ஒரு கிராமத்தில் ஓருவன், அழகிய புள்ளிமான் ஒன்றை, தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான், காணாமல் போய்விட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத, அவன், அந்த மானை பிடித்து போயிருப்பவனை, பழிவாங்க துடித்தான்; கடவுளிடம் முறையிட்டான்.
கடவுளும் வந்தார். அவரிடம், தான் ஆசையாய் வளர்த்த, மானை தாருங்கள், என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கேட்கவில்லை. ஆத்திரத்தில், 'நான் ஆசையாய் வளர்த்த மானை, யாரோ அபகரித்து சென்று விட்டனர். அந்த மானை திருடியவன், யாராக இருந்தாலும், அவனை என் முன் நிறுத்த வேண்டும்' என, கேட்டான்.
அதற்கு கடவுள், 'பக்தா, மானை நான் உனக்கு திருப்பித் தருகிறேன்.
ஆனால், மான் காணாமல் போனதற்கு, காரணமானவர் யார் என்று கேட்காதே' என்றார்.
அதை ஏற்க மறுத்த மனிதன், 'கடவுளே, நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை, பழி வாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை, இங்கு வரவழைக்க வேண்டும்' எனப் பிடிவாதமாக கேட்டான்.
அதை கேட்ட கடவுள், 'சரி, நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது' என்றார். அந்த மனிதனும், சரி என்றான்.
'தந்தேன் நீ கேட்ட வரத்தை... இந்த மானை திருடிச் சென்றவர், உன் பின்னால் நிற்கிறார்' என, அந்த மனிதனிடம் கூறினார் கடவுள். 'கடவுளே காப்பாற்று' உடனே, அந்த மனிதன் திரும்பி பார்த்தான். மிகப்பெரிய சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும், பழி வாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. 'கடவுளே காப்பாற்று' என, அலறி அடித்தபடி ஓடினான்.
இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு, அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது; அது அழிவை தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள்; அன்புடன், அமைதியுடன் வாழுங்கள்.
No comments:
Post a Comment