Total Pageviews

Thursday, April 28, 2016

மரணமற்ற பெருவாழ்வு

மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை எந்த சந்தர்ப்பத்திலும் நெருங்கக் கூடாது. அத்தகைய வாழ்வை நான் பெற என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான்.

முனிவர், ‘‘மன்னா! அதோ தெரியும் சிறிய குகை வழியே சென்றால் ஒரு நீர்த் தடாகத்தைக் காணலாம். அதில் உள்ள தீர்த்தத்தை அருந்தினால் நீ கேட்ட மரணமற்ற பெருவாழ்வு ஸித்திக்கும்!’’ என்று சொல்லி, புன்னகையுடன் வழிகாட்டினார்.

மன்னன், வேகமாக அந்தக் குகை வழியே சென்று முனிவர் சொன்ன தடாகத்தை அடைந்தான். அதன் கரையில் பறவை ஒன்று சோகமாக அமர்ந்திருந்தது. மன்னன் அதைப் பொருட்படுத்தாமல் தடாகத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் எடுத்துக் குடிக்க முற்பட்டான். வேகமாகப் பறந்து வந்த அந்தப் பறவை நீரைப் பருகவிடாமல் அரசனைத் தடுத்தது.

‘‘முட்டாள் பறவையே... ஏன் தடுக்கிறாய்?’’ என்று கோபத்துடன் கேட்டபடி பறவையைக் கீழே தள்ளி விட்டான் மன்னன். மண்ணில் விழுந்த பறவை எழுந்து அதிசயிக்கத் தக்க வகையில் பேசத் தொடங்கியது!

‘‘அரசனே, நீதான் முட்டாள்! சொல்கிறேன், கேள். உன்னைப் போல நானும் பறவை என்ற முறையில் பல போகங்களை அனுபவித்து விட்டேன். பறவைகள் அனைத்துக்கும் நான் தலைவனாக உள்ளேன். என்னுடனும், எனக்கு முன்னரும் பிறகும் பிறந்த பறவைகள் எல்லாம் பல இறக்கவும், சில வாழவும் பார்த்து விட்டேன். நான் தின்று பார்க்காத உணவு, தின்பண்டம் எதுவுமில்லை. நான் ஒரு முதிர்ந்த பறவை. எனக்குப் பிறந்த அத்தனை குஞ்சுகளும் அதன் சந்ததிகளும் இறந்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த நிலையில் சோக வாழ்வு என்னைச் சூழ்ந்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம் சாகாவரம் தரும் இந்தத் தடாக நீரை ஒரு முறை நான் பருகியதுதான். என் வயது சுமார் 300 ஆண்டுகள். இப்போது வாழ்க்கையை வெறுத்து, நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தும் சாக முடியவில்லை. நான் செய்த தவறை நீயும் செய்து என்னைப் போல் துன்பப்பட வேண்டாம்.

இந்தத் தடாகத்தின் தண்ணீரை நீ அருந்தினால் பல ஆண்டுகள் வாழ்வாய். ஆனால், உன் உயிருக்கு உயிரான மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், அவர்களின் சந்ததிகள், நண்பர்கள்- இவர்கள் யாவரும் உன் கண் முன்பாகவே இறந்து போவார்கள். இந்த சோகங்களைத் தாங்கும் இதயம் உனக்கு உண்டா? ஆகவே, ‘நீடூழி வாழப் போகிறேன்’ என்று இந்தச் சகதியில் சிக்கி, மனதளவில் மாண்டு விடாதே, போய் விடு!’’ என்று அந்தப் பறவை சோகத்துடன் சொன்னது.

பறவையின் இந்த அறிவுரை மன்னனின் கண்களைத் திறக்கச் செய்தன. பறவைக்கு இதயபூர்வமான நன்றியைக் கூறியவன், அந்த நிமிடமே தனது அரச போக வாழ்க்கையைத் துறக்கும் முடிவுடன் நாடு திரும்பினான்.

No comments:

Post a Comment

துன்ப மூட்டை !