Total Pageviews

Sunday, November 5, 2017

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

”அம்மா, அடுத்த சனிக்கிழமை நாம ஊருக்குப் போக டிக்கெட் வாங்கிட்டேன்.”.

“சரிப்பா” “அம்மா, இங்க இருக்கற பொருட்கள எல்லாம் யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா”

“நானே உன் கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் தேவா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப்  பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில போட்டோக்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாம்ன்னு இருக்கேன்.”

”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விக்கவும் ஏற்பாடு செய்துட்டிருக்கேன். அது விஷயமா கொஞ்சம் வெளியேபோயிட்டு வந்துடறேன்.”

தேவனின் நிழல் மறையும் முன்னே, “ஏ தனம்!

உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? வீட்டை
விக்கச் சொல்லிட்டியா?

உனக்குன்னு இருக்கறதே இந்த வீடு ஒண்ணு
தான். அதையும் வித்துட்டு என்ன செய்யப்போற. உன் புள்ள எல்லா பணத்தையும் புடுங்கிக்கிட்டு உன்ன நடுத்தெருவுல விட்டுட்டா என்ன செய்வ? பேசாம இங்கயே இரு. தில்லி கண்காணாத ஊரு.
அங்க போய் என்ன செய்வ. உனக்கு என்ன தெரியும்?” என்று கத்தினாள் தாயம்மா.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க அக்கா. மருமக காதுல விழப் போகுது” “விழட்டுமே. நாட்டுல நடக்காததயா சொல்லிட்டேன். உன் மருமக வேற
பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய வேலையில இருக்குறா. 

இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா, அப்பா, உறவுக்காரங்க எல்லாம் தேவையே இல்ல. சம்பளமில்லாம ஒரு வேலைக்காரி கிடைக்கறான்னு நினைக்கறாளோ என்னவோ உன் மருமக. உடம்புல தெம்பு இல்லாம போனா அப்ப தெரியும் உன் கதி.

சாரையெல்லாம் எடுத்துக்கிட்டு சக்கையை தூரப் போடும் போது தெரியும் என் பேச்சில எவ்வளவு உண்மை இருக்குன்னு”. விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“இங்க பாருங்க அக்கா. என் புள்ள மேலயும், என் மருமக மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அத்தோட எனக்கு இருக்கறது ஒரே புள்ள. அவன விட்டுட்டு நான் ஏன் இங்க தனியா இருக்கணும்.”

“ஏன், உனக்கு உன் புருஷன் வாழ்ந்த ஊர்ல இருக்கணும்ன்னு தோணவே இல்லையா?” ”எங்க இருந்தா என்ன அக்கா? உங்க தம்பியோட வாழ்ந்த அருமையான நாட்கள மனசுல அசை போட்டுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கைய கழிச்சுடுவேன்”.

“ம்... எப்படியோ போ. எனக்கென்ன, எனக்கு தோணினத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். நான் நாளைக்கு கிளம்பறேன். காரியமெல்லாம்தான் முடிஞ்சாச்சே. உனக்கு எப்பவாவது நிற்க ஒரு நிழல் வேணும்ன்னு தோணிச்சுன்னா, தேவைப்பட்டா தாராளமா என் வீட்டுக்கதவு உனக்காக திறந்தே இருக்கும்.”

“அந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா நான் உங்களைத் தேடி வரேன் அக்கா” என்று சொல்லி நாத்தியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் தனம்.

இவர்கள் பேசியதில் என்ன புரிந்ததோ, தனத்தின்
நான்கு வயது பேரன் கமலேஷ் தன் மழலைக் குரலில், “பாட்டி நாளைக்கு நீங்க எங்க கூட ஊருக்கு வந்துடணும்” என்றான்.

“கண்டிப்பா உங்க கூடதான் வரப் போகிறேன்” என்றாள் தனம்.

மே மாத வெயில் சுட்டெரிக்க, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் தனம். ’ஏன் இப்படி ஒரு எண்ணம் எல்லாருக்கும். ஊர் உலகில் நடப்பதைத் தானே சொல்கிறேன் என்கிறார்கள். ஏன் ஊர், உலகத்துல நல்ல பிள்ளைங்களே இருக்கமாட்டாங்களா?', என் பிள்ளை அப்படி ஒரு நல்ல பிள்ளையா இருப்பான்னு நான் நம்பறேன்.

தங்கை கமலா என்னடான்னா, ‘அக்கா ஜாக்கிரதை, உன் பிள்ளை நல்லவனா இருக்கலாம். ஆனா முழுக்க நம்பிடாத. உனக்குன்னு கொஞ்சம் பணம், காசு வெச்சுக்கோன்னு’

சொன்னா. ஒரு வேளை நான் இவங்களுக்கெல்லாம் பாரமா வந்துடுவேனோன்னு பயப்படறாங்களோ. பக்கத்து வீட்டு பாட்டி கூட, ‘பேசாம இங்கயே இரு தனம். புள்ளயை நம்பி போகாத’ ன்னு சொல்றாங்க. கோவில் குருக்களும் இப்படியே சொன்னாரே. நம்ப புள்ளயை  நாமளே நம்பலைன்னா அப்புறம் வேற யார் நம்புவாங்க. இவங்களுக்கெல்லாம் பூக்கார பொன்னம்மா எவ்வளவோ தேவல. ’யார் பேச்சையும் கேக்காதீங்கம்மா.

உங்க மனசு என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லாதாம்மா இருப்பீங்க. உங்களுக்கு நல்லதுதாம்மா நடக்கும்’ என்றாளே. எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்ன்னு
பெரியவங்க சொல்லுவாங்களே.

கண்டிப்பா எனக்கு எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் என்று பலவாறு யோசித்தாள் தனம்.

நாற்பது வருடங்கள் வாழ்ந்த ஊர்.திருமணமாகி முதன் முதலில் அந்த ஊரில் பயந்து கொண்டே காலடி எடுத்து வைத்த நாள் ஞாபகம் வந்தது தனத்துக்கு.

பெரிய குடும்பத்துல ஒரே மருமகளாக வாக்கப்பட்டு வந்தபோது இருந்த சொத்துக்கள் ஒவ்வொரு நாத்தனாருக்கும் திருமணம் ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கடைசியில் இவர்களுக்கு என்று மிஞ்சியது அந்த வீடு ஒன்றுதான்.

உறவென்று சொல்லிக் கொள்ளவும் மிச்சம் இருந்தது நாத்தி தனம் ஒருத்திதான். மகன் உத்தியோகத்திற்க ாக தில்லி சென்ற போதும், மகனின் திருமணத்திற்குப் பின் தில்லி சென்ற போதும் தனத்திற்கு அங்கேயே குடியேற ஆசைதான். மேலும், தன் மகன் அங்கேயே சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியேறியபோது தில்லிக்குச் சென்று திரும்பியதில் இருந்தே வீட்டை விற்று விட்டு மகனுடன் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி என்று இருவர் மட்டும் எதற்காக இங்கு இருப்பது என்பது தனத்தின் வாதம். ஆனால் அவள் கணவர்.

பிடிவாதமாக சொந்த ஊரை விட்டு வர மறுத்ததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை. ஆயிற்று அவர் காலமும் முடிந்தபின் உற்றார், உறவினர் யாரும் இல்லாத ஊரில், அந்த வீட்டில் எதற்கு பூதம் காப்பது போல் தனியே இருப்பது என்றுதான் அந்த வீட்டை விற்று விடச் சொல்லி விட்டாள்.

தில்லி வந்து சேர்ந்த போது இரண்டு, மூன்று நாட்கள் மகன், மருமகளின் நண்பர்கள், குறிப்பாக மருமகளின் நண்பர்கள்தான் அதிகம், தனத்தைப் பார்க்க வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டு, தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர்.

ஒரு வாரம் மகன், மருமகள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றதும், பேரனும் பள்ளிக்குச் சென்றதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை தனத்துக்கு. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது? வார இறுதியில் சனி, ஞாயிறு எல்லோரும் தில்லியை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.

அடுத்த வார இறுதியில் தனத்தின் மருமகள் ரேகா, “அத்தை, இங்க நம்ப காம்பவுண்டிலேயே உங்கள மாதிரி பெரியவங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கறாங்க. மாமா கூட சொல்லி இருக்கார். நீங்க அந்த காலத்திலேயே ஆங்கில பேப்பர் எல்லாம் படிப்பீங்களாமே. அது இப்ப உங்களுக்கு கை கொடுக்கும். சின்னச் சின்ன விஷயங்களா மெயில் அனுப்பறது, இண்டர்நெட் பாக்கறது, இப்படி எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீங்க கம்ப்யூட்டர் வகுப்புக்கு போகணும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வகுப்பு எடுப்பாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போகலாம்.” என்றாள்.

“கரும்பு தின்னக் கூலியா ரேகா. எனக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது. நான் ரெடி” என்றாள் தனம்.

“ஹைய்யா, பாட்டி நீங்களும் என்ன மாதிரி ஸ்கூலுக்குப் போகப் போறீங்களா? ஹா, ஹா,
ஹா” என்று கை தட்டி சிரித்தான் பேரன். மறுநாள் முதல் தாயின் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தான் தேவன்.

“அம்மா, வீடு வித்த பணம் எல்லாம் வந்துடுச்சு. அதை உன் பேரில டெபாசிட் செய்திருக்கேன். இந்தாம்மா” என்றான் தேவன்.

“எனக்கெதுக்குப்பா பணம். இதையெல்லாம் நீயே எடுத்துக்கோ” என்றாள் தனம்.

”இல்லம்மா. இப்ப இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும். இதுல இருந்து வர வட்டியை மாசா, மாசம் உன் கிட்ட குடுக்கறேன். உனக்குன்னு சில செலவுகள் இருக்கும்”.

“எனக்கென்னப்பா செலவு, எல்லாம் நீயேதான் செய்துடறயே.” “அப்படி இல்லம்மா. ஒரு கோவிலுக்குப் போனா, ஒரு பிச்சைக்காரனைப் பாத்தா, ஏன் உன் மனசுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதுக்கு செலவு செய்துக்கம்மா. அத்தை,
சித்தி, பெரியம்மா பசங்களுக்கு ஒரு பிறந்த நாள், ஒரு நல்லது கெட்டதுன்னா பணம் அனுப்பி வை.

இதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானேம்மா, இவ்வளவு தூரம் வந்ததுக்காக இதையெல்லாம் நிறுத்த வேண்டாம்மா”என்றான் தேவன்.

”உன்னுடைய திருப்திக்காக இதை வாங்கிக்கறேன் தேவா” என்றாள் தனம். நான்கு, ஐந்து மாதங்களில் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்ப, டைப் செய்ய, மற்றும் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொண்டு விட்டாள் தனம்.

”அம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம ஒரு இடத்துக்குப் போறோம், தயாரா இரும்மா” என்றான் தேவன்.

அதற்குள் கமலேஷ் “பாட்டி உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் தானே” என்றான்.

“என்ன தேவா, என் பிறந்த நாளுக்காகத்தான் வெளியே போறோமா? கொண்டாட்டமெல்லாம்
எதுவும் வேண்டாம்ப்பா”. “கொண்டாட்ட மெல்லாம் எதுவும் இல்லம்மா”

ஞாயிற்றுக்கிழமை அந்த மன வளர்ச்சி குன்றிய
குழந்தைகளின் விடுதிக்குள் நுழைந்ததும், எல்லா குழந்தைகளும் ஒன்று சேர ’HAPPY BIRTHDAY TO PAATTI’ என்று வாய் குழறிக் கொண்டு வாழ்த்தியதைக் கேட்டதும் திக்கு முக்காடிப் போனாள் தனம். அவள் கையாலேயே அந்தக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க வைத்து, அன்று அவர்களுடனேயே மதிய உணவு உண்டு மாலை வீடு திரும்பினர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ரேகா, தனத்தின் அறைக்குள் நுழைந்து, “அத்தை இங்க வாங்க. இது உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் பரிசு” என்றாள். ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டர் மேசையில் அமர்ந்திருந்தது. தனத்துக்கு ஆச்சரியம்.

இதை எப்ப வாங்கினாங்க? எப்ப என் மேசையில்
செட் செய்தாங்க? ஆச்சரியத்துடன் மருமகளைப் பார்த்தாள்.

“அத்தை உங்க மகனோட நண்பர்கிட்ட வீட்டு சாவியை குடுத்துட்டு வந்தோம். வாங்க அத்தை
உக்காருங்க. உங்க கையால முதல்ல ஆன் செய்யுங்க”

”இல்ல ரேகா, நீயே ஆன் செய்.”

“சரி அத்தை. அத்தை! இங்க பாருங்க இதுக்குப்பேருதான் ப்ளாக். இவங்க காமாட்சி அம்மா. இவங்களுக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. இவங்க லட்சுமி அம்மா, இது இவங்களோட ப்ளாக்.

 இது நம்ம ஊர் ராஜப்பா தஞ்சை ப்ளாக் அவர் பதிவை,பகிர்வை அவசியம் படிங்க உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். (சுய விளம்பரம்) இவங்களோட பதிவுகளுக்கு நீங்க கருத்து சொல்லலாம் அத்தை, உங்களுக்கும் வாழ்க்கையில நிறைய அனுபவங்கள் இருக்கும்.
எங்களுக்கும் அப்புறம் வரப்போற சந்ததிகளுக்கும் நல்ல விஷயங்கள எடுத்து சொல்ல யாரும் இல்ல. அதனால நீங்களும் இது
மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, உங்க அனுபவங்கள், சமையல் குறிப்புகள், அப்பறம் உங்க எண்ணங்கள பதிவு செய்யலாம் அத்தை. 

ஆரம்பத்துல கொஞ்சம் கண்ணக்கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கும். போகப் போகச் சுலபமாகிடும். நானும் உங்களுக்கு எப்படி பதிவு போடணும்ன்னு அப்பப்ப சொல்லித்தரேன் அத்தை.” என்று மருமகள் சொன்னதும் தனம்
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.

தனம் மனதுக்குள், *“யாரப்பா சொன்னது, புள்ளைங்கன்னா நம்ம சொத்தை எல்லாம் பிடிங்கிக்கிட்டு நம்பள கொண்டு போய் முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுவாங்கன்னு. இந்த மாதிரி நல்ல பிள்ளைங்களும் இருக்கத்தான் செய்யறாங்கப்பா இந்த உலகத்துல”* என்று சொல்லிக்கொண்டு, *“தேவா, ரேகா, என்னுடைய இத்தன வருடபிறந்த நாட்கள்ள இந்த மாதிரி மகிழ்ச்சியா நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி”.*

ரேகாவும், தேவாவும் ஒன்றாக, *“நன்றி எல்லாம் சொல்லக்கூடாது, நாங்களும் கடமைக்காக செய்யல. உண்மையா ஆசையாதான் செய்யறோம்”* என்றனர்.

தனக்கும் புரிந்தது போல் “ஆமாம், ஆமாம்” என்றான் குட்டிப்பையன் கமலேஷ். நிறைவான மனத்துடன், தன் மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்கத் தயாரானாள் தனம்...

படித்ததில் பிடித்தது.

Tuesday, August 29, 2017

வாழ்க்கை தத்துவம் - சிறு கதை ! எதுவும் நம்மோடு வரப்போவதில்லை!



அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு ஒரு சிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது. மெதுவாகவும், மிகவும் கவனமாகவும் சென்றது.

செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம் மேலும் தரையில் ஒரு பிளவைப் பார்த்தவுடன் அது சாமர்த்தியமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை இழுத்துச் சென்றது. மேலும் பல தடங்கல்கள் அது தன் திசையை சற்றே மாற்றி வெற்றிகரமாக முன்னேறியது.

ஒருமணி நேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம் செய்தது. இதை கண்ட அவர் வியந்து போனார்.

ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது.

கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து அதிசயித்தார். ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன.

எறும்பு இறுதியில் தனது இருப்பிட இலக்கை அடைந்தது. அது எறும்புப் புற்று எனப்படும் ஒரு சிறிய, ஆனால் ஆழமான குழி அருகே வந்தது எறும்பால் அந்த இலையுடன் குழியினுள் செல்ல இயல வில்லை. அதுமட்டுமே செல்ல முடிந்தது!

தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டியதாயிற்று. இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!

மனித வாழ்க்கையும் இவ்வாறு தான். மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை
ஏற்படுத்திக் கொள்கிறான்.

அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப் பலப்பல…

இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில், அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத் தான் செல்ல வேண்டும்.

எறும்பிடமும் பாடம் கற்கலாம்.

வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம். 

எதுவும் நம்மோடு வரப்போவதில்லை!

புரிந்தால் மதி!

புரிந்துகொள்ள 

மறுத்தால் விதி!!

Thursday, August 24, 2017

ஆசிரியர் அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்சாண்டர் !

பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது

ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின்  குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.
 

மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார் மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்னபோது மன்னன் குறிக்கிட்டு சொன்னான் இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்க காசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான் அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான் அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற  மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர் ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான் ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக் கைக்கு பங்கம் விளை விக்காமல் அவன் நம்பிக் கையை காப்பாற்றினான். 

Always Teachers are Wondering in the world.

Sunday, August 20, 2017

சந்தேகம் !

ஒரு மன்னரின் மகன் ஒரு முறை அரண்மனை உப்பரிகையில் நின்று காற்று வாங்கியபோது, அந்த வழியாகக் கடந்து போன ஒருவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான்.


காரணம், அவன் தன்னைப் போலவே தோற்றத்தில் இருப்பதால்தான்.

 ரு வேளை அவனது தயார் இந்த அரண்மனையில் பணியாற்றி, தனது தந்தைக்கும் அந்தப் பெண்ணிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அதன் மூலம் இவன் பிறந்திருப்பானோ என்ற சந்தேகம் வரத் தொடங்கியது.

அவனை அரண்மனை ஊழியர்களைக் கொண்டு அழைத்து வந்து, தனது சந்தேகத்தைத் தீர்க்கும் முகமாக, “ ஏம்பா, உனது தாயார் இந்த அரண்மனையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறாரா? “ என்று கேட்டான். 

 அதற்கு அவனோ, எனது தாயார் வேலை செய்யவில்லை. 

ஆனால் எனது தந்தை இந்த அரண்மனையில் சிலகாலம் பணியாற்றி இருக்கிறார் என்றானாம்.

 இப்படித்தான் சிலர் மற்றவர்களை குற்றம் கண்டுபிடிக்கவும், மட்டம் தட்டவும் துடியாய் துடிக்கிறார்கள்.

 உண்மை நிலை வேறு என்று வரும்போது, ஓடிவிடுகிறார்கள்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.!!!!!!!!



ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார்.

உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.!!!!!!!!

நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, March 28, 2017

பெருந்தன்மை!

♥என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்!

♥என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ப்பக்க டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸுடன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்...

♥திடீரென்று டயர் தேயும் ‘கிரீச்’ சத்தம். வேகமாக வந்து சடன் பிரேக் போட்ட ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த இளம் பெண் மிக நாகரிகமாக இருந்தாள். ஏதோ யோசனையில் ஓட்டி வந்தவள், மிக அருகில் வந்ததும்தான் கிழவரைக் கவனித்திருக்க வேண்டும். ‘‘யோவ்! பாத்து வரக் கூடாதா? அன்ன நடை நடக்கிறியே, ராஸ்கல்!’’ - கோபத்துடன் சீறிவிட்டு, அதே வேகத்தில் ஸ்கூட்டி யைச் சீறிக் கிளப்பிப் போனாள்.

♥ஓர் அழகிய நாகரீகமான படித்த பெண்ணிட மிருந்து அத்தனை மூர்க்கமான, நாகரிகமற்ற வார்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோய் பெரியவரின் முகத்தைப் பார்த்தேன். தன் மீது தவறு இல்லாதபோது, அந்தப் பெண் அப்படிப் பேசியது அவரை நியாயமாகக் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் முகத்தில் கோபம் இல்லை. சிறு சுளிப்புகூட இல்லை. இதற்குள் நண்பர் விக்ரமின் கார் வந்து நிற்க, நான் யோசனையுடன் அதில் ஏறிக் கொண்டேன். மனசு ஆறவில்லை.

♥நண்பரிடம் நடந்ததை விவரித்தேன். ‘‘இந்தக் காலப் பெண்கள் வயசுக்குக்கூட மரியாதை கொடுக்காம கண்டபடி பேசறாங்களே விக்ரம்? கலாசார சீரழிவுனு இதைச் சொல்லலாமா?’’

♥விக்ரம் சொன்னார்: ‘‘இப்படிப் பேசிட்டுப் போன ஒரு பெண்ணை வைத்தோ, மொத்த தமிழ்ப் பெண் களையும் நாம் மதிப்பிட்டுவிடக் கூடாது இளங்கோ சார்! சில பெண்கள் இப்படிப் பண்பாடில்லாம நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பண்பு குறையாத, பெண்மையின் மேன்மையைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை!’’

♥என் மனசில் அந்தக் காட்சி திரும்பத் திரும்ப வந்தது. இரு சக்கர வாகனத்தில் வலது காலைத் தரையில் ஊன்றி நின்றாள் அவள். கோபத்தில் கொதித்தாள்.

♥ மறுநாள்... அதே சாலை யோர மரத்தடி... செருப்பு தைக்கிற முதியவர் எனக்குச் சற்றுத் தள்ளி நின்று, யாரையோ எதிர்பார்ப்பவர் போல தூரத்திலிருந்து வருகிற வாகனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஒருக்கால் நேற்று அவரை வசை பாடிவிட்டுப் போன பெண்ணை இன்று தடுத்து நிறுத்தி மனசில் தைக்கிற மாதிரி புத்தி சொல்வது அவருடைய நோக்கமாக இருக்குமோ? அதோ அந்தப் பெண்ணின் வாகனம்!

♥பெரியவர் கையை நீட்டி அந்த வாகனத்தை நிறுத்தினார். எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டது. நேற்று பெரியவரை அவமதித்த அந்தப் பெண்ணுக்கு இன்று சரியான டோஸ் கிடைக்கப் போகிறது. அவள் தன் வாகனத்தை நிறுத்தினாள். முகத்தில் பயம் தெரிந்தது. முந்தின நாள் அவரைத் திட்டிய தற்கு இன்று வம்பு வளர்க்கக் கிழவன் வண்டியை நிறுத்துகிறானோ?

♥‘‘என்னய்யா?’’ என்று கேட்டாள் அவள். கிழவர் அவளருகில் சென்றார். தன் கையிலிருந்த ஒரு பொருளை அவளிடம் நீட்டினார். அது ஒரு செல்போன்!

♥‘‘நேத்து நீங்க இங்கே வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினீங்களே, அப்ப, இது கீழே விழுந்திடுச்சும்மா. நீங்க கவனிக்காம வேகமாகப் போயிட்டீங்க. எடுத்து வெச்சேன். வழக்கமா இந்த நேரத்துக்கு வருவீங்களேனு காத்துட்டிருந்தேன். இந்தாங்கம்மா!’’

♥அவள் முகம் வியப்பால் விரிந்தது. அது ஒரு விலையுயர்ந்த செல்போன். அதை எங்கே காணடித்தோம் என்று ஒரு நாள் முழுவதும் அவள் எங்கெங்கோ தேடியிருக்கக்கூடும். பரவசத்தோடும் அதே நேரம் இந்தப் பெரியவரை முந்தின நாள் தரக்குறைவாகப் பேசிவிட்டோமே என்கிற குற்ற உணர்வோடும் அப்படியே நின்றாள்.

♥திரும்பிச் சென்ற பெரியவரை நோக்கி, ‘‘ஒன் மினிட் சார்’’ என்று நிறுத்தி, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினாள். ‘‘எதுக்குமா குழந்தை?’’ என்று கனிவாகக் கேட்டார் அவர். ‘‘இந்த செல்போன் வெலை என்னா தெரியுமா, செவன்டீன் தௌஸண்ட். , பதினேழாயிரம் ரூபா. இது காணாமப் போயிடுச்சுன்னே நெனச்சிட்டேன். எடுத்து வெச்சிருந்து கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ப்ளீஸ் வாங்கிக்கோங்க!’’ ‘‘இல்லேம்மா, கண்ணுக்கு முன்னே ஒங்க பொருள் கை தவறிக் கீழே விழுந்துச்சு. அதை ஒங்ககிட்டே ஒப்படைச்சேன், அவ்ளோதான். நல்லா இருங்கம்மா!’’

♥சிறிது நேரம் அப்படியே நின்றவள், மெள்ள தன் வாகனத்தை ஓடவிட்டாள். முந்தினம் தான் அவரைக் கண்டபடி திட்டிப் பேசியது மிகவும் தவறு என்று அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள் என்று தோன்றியது எனக்கு.

♥நான் அந்தப் பெரியவரை நெருங்கினேன். ‘‘நேத்து நடந்ததை நானும் பார்த்தேன். அந்தப் பொண்ணு உங்களை தரக்குறைவாத் திட்டிப் பேசிச்சு. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாம அந்தப் பொண்ணுக்கு உதவி செஞ்சு, ரொம்ப மரியாதை கொடுத்தும் பேசிட்டு வர்றீங்களே?’’ என்று கேட்டேன்.

♥சிரித்தவர், ‘‘என் பேத்தி என்னைத் திட்டினா நான் கோவிச்சுக்குவேனா? நேத்து திட்டின பொண்ணு, இன்னிக்கு என்னை ‘சார்’னு சொல்லுது. என்ன பேசறோம்னே தெரியாத வயசு. இதுக் கெல்லாம் வருத்தப்பட்டு திருப்பித் திட்டினா நான் என்ன மனுஷன்? வயசு ஏற ஏற, பக்குவம், மரியாதை எல்லாம் தானா வந்துடும். கொழந்தைங்க அது... சின்னப் பூவு! இன்னும் கல்யாணம் காச்சியெல்லாம் ஆகலை. எல்லாம் சரியாப் போயிடும்!’’
♥விக்ரமின் காரில் போகும்போது மனசு லேசாக இருந்தது. செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம், லேசாகக் கிழிந்திருந்த என் மனசையும் பக்குவமாகத் தைத்துவிட்டதாக உணர்ந்தேன்

Wednesday, March 15, 2017

நிர்வாகத் திறமை !

நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.


அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.


சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.


இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.


இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.


உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.


குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.


இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?


தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, 

"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.


இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

---

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...