Total Pageviews

Thursday, April 28, 2016

மரணமற்ற பெருவாழ்வு

மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை எந்த சந்தர்ப்பத்திலும் நெருங்கக் கூடாது. அத்தகைய வாழ்வை நான் பெற என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான்.

முனிவர், ‘‘மன்னா! அதோ தெரியும் சிறிய குகை வழியே சென்றால் ஒரு நீர்த் தடாகத்தைக் காணலாம். அதில் உள்ள தீர்த்தத்தை அருந்தினால் நீ கேட்ட மரணமற்ற பெருவாழ்வு ஸித்திக்கும்!’’ என்று சொல்லி, புன்னகையுடன் வழிகாட்டினார்.

மன்னன், வேகமாக அந்தக் குகை வழியே சென்று முனிவர் சொன்ன தடாகத்தை அடைந்தான். அதன் கரையில் பறவை ஒன்று சோகமாக அமர்ந்திருந்தது. மன்னன் அதைப் பொருட்படுத்தாமல் தடாகத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் எடுத்துக் குடிக்க முற்பட்டான். வேகமாகப் பறந்து வந்த அந்தப் பறவை நீரைப் பருகவிடாமல் அரசனைத் தடுத்தது.

‘‘முட்டாள் பறவையே... ஏன் தடுக்கிறாய்?’’ என்று கோபத்துடன் கேட்டபடி பறவையைக் கீழே தள்ளி விட்டான் மன்னன். மண்ணில் விழுந்த பறவை எழுந்து அதிசயிக்கத் தக்க வகையில் பேசத் தொடங்கியது!

‘‘அரசனே, நீதான் முட்டாள்! சொல்கிறேன், கேள். உன்னைப் போல நானும் பறவை என்ற முறையில் பல போகங்களை அனுபவித்து விட்டேன். பறவைகள் அனைத்துக்கும் நான் தலைவனாக உள்ளேன். என்னுடனும், எனக்கு முன்னரும் பிறகும் பிறந்த பறவைகள் எல்லாம் பல இறக்கவும், சில வாழவும் பார்த்து விட்டேன். நான் தின்று பார்க்காத உணவு, தின்பண்டம் எதுவுமில்லை. நான் ஒரு முதிர்ந்த பறவை. எனக்குப் பிறந்த அத்தனை குஞ்சுகளும் அதன் சந்ததிகளும் இறந்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த நிலையில் சோக வாழ்வு என்னைச் சூழ்ந்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம் சாகாவரம் தரும் இந்தத் தடாக நீரை ஒரு முறை நான் பருகியதுதான். என் வயது சுமார் 300 ஆண்டுகள். இப்போது வாழ்க்கையை வெறுத்து, நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தும் சாக முடியவில்லை. நான் செய்த தவறை நீயும் செய்து என்னைப் போல் துன்பப்பட வேண்டாம்.

இந்தத் தடாகத்தின் தண்ணீரை நீ அருந்தினால் பல ஆண்டுகள் வாழ்வாய். ஆனால், உன் உயிருக்கு உயிரான மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், அவர்களின் சந்ததிகள், நண்பர்கள்- இவர்கள் யாவரும் உன் கண் முன்பாகவே இறந்து போவார்கள். இந்த சோகங்களைத் தாங்கும் இதயம் உனக்கு உண்டா? ஆகவே, ‘நீடூழி வாழப் போகிறேன்’ என்று இந்தச் சகதியில் சிக்கி, மனதளவில் மாண்டு விடாதே, போய் விடு!’’ என்று அந்தப் பறவை சோகத்துடன் சொன்னது.

பறவையின் இந்த அறிவுரை மன்னனின் கண்களைத் திறக்கச் செய்தன. பறவைக்கு இதயபூர்வமான நன்றியைக் கூறியவன், அந்த நிமிடமே தனது அரச போக வாழ்க்கையைத் துறக்கும் முடிவுடன் நாடு திரும்பினான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.


எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப்பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும்அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

(சுகி சிவம் எழுத்தி
ல் ரசித்தது)

Monday, April 18, 2016

அன்பே கடவுள் !


தேநீர் குடிக்கலாம்...

ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு....நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்..

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது..

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது..ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும்..

அவர்கள் பொருட் படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவை கண்டார்கள்.. அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது..
ஆனால் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது..

"அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை" ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்.. நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம்...என்றார் மேஜர்..

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்..சார், இது ஒரு தேனீர் கடை தான்..உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும். நாம் பூட்டை உடைக்கலாமே...என்றார்..

இது ஒரு தர்ம சங்கட நிலை அவருக்கு.. தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா என்று குழம்பினார்...

சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்..

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே ஒரு தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது..

எல்லோரும் தேனீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்து புறப்பட தயாராகினார்கள்..

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..

இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து , புறப்பட்டார்..

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது..

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை,,ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்..

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார்.

எல்லோரும் தேனீர் பிஸ்கெட் உணடு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.. மிகவும் நிறைந்த நெஞ்சுடன் கடவுள் பக்தியும் இருந்தது..

.. ஹே தாத்தா... கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்.....என்று...

அப்படி சொல்லாதீர்கள் மகனே..கடவுள் நிச்சயம் இருக்கிறார்..அதற்கு என்னிடம் சான்றே இருக்கு..

மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் எனது மகன் மிகவும் அதிக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டான்...

நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..

என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..

கடவுளிடம் கதறி அழுதேன்.. ஐயா கனவாங்களே , கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்.. நான் அழுது ஆற்றிக் கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..

கடவுள் இருக்கிறார்..என்றும் இருக்கிறார்.. இதை விட என்ன சொல்ல..
என்று முடித்தார் அவர்..

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது..

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன..

அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந்தார்கள்..

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்..

அந்த முதியவரை தழுவிக்கொண்டு, ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்..கடவுள் இருக்கிறார்... தாத்தா... உங்கள் தேனீர் மிக அபாரம்...

இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஒரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை..

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்..

நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...என்பதே..

இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..மார்க்கம் கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி.

அன்பின் வடிவே தேசமாகட்டும்.

உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது !




தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மாதவன். மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். 

வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். 

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.


Friday, April 15, 2016

சிந்தனை செய் மனமே......!!!

 
சிந்தனை செய் மனமே......!!!

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

Friday, April 8, 2016

அன்பு !

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.

“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.

ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.

ராணி வெட்கி தலை குனிகிறாள்.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

Thanks to C.malathi

Sunday, March 27, 2016

வெளிச்சம் !



ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். 

அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார்.

அவருடைய பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார்.

அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார் ஜென் துறவி.

‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’



மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...