன் இப்போ விட்டுட்டேன்!" என்றான் ராஜேந்திரன். அரைமணி நேரத்துக்கு மேலாக மைதிலி கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அதற்கெல்லாம் சளைக்காமல் பதிலளித்தான் ராஜேந்திரன். " சரி பேசினது போதும் பொண்ண வரச்சொல்லுங்க!" அவனது தாயார் கடுப்பாகி கேட்டாள். " நாந்தாங்க பொண்ணு, எத்தன நாளைக்குத்தான் காபி தட்டோட, குனிஞ்ச தல நிமிராம வந்து காபி பரிமாறிக்கிட்டு மாப்பிள்ளைய அரையும் குறையுமா பார்த்துட்டு போறது, ஒரு சேஞ்சுக்கு இப்பிடி பண்ணீட்டேன், மாப்பிள்ளைய எனக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா? மைதிலி நேரடியாக கேட்டபோது 'ம்' என்று தடுமாறியபடி பதிலளித்தான் ராஜேந்திரன். நன்றி :பாக்யா

வேற பொண்ணு இருந்தா பாரேன்!''

இருபது வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதோச்சையாக பேருந்து நிலைய வளாகத்தில் சந்தித்தேன். முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விபரம் கேட்டபோது மனசு கஷ்டமாக இருந்தது. 

இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு பிரிந்தோம். அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன். '' நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகலை, வயசு முப்பத்தைந்துக்குமேல இருக்கும!" என்றாள் என் மனைவி.

 எனக்கு பொறி தட்டியது. மறுநாள் அந்த டீச்சரை சந்தித்து எனது நண்பனைப்பற்றி எடுத்துச்சொல்லி, `ஏன் நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?' என்று கேட்டேன். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு இறுதியில் சம்மதிக்க, விபரத்தை நண்பனுக்கு தெரிவித்து உடனே ஸ்கூலுக்கு வரச்சொன்னேன். 

அடுத்த அரைமணி நேரத்தில் வந்த அவனுக்கு டீச்சரை காண்பித்து `பிடிச்சிருக்கா' என்று கேட்டேன். '' டீச்சர் பார்க்கிறதுக்கு எனக்கு அக்கா மாதிரி தெரியறாங்க, வயசு குறைவா வேற பொண்ணு இருந்தா பாரேன்!'' அவன் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது.  

நன்றி :பாக்யா

நன்கொடை

பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் வீட்டுக்கு வந்து `ஐயா' என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி. " என்ன வேணும்!'' என்றபடியே வெளியே வந்தார் தங்கராஜ்.. " லோண் வேணும் சார்!" மறுபடியும் பணிவாய் கேட்டார் ராமசாமி. 

" என்ன லோண் வேணும், வீடு கட்ட லோணா, இல்ல மாடு வாங்க லோணா!" " அதெல்லாம் வேணாங்க, என் வீடு குடிசையுங்க, வீட்டுக்கு பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோண் குடுங்க சார்!"

 " அதுக்கெல்லாம் லோண் கிடைக்காது!" என்றார் தங்கராஜ். " என்ன சார் இது, ஒருத்தருக்கு வீடு கூட இல்லாம இருக்கலாம், ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோண் குடுத்துட்டு அப்பறமா வீடு கட்ட லோண் குடுங்க!" விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது. 

 " கொஞ்சம் இருங்க!" என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐயாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார். " இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம், போய் கழிவறை கட்டிக்குங்க!" அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய், " நீங்க மகராசனா இருக்கணும்!" என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி. 

" என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே, 

உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?" வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.

 " கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!" 

அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி. 

நன்றி :பாக்யா

என் புருஷன் பரவாயில்ல

நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம் தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு,

 வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு" தனது தோழி மாலதியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ரேவதி. மாலதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"உன் புருஷனால உனக்கு நிம்மதி அத நெனச்சி சந்தோஷப்படு" என்று சொன்ன மாலதியை வெறுப்புடன் பார்த்தாள் ரேவதி. "உனக்கொரு விஷயம் தெரியுமா, பார்வதியோட புருஷன் தினமும் போன் பண்ணுறது அவள திட்டுறதுக்குக்தான், அவர் ஒரு சந்தேகப்பேர்வழி, அடிக்கடி போன் பண்ணி பார்வதி வீட்டுல இருக்காளா இல்ல ஊர் சுற்ற போனாளாண்ணு பார்கிறதுக்குத்தான் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பாராம்"

மாலதியின் பேச்சை கேட்டு "என் புருஷன் பரவாயில்ல "என்று தனக்குத்தானே பெருமை பட்டுக்கொண்டாள் ரேவதி.

நன்றி :பாக்யா

சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு

சூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி " வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்" என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.

 "இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு " என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன். 

 "என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்." 

நொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன்.

 தூரத்தில் "எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

பாக்யா

சந்தேகம்

தனக்கு வரும் வரன்களையெல்லாம் வீட்டில் அம்மா வேண்டாமென்று ஒதுக்கி விடும்போதெல்லாம் சரஸ்வதிக்கு ஒரு வித கவலை வந்து ஒட்டிக்கொண்டது. 

 எனது சம்பாத்யம் அம்மாவுக்கு தேவை அதனால் மறுக்கிறார்களா என்ற சந்தேகம் மெல்ல எழுந்தது. அதை உறுதி செய்வது என தீர்மானித்தாள். '' 

அம்மா ஆபீஸ்சுல என்கூட வேலை பார்க்குற ஒருத்தர விரும்பறேன் அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கிறேன்!" 

அம்மாவின் மனநிலையை புரிந்துகொள்ள அசாத்யமாய் ஒரு பொய்யைச் சொன்னாள் சரஸ்வதி. " கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்சியா இருக்கு, உன் ஜாதகத்துல காதல் கல்யாணம் தான் கைகூடுமுன்னு எழுதியிருக்கு அதனாலதான் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமுன்னு திருப்பி அனுப்பியிட்டேன்!'' 

மகிழ்ச்சி பொங்க சொன்ன தனது அம்மாவை அனியாயமாக சந்தேகப்பட்டுவிட்டோமே என்று கவலை படிந்த முகத்துடன் பார்த்தாள். 

வேலையில் கண்ணாக இருந்ததில் எந்த காதலும் வந்து ஒட்டாமல் போக, ஏன் அம்மாவிடம் ஒரு பொய்யைச்சொல்லி மாட்டிக்கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் சரஸ்வதி 

பாக்யா

பேச்சு துணை

கோவையில் தனது நண்பனின் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று ஆர்வத்துடன் வேலை தேடி வந்த ஜேக்கப்பிற்கு அது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 

கோவைக்கு வெளியே பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் எண்ணூறு ருபாய் வாடகையில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, இல்லாத அறையில் தங்கியிருந்தான் அவனது நண்பன் வினோ. 

மறுநாள் காலை தனது பெட்டி படுக்கையுடன் புறப்பட்டு லாட்ஜில் தங்கிக்கொண்டான். ஒரு வாரம் கழிந்து வினேவை பார்க்க வந்த்தான் ஜேக்கப். 

 ''பஸ்டேண்டு பக்கத்துல சகல வசதியோட ஒரு வீடு இருக்கு, வாடகைய நாம ரெண்டு பேரும் பகிர்ந்துக்கலாம் வர்றியா" தனது நண்பனைப் பார்த்து கேட்டான் ஜேக்கப். " நான் வரலை'' என்று மறுத்தான் வினோ. '' 

மாசம் பத்தாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற ஒரு நல்ல வீடாப்பாத்து இருக்ககூடாதா? சற்று கோபமாகவே கேட்டான் ஜேக்கப். ''இருக்கலாம் தான், ஆனா இந்த வீட்டு ஓணரோட அப்பா ரொம்ப வயசானவர், 

அவர்கூட அவர் மகனோ, மருமகளோ, பேரக்குழந்தைகளோ சரிவர பேசுறதில்ல, அவரோட பேச்சுதுணைக்கு நான் ஒருத்தன் தான் இருக்கேன், 

நானும் விட்டுட்டு போயிட்டா பாவம் அவர் ரொம்ப கஷ்டப்ப்டுவார்'' பெரியவருக்கு துணையாக இருக்கும் வினோவை பாராட்டிவிட்டு வந்த வழியே திரும்பி நடந்தான் ஜேக்கப்

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...