Total Pageviews

Wednesday, March 23, 2016

அறிவும் திறமையும் !

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல
goundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவு
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் . 

வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு. 

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.

அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார். 

" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்.
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் . 

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? 

" இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? " 
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
"இதென்னப்பா,கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது. 

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் . 

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .

" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " . 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் . 

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 

பண்டிதர் உடனே ஆமாம் என்றார்
.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.

"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார். 

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.

"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார். 

"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது. 

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.!!!!!!!

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...