Total Pageviews

Thursday, November 21, 2024

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான்.

அதில் அவன்...

"*நீ என்னை காதலிப்பதாக இருந்தால் நாளை நீ கல்லூரி வரும்போது சிவப்பு நிற ஆடை அணிந்து வரவேண்டும்" என்று எழுதியிருந்தான்.

மறுநாள் அவள் மஞ்சள் நிற ஆடையணிந்து கல்லூரிக்கு வந்து அவன் கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றாள்

இதைப் பார்த்தவுடன் மிகவும் அவமானமடைந்த அவன் அதன் பின் அவளை பார்ப்பதை, நினைப்பதைக் கூட மறந்து போனான்.

வருடங்கள் உருண்டோடின.
அந்தப் பெண்ணிற்கும் திருமணம் ஆனது.

ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது அந்தப் பெண் திருப்பிக் கொடுத்த அந்த புத்தகம் கீழே விழ அதில் இருந்து ஒரு துண்டுச் சீட்டு.

அதில் இருந்த செய்தி

நானும் உங்களை காதலிக்கிறேன் ❤....


ஆனால் என்னிடம் சிவப்பு நிற ஆடை இல்லை... Sorry!!

நீதி: மாணவர்கள் கொஞ்ச காலத்திற்கு ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்.

பின்குறிப்பு:

உடனே உங்களுடைய பழைய புத்தகங்கள் அனைத்தையும் கலைத்து தேடாதீர்கள்.

தேடுனாலும் கிடைக்காது....
 கண்டிப்பா இருக்காது...

நாமதான் எல்லாத்தையும் அப்பவே எடைக்கு போட்டு காசாக்கிருப்போமே !

Tuesday, November 12, 2024

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம்...

 அவருக்கு 77 வயது!

மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...

அன்பின் நீரூற்ற மறந்த

எத்தனையோ முதியவர்களில்

நானும் ஒருவன்!

இருக்கின்ற நான்கு மகன்களில்

ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்!

இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்!

இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது

கடைசி மகனிடம் செல்ல!

இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு

எண்ணிக்கொண்டு இருக்கிறேன்

கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக!

போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள்

வாங்கித்தந்த வெள்ளை வேட்டி

பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது!

முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி

உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது,

இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால்

என்ன சொல்வானோ என்று

பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு

வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு

இருக்கிறேன்!

கடைசி மருமகளிடம் சொல்லி தான்

மாற்றிக்கொள்ள வேண்டும்!

இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்

எல்லோரும் வேலைக்கு போனபின்பு

என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை

துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,

துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்

என்னுடைய துணிகளை தனியாகத்தான்

போடவேண்டும் என்று சொல்லி

அவர்களின் ஆடையோடு கூட

ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்!

கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட

எதுவும் சொல்வதில்லை,

மருமகளும் சொல்லவிடுவதில்லை!

இன்னும் நான்கு நாட்கள்தானே என்று

ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு

வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்

கடைசி மருமகளின் வீட்டு போக

என்னுடைய உடைகளை நானே

ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன்!

கடைசி மகன் மற்றவர்களை போல்

கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை,

வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்

இரண்டு மோட்டார் பைக்குகள்

இருக்கிறது!

நான் ஊருக்கு போகும் போதல்லாம்ம மறுமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு

பஸ் ஸ்டேண்டு வருவாள்!

அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு

போவதில் அப்படி என்ன ஆனந்தமோ

எனக்கு தெரியாது

என்னென்ன நடந்தது

என்று அவள் கேட்டுக்கொண்டே போக

நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை

பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும்

சொல்லாமல் நல்லதை மட்டுமே

சொல்லிக்கொண்டு போவேன்!

அவள் கெட்டிக்காரி என்பதால்

போகும் வழியில் எனக்கு பிடித்த

ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து

வேடிக்கை பார்க்கும்போது

கண்டுபிடித்து விடுவாள்!

வீட்டுக்கு போனதும் என்னுடைய

கட்டை பையை ஆராய்ச்சி செய்து

மருந்து மாத்திரைகளாவது சரியாக

வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று

தேடிப்பார்த்து திட்டுவாள்!

அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை

நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து

சிரித்துவிடுவாள்!

இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று

மீனாட்சியிடம் சண்டை போடக்கூட

அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால்

போய் சேர்ந்துவிட்டதில் நிறைய

வருத்தம் எனக்கு!

நான்கு நாட்கள் கழித்து

பஸ்ஸில் போய் இறங்கினேன்,

எப்போதும் போல் எனக்கு முன்வந்து

காத்திருந்தாள்!

ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,

ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார

வைத்துக்கொண்டாள்,

உங்களை ஷேவிங் பண்ண கூட

கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா

அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா

ஆயிட்டாங்களா எனும்போதே

அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....

என்று ஆரம்பிக்கும்போதே

இப்படியே பேசி பேசி அவங்களை

காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா

பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு

போவதற்குள் சவரக்கடைக்கு தான்

அழைத்து சென்றாள்!

கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள்,

பெயிலான மார்க் சீட்டை காட்டும்

குழந்தையை போல் தயங்கி தயங்கி

ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை

காட்டினேன்!

கோபத்தை வெளிக்காட்டாமல்

கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள்!

இதுக்கு தான் உங்களை

அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது

புரியுதாப்பா....என்று முறைத்தாள்

என்னிடம் பதிலில்லை!

ஊர் உலகத்துல யாரும் எதுவும்

சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு

கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை

கஷ்டப்படுத்தி அனுப்புறது.. இதே

வேலையா போச்சி எல்லாருக்கும்

என்று முணுமுணுத்துக்கொண்டே

கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,

துணியெல்லாம் சுத்தமா

துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க

பொய் சொல்லாம சொல்லுங்க

என்று டீச்சரை போல் முறைக்க

என்ன செய்வது என்று தெரியாமல்

பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,

அவளும் சிரித்துவிட்டாள்!

எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி

பையை நிரப்பிக்கொண்டு

வீட்டுக்கு அழைத்து சென்றாள்!

ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது

லேசா மயக்கமா இருக்கு

சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்

கொஞ்சதூரம் தான்பா போயிடலாம்

பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல

மெதுவாக சாய்ந்துகொண்டேன்!

உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை,

நான் பெறாத மகளின் மீது

சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,

அதனால் தான் பொய்சொல்லி

சாய்ந்துகொண்டேன்!

இன்னும் ஒரு மாதத்திற்கு

அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில்

காணாமல் போகும் என் முதுமையின்

ஊமைக்காயங்கள்!

ஏதோ ஒரு ரூபத்தில் தெய்வம்...


Monday, September 16, 2024

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

 

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.

#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Friday, June 7, 2024

மனைவிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது!

 



ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.

  கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது! வையத்தியரும் சொன்னதில்லை!

  மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

   ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்  காணவில்லை.  மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

  வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரிய வில்லை.  யாரம்மா நீ என்று கேட்டார்.  அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.   வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.  என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

 "  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள் ! 

 

  வைத்தியர் பதறி அடித்து  போய்                " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி 

"அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்!

 

   வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!  

 

 நீதி 1. மனைவிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..  

 

நீதி 2.  ப்படி செய்தால் மனைவிக்கு தான் லாபம்..  

😀😃😄😁😆☺😊😇

Wednesday, July 12, 2023

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்...

என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.

என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு,  கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.

அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.
உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

உன் மனதை குழந்தையைப் போல் வைத்திரு..

உலகம் உனக்கு சொர்க்கமாகும்  என்றார் குரு...

 

Thursday, June 22, 2023

இந்த வேலை ! உங்கள் நேர்மைக்கும்! ஒழுக்கத்திற்கும்! நான் கொடுக்கும் பரிசு!

உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ???

காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது.

உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

ஆமாம் சார் உண்மை தான்.

  அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல் என்றார்கள்.

பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்..

அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம் என்றார்.

மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.இங்கும் வேலை இல்லை.

மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

இறைவா என்ன சோதனை...

அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.

பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறிங்க என கேட்டாள்.

வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.

நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை.நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

இந்த பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க என்றாள்.

வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி.

  இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த..

இறைவன் சோதிபாருங்க ஆன கைவிடமாட்டார். என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.

அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன்.
          (குறள்)

அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ ???

ஓம் நமசிவாய 🙏


குரு மாமா.... சோடா ஊத்தலையா! ப்ளாக்_டீயும்_ப்ளாக்கான_திருமணமும்!

  குரு மாமாவின் கதை.. இன்னும் ஏன் நீ திருமணம் பண்ணிக்கலனு எல்லோரும் பேஸ்புக் ல என்ன கேக்குறாங்க ஏன் எனக்கு கல்யாணம் ஆகலைன்ற ரகசியத்த இப்ப ...