“அக்கா... நான் சொல்லுறதை நீ நல்லா கேளு....“ என்று சின்ன மருமகள் பெரிய மருமகளிடம் கிசுகிசுத்தது வீட்டினுள் நுழைந்த சுந்தரத்தின் காதில் விழுந்ததும் சற்று தயங்கி நின்று காதைக் கூர்மையாக்கினார்.
“நம்ம மாமியார் மாரடைப்புல போயி இதோ நாலு மாசம் ஆயிடுச்சி. அத்தை இருந்தப்போ மாமாவை அவங்களே கவனிச்சிக்கினாங்க.. இப்போ நாம தான்... நாமும் எவ்வளவு நாளைக்குத் தான் இப்படியியே அவரையும் கவனிச்சிக்கினு இந்த ஒண்டு குடித்தனத்துல வாழுறது... நாமும் மத்தவங்க மாதிரி தனியா வாழ வேணாமா...?“ என்று கேட்டாள் சின்னவள்.
“அதுக்காக நம்ம புருஷனுங்க சம்பாதிக்கிற சம்பாதியத்துல இந்த டவுனுல நாலாயிரம் அஞ்சாயிரம் வாடகை கொடுத்து தனியா போக முடியுமாடி...?“ இது கவலையுடன் பெரியவள்.
“முடியாது தான். அதுக்குத் தான் நான் ஒரு ஐடியா சொல்லுறேன். நம்ம புருஷங்க ரெண்டு பேரும் மாமா கடைக்குப் போவாத இந்த நாலு மாசத்துல கடைய நல்லா கவனிச்சித் தொழிலைக் கத்துக்கினாங்க. இனி மாமாவோட தயவு இல்லாமலேயே இவங்க சம்பாதிப்பாங்க. அதனால மாமாவ முதியோர் இல்லத்துல சேத்துடலாம்ன்னு சொல்லுறேன்.“ என்று அழுத்தமாகச் சொன்னாள் சின்னவள்.
“என்ன சொல்ல வர்ற நீ...?“ பெரியவள் புரியாமல் கேட்டாள்.
“ஐயோ... ஒனக்கு ஒன்னும் புரியாது. மாமாவ முதியோர் இல்லத்துல சேர்த்துட்டா... மேல் வீட்டுல வாடகை இருக்கிறவங்களைக் காலிபண்ணிட்டு நானும் அவரும் குழந்தையுடன் அந்த வீட்டீல தங்கிக்கிறோம்... நீ மாமா பிள்ளைகளோட இங்கேயே கீழ் வீட்டுல இருந்துக்கோ... என்ன புரியுதா...?“
“புரியுது... இதுக்கு நம்ம புருஷருங்க ஒத்துக்குவாங்களா...?“ கவலையுடன் கேட்ட பெரியவளின் முகம் பார்த்து “அது நம்ம கையில தான் இருக்குது...” என்று அழுத்தமாகச் சொன்னாள் சின்னவள்.
சுந்தரம் அவ்விடத்தை விட்டு கவலையுடன் அகன்றார்.
இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிறு காலை இருமகன்களும் சுந்தரத்தின் எதிரில் வந்து தயங்கி நின்றார்கள். அவர்கள் தயங்கிய விதத்திலேயே தெரிந்தது மகன்களின் மனது.
“அப்பா... நாங்க உங்ககிட்ட முக்கியமா கொஞ்சம் பேசனும்“ அவன் தயங்கியப் பேச்சிலிருந்தே என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் சுந்தரம்.
“சொல்லுப்பா...”
“அப்பா... வந்து எனக்கும் ரெண்டு பிள்ளைங்க ஆயிடுச்சி... தம்பிக்கும் கொழந்தை இருக்குது... அதனால... வந்து...“
அவன் மென்று விழுங்கி வார்த்தையை வெளியே துப்புவதற்குள் சுந்தரம் குரலைக் கணைத்துக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார்...
“ஆமாம்... நான் கூட இதை யோசிச்சேன். எவ்வளவு காலம் தான் இப்படியே இருக்கிறது...? உங்களுக்குன்னு குடும்பம் குழந்தைன்னு ஆயிடுச்சி.. நீங்க ரெண்டு பேரும் தொழிலையும் நல்லா கத்துக்கினீங்க. அதனால பேசாம நீங்க ரெண்டு பேரும் வெளிய வீடு பாத்துக்கினு தனிகுடித்தனம் போங்கப்பா...“ என்றார்.
அவர் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தன் மனைவியரைப் பாவமாகப் பார்த்தார்கள். இப்படி அவர் சொல்லுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
“அது எப்படி மாமா... ஊரு என்ன சொல்லும்...?“ சின்னவள் குரல் வெளிவந்தது.
“ஊரு... நாம என்ன செய்தாலும் அதற்கு எதிர் மறையா தான் சொல்லும். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இது என்னோட வீடு. நானும் என் மனைவியும் வாழ்ந்த வீடு. கடைசி காலத்துல அவ நினைவோட நான் வாழ நினைக்கிறேன். எனக்கு பென்சன் வருது. மேல்வீட்டு வாடகை வருது. என் நண்பனுடைய பேரன் படிக்கிறதுக்கு இங்க வந்து தங்கிக்கிறேன்னு சொன்னான். வேலைக்கு ஒரு ஆள வச்சிக்கினா போவுது... நீங்க கிளம்புற வழியைப் பாருங்க...“ சுந்தரம் சொல்லிவிட்டு நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார்.
நால்வரும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தனர்.