“ஒரு கிராமத்தில் தாமோதரன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டால், கடவுளே வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு சென்றதாக உணர்வுவான். சாமியார் யாராவது ஒருவர் தனது வீட்டில் சாப்பிட்ட பின்னர்தான் அவன் சாப்பிடுவான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள்.
ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு சாப்பிட இலை வாங்கப் போனான். சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார். தாமோதரனின் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி, விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள். சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’ என்று அவள் கேட்டாள். சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்., அவள் உடனே முகத்தை சோகமா வைத்துக்கொண்டு ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை அழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள்.
இதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார். அப்பொழுது அவள் வீட்டுக்காரன் தாமோதரன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் காணோம். மனைவியைக் கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான். ‘சாமியார் இந்த உலக்கையை கேட்டார். உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோபித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று சொன்னாள்.
‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’ என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கி ஒடினான். இவன் உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்து பள்ளம் மேடு, குண்டு, குழி, முள், பாராமல் குதித்து ஓடினார். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி தாமோதரன் துரத்த, சாமியார் ஓடியே போயிட்டார்”.
கதையீன் நீதி
உழைத்து வாழ் வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!