Total Pageviews

Monday, April 18, 2016

உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது !




தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மாதவன். மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். 

வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். 

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.


Friday, April 15, 2016

சிந்தனை செய் மனமே......!!!

 
சிந்தனை செய் மனமே......!!!

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

Friday, April 8, 2016

அன்பு !

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.

“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.

ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.

ராணி வெட்கி தலை குனிகிறாள்.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

Thanks to C.malathi

Sunday, March 27, 2016

வெளிச்சம் !



ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். 

அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார்.

அவருடைய பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார்.

அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார் ஜென் துறவி.

‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’



Saturday, March 26, 2016

விவசாயி !

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்: 

“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Wednesday, March 23, 2016

அறிவும் திறமையும் !

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல
goundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவு
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் . 

வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு. 

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.

அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார். 

" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்.
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் . 

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? 

" இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? " 
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
"இதென்னப்பா,கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது. 

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் . 

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .

" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " . 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் . 

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 

பண்டிதர் உடனே ஆமாம் என்றார்
.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.

"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார். 

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.

"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார். 

"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது. 

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.!!!!!!!

Saturday, March 19, 2016

தேவதை !




இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
 
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
 
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
 
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
 
அவள் சொன்னாள்
 
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
 
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
 
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
 
°•○●
 
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
 
அவள் கேட்டாள்
 
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
 
அவள் சொன்னாள்,
 
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
 
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
 
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
 
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
 
ஆம்!
 
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

👆🏻👆🏻👆🏻👆
🏻👆🏻
Thanks to C.Malathi

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...