Total Pageviews

Sunday, November 5, 2017

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

”அம்மா, அடுத்த சனிக்கிழமை நாம ஊருக்குப் போக டிக்கெட் வாங்கிட்டேன்.”.

“சரிப்பா” “அம்மா, இங்க இருக்கற பொருட்கள எல்லாம் யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா”

“நானே உன் கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் தேவா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப்  பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில போட்டோக்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாம்ன்னு இருக்கேன்.”

”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விக்கவும் ஏற்பாடு செய்துட்டிருக்கேன். அது விஷயமா கொஞ்சம் வெளியேபோயிட்டு வந்துடறேன்.”

தேவனின் நிழல் மறையும் முன்னே, “ஏ தனம்!

உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? வீட்டை
விக்கச் சொல்லிட்டியா?

உனக்குன்னு இருக்கறதே இந்த வீடு ஒண்ணு
தான். அதையும் வித்துட்டு என்ன செய்யப்போற. உன் புள்ள எல்லா பணத்தையும் புடுங்கிக்கிட்டு உன்ன நடுத்தெருவுல விட்டுட்டா என்ன செய்வ? பேசாம இங்கயே இரு. தில்லி கண்காணாத ஊரு.
அங்க போய் என்ன செய்வ. உனக்கு என்ன தெரியும்?” என்று கத்தினாள் தாயம்மா.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க அக்கா. மருமக காதுல விழப் போகுது” “விழட்டுமே. நாட்டுல நடக்காததயா சொல்லிட்டேன். உன் மருமக வேற
பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய வேலையில இருக்குறா. 

இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா, அப்பா, உறவுக்காரங்க எல்லாம் தேவையே இல்ல. சம்பளமில்லாம ஒரு வேலைக்காரி கிடைக்கறான்னு நினைக்கறாளோ என்னவோ உன் மருமக. உடம்புல தெம்பு இல்லாம போனா அப்ப தெரியும் உன் கதி.

சாரையெல்லாம் எடுத்துக்கிட்டு சக்கையை தூரப் போடும் போது தெரியும் என் பேச்சில எவ்வளவு உண்மை இருக்குன்னு”. விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“இங்க பாருங்க அக்கா. என் புள்ள மேலயும், என் மருமக மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அத்தோட எனக்கு இருக்கறது ஒரே புள்ள. அவன விட்டுட்டு நான் ஏன் இங்க தனியா இருக்கணும்.”

“ஏன், உனக்கு உன் புருஷன் வாழ்ந்த ஊர்ல இருக்கணும்ன்னு தோணவே இல்லையா?” ”எங்க இருந்தா என்ன அக்கா? உங்க தம்பியோட வாழ்ந்த அருமையான நாட்கள மனசுல அசை போட்டுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கைய கழிச்சுடுவேன்”.

“ம்... எப்படியோ போ. எனக்கென்ன, எனக்கு தோணினத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். நான் நாளைக்கு கிளம்பறேன். காரியமெல்லாம்தான் முடிஞ்சாச்சே. உனக்கு எப்பவாவது நிற்க ஒரு நிழல் வேணும்ன்னு தோணிச்சுன்னா, தேவைப்பட்டா தாராளமா என் வீட்டுக்கதவு உனக்காக திறந்தே இருக்கும்.”

“அந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா நான் உங்களைத் தேடி வரேன் அக்கா” என்று சொல்லி நாத்தியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் தனம்.

இவர்கள் பேசியதில் என்ன புரிந்ததோ, தனத்தின்
நான்கு வயது பேரன் கமலேஷ் தன் மழலைக் குரலில், “பாட்டி நாளைக்கு நீங்க எங்க கூட ஊருக்கு வந்துடணும்” என்றான்.

“கண்டிப்பா உங்க கூடதான் வரப் போகிறேன்” என்றாள் தனம்.

மே மாத வெயில் சுட்டெரிக்க, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் தனம். ’ஏன் இப்படி ஒரு எண்ணம் எல்லாருக்கும். ஊர் உலகில் நடப்பதைத் தானே சொல்கிறேன் என்கிறார்கள். ஏன் ஊர், உலகத்துல நல்ல பிள்ளைங்களே இருக்கமாட்டாங்களா?', என் பிள்ளை அப்படி ஒரு நல்ல பிள்ளையா இருப்பான்னு நான் நம்பறேன்.

தங்கை கமலா என்னடான்னா, ‘அக்கா ஜாக்கிரதை, உன் பிள்ளை நல்லவனா இருக்கலாம். ஆனா முழுக்க நம்பிடாத. உனக்குன்னு கொஞ்சம் பணம், காசு வெச்சுக்கோன்னு’

சொன்னா. ஒரு வேளை நான் இவங்களுக்கெல்லாம் பாரமா வந்துடுவேனோன்னு பயப்படறாங்களோ. பக்கத்து வீட்டு பாட்டி கூட, ‘பேசாம இங்கயே இரு தனம். புள்ளயை நம்பி போகாத’ ன்னு சொல்றாங்க. கோவில் குருக்களும் இப்படியே சொன்னாரே. நம்ப புள்ளயை  நாமளே நம்பலைன்னா அப்புறம் வேற யார் நம்புவாங்க. இவங்களுக்கெல்லாம் பூக்கார பொன்னம்மா எவ்வளவோ தேவல. ’யார் பேச்சையும் கேக்காதீங்கம்மா.

உங்க மனசு என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லாதாம்மா இருப்பீங்க. உங்களுக்கு நல்லதுதாம்மா நடக்கும்’ என்றாளே. எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்ன்னு
பெரியவங்க சொல்லுவாங்களே.

கண்டிப்பா எனக்கு எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் என்று பலவாறு யோசித்தாள் தனம்.

நாற்பது வருடங்கள் வாழ்ந்த ஊர்.திருமணமாகி முதன் முதலில் அந்த ஊரில் பயந்து கொண்டே காலடி எடுத்து வைத்த நாள் ஞாபகம் வந்தது தனத்துக்கு.

பெரிய குடும்பத்துல ஒரே மருமகளாக வாக்கப்பட்டு வந்தபோது இருந்த சொத்துக்கள் ஒவ்வொரு நாத்தனாருக்கும் திருமணம் ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கடைசியில் இவர்களுக்கு என்று மிஞ்சியது அந்த வீடு ஒன்றுதான்.

உறவென்று சொல்லிக் கொள்ளவும் மிச்சம் இருந்தது நாத்தி தனம் ஒருத்திதான். மகன் உத்தியோகத்திற்க ாக தில்லி சென்ற போதும், மகனின் திருமணத்திற்குப் பின் தில்லி சென்ற போதும் தனத்திற்கு அங்கேயே குடியேற ஆசைதான். மேலும், தன் மகன் அங்கேயே சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியேறியபோது தில்லிக்குச் சென்று திரும்பியதில் இருந்தே வீட்டை விற்று விட்டு மகனுடன் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி என்று இருவர் மட்டும் எதற்காக இங்கு இருப்பது என்பது தனத்தின் வாதம். ஆனால் அவள் கணவர்.

பிடிவாதமாக சொந்த ஊரை விட்டு வர மறுத்ததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை. ஆயிற்று அவர் காலமும் முடிந்தபின் உற்றார், உறவினர் யாரும் இல்லாத ஊரில், அந்த வீட்டில் எதற்கு பூதம் காப்பது போல் தனியே இருப்பது என்றுதான் அந்த வீட்டை விற்று விடச் சொல்லி விட்டாள்.

தில்லி வந்து சேர்ந்த போது இரண்டு, மூன்று நாட்கள் மகன், மருமகளின் நண்பர்கள், குறிப்பாக மருமகளின் நண்பர்கள்தான் அதிகம், தனத்தைப் பார்க்க வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டு, தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர்.

ஒரு வாரம் மகன், மருமகள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றதும், பேரனும் பள்ளிக்குச் சென்றதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை தனத்துக்கு. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது? வார இறுதியில் சனி, ஞாயிறு எல்லோரும் தில்லியை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.

அடுத்த வார இறுதியில் தனத்தின் மருமகள் ரேகா, “அத்தை, இங்க நம்ப காம்பவுண்டிலேயே உங்கள மாதிரி பெரியவங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கறாங்க. மாமா கூட சொல்லி இருக்கார். நீங்க அந்த காலத்திலேயே ஆங்கில பேப்பர் எல்லாம் படிப்பீங்களாமே. அது இப்ப உங்களுக்கு கை கொடுக்கும். சின்னச் சின்ன விஷயங்களா மெயில் அனுப்பறது, இண்டர்நெட் பாக்கறது, இப்படி எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீங்க கம்ப்யூட்டர் வகுப்புக்கு போகணும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வகுப்பு எடுப்பாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போகலாம்.” என்றாள்.

“கரும்பு தின்னக் கூலியா ரேகா. எனக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது. நான் ரெடி” என்றாள் தனம்.

“ஹைய்யா, பாட்டி நீங்களும் என்ன மாதிரி ஸ்கூலுக்குப் போகப் போறீங்களா? ஹா, ஹா,
ஹா” என்று கை தட்டி சிரித்தான் பேரன். மறுநாள் முதல் தாயின் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தான் தேவன்.

“அம்மா, வீடு வித்த பணம் எல்லாம் வந்துடுச்சு. அதை உன் பேரில டெபாசிட் செய்திருக்கேன். இந்தாம்மா” என்றான் தேவன்.

“எனக்கெதுக்குப்பா பணம். இதையெல்லாம் நீயே எடுத்துக்கோ” என்றாள் தனம்.

”இல்லம்மா. இப்ப இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும். இதுல இருந்து வர வட்டியை மாசா, மாசம் உன் கிட்ட குடுக்கறேன். உனக்குன்னு சில செலவுகள் இருக்கும்”.

“எனக்கென்னப்பா செலவு, எல்லாம் நீயேதான் செய்துடறயே.” “அப்படி இல்லம்மா. ஒரு கோவிலுக்குப் போனா, ஒரு பிச்சைக்காரனைப் பாத்தா, ஏன் உன் மனசுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதுக்கு செலவு செய்துக்கம்மா. அத்தை,
சித்தி, பெரியம்மா பசங்களுக்கு ஒரு பிறந்த நாள், ஒரு நல்லது கெட்டதுன்னா பணம் அனுப்பி வை.

இதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானேம்மா, இவ்வளவு தூரம் வந்ததுக்காக இதையெல்லாம் நிறுத்த வேண்டாம்மா”என்றான் தேவன்.

”உன்னுடைய திருப்திக்காக இதை வாங்கிக்கறேன் தேவா” என்றாள் தனம். நான்கு, ஐந்து மாதங்களில் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்ப, டைப் செய்ய, மற்றும் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொண்டு விட்டாள் தனம்.

”அம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம ஒரு இடத்துக்குப் போறோம், தயாரா இரும்மா” என்றான் தேவன்.

அதற்குள் கமலேஷ் “பாட்டி உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் தானே” என்றான்.

“என்ன தேவா, என் பிறந்த நாளுக்காகத்தான் வெளியே போறோமா? கொண்டாட்டமெல்லாம்
எதுவும் வேண்டாம்ப்பா”. “கொண்டாட்ட மெல்லாம் எதுவும் இல்லம்மா”

ஞாயிற்றுக்கிழமை அந்த மன வளர்ச்சி குன்றிய
குழந்தைகளின் விடுதிக்குள் நுழைந்ததும், எல்லா குழந்தைகளும் ஒன்று சேர ’HAPPY BIRTHDAY TO PAATTI’ என்று வாய் குழறிக் கொண்டு வாழ்த்தியதைக் கேட்டதும் திக்கு முக்காடிப் போனாள் தனம். அவள் கையாலேயே அந்தக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க வைத்து, அன்று அவர்களுடனேயே மதிய உணவு உண்டு மாலை வீடு திரும்பினர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ரேகா, தனத்தின் அறைக்குள் நுழைந்து, “அத்தை இங்க வாங்க. இது உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் பரிசு” என்றாள். ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டர் மேசையில் அமர்ந்திருந்தது. தனத்துக்கு ஆச்சரியம்.

இதை எப்ப வாங்கினாங்க? எப்ப என் மேசையில்
செட் செய்தாங்க? ஆச்சரியத்துடன் மருமகளைப் பார்த்தாள்.

“அத்தை உங்க மகனோட நண்பர்கிட்ட வீட்டு சாவியை குடுத்துட்டு வந்தோம். வாங்க அத்தை
உக்காருங்க. உங்க கையால முதல்ல ஆன் செய்யுங்க”

”இல்ல ரேகா, நீயே ஆன் செய்.”

“சரி அத்தை. அத்தை! இங்க பாருங்க இதுக்குப்பேருதான் ப்ளாக். இவங்க காமாட்சி அம்மா. இவங்களுக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. இவங்க லட்சுமி அம்மா, இது இவங்களோட ப்ளாக்.

 இது நம்ம ஊர் ராஜப்பா தஞ்சை ப்ளாக் அவர் பதிவை,பகிர்வை அவசியம் படிங்க உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். (சுய விளம்பரம்) இவங்களோட பதிவுகளுக்கு நீங்க கருத்து சொல்லலாம் அத்தை, உங்களுக்கும் வாழ்க்கையில நிறைய அனுபவங்கள் இருக்கும்.
எங்களுக்கும் அப்புறம் வரப்போற சந்ததிகளுக்கும் நல்ல விஷயங்கள எடுத்து சொல்ல யாரும் இல்ல. அதனால நீங்களும் இது
மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, உங்க அனுபவங்கள், சமையல் குறிப்புகள், அப்பறம் உங்க எண்ணங்கள பதிவு செய்யலாம் அத்தை. 

ஆரம்பத்துல கொஞ்சம் கண்ணக்கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கும். போகப் போகச் சுலபமாகிடும். நானும் உங்களுக்கு எப்படி பதிவு போடணும்ன்னு அப்பப்ப சொல்லித்தரேன் அத்தை.” என்று மருமகள் சொன்னதும் தனம்
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.

தனம் மனதுக்குள், *“யாரப்பா சொன்னது, புள்ளைங்கன்னா நம்ம சொத்தை எல்லாம் பிடிங்கிக்கிட்டு நம்பள கொண்டு போய் முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுவாங்கன்னு. இந்த மாதிரி நல்ல பிள்ளைங்களும் இருக்கத்தான் செய்யறாங்கப்பா இந்த உலகத்துல”* என்று சொல்லிக்கொண்டு, *“தேவா, ரேகா, என்னுடைய இத்தன வருடபிறந்த நாட்கள்ள இந்த மாதிரி மகிழ்ச்சியா நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி”.*

ரேகாவும், தேவாவும் ஒன்றாக, *“நன்றி எல்லாம் சொல்லக்கூடாது, நாங்களும் கடமைக்காக செய்யல. உண்மையா ஆசையாதான் செய்யறோம்”* என்றனர்.

தனக்கும் புரிந்தது போல் “ஆமாம், ஆமாம்” என்றான் குட்டிப்பையன் கமலேஷ். நிறைவான மனத்துடன், தன் மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்கத் தயாரானாள் தனம்...

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...