Total Pageviews

Monday, December 19, 2011

அம்மா

``ஸ்வேதா, நாம ஊர விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஓடிப்போச்சு. இப்போ நீ வாயும் வயிறுமா இருக்கே, உன் அம்மா அப்பாகிட்ட சமாதானம் பேசலாமுன்னு உன் வீட்டுக்குப்போனேன்…                

அவங்க வீட்ட காலி பண்ணிகிட்டு போயிட்டாங்களாம்…
உன் அப்பாவ எனக்குத்தெரியும், ஆனா உன் அம்மாவ நான் பார்த்ததே இல்ல, அவங்கள நான் பார்க்கவே முடியாதா?’’

ஸ்வேதாவின் விரல்களை தனது விரல்களோடு பிணைத்தபடியே கேட்டான் ராமன், ``அம்மாவப்பத்தி பேசாதீங்க, நம்ம காதலுக்கு குறுக்கே நின்னதே அம்மா தான்…’’

கடும் கோபத்தில் சொன்னாள் ஸ்வேதா. ``சரி, வேற விஷயம் பேசலாம்…சந்தையில தினமும் ஒரு அம்மாகிட்ட காய்கறி வாங்குவேன், ஐம்பது ரூபாய்க்கு கேட்டா ஒரு கூடை நிறைய அள்ளிப்போடுவாங்க, நேற்று அந்தம்மா இல்லையின்னு பக்கத்துல வியாபாரம் பண்ணிகிட்டு இருந்த பாட்டிகிட்ட வாங்கினேன், ஐம்பது ரூபாய்க்கு அவங்க தர்றதுல கால் பங்கு கூட தரல!’’ ``அப்படியா? அந்தம்மாவ எனக்கும் அறிமுகம் செஞ்சுவெச்சுடுங்க…நான் போனாலும் அவங்ககிட்டே வாங்கிடுறேன்.!’’

மறுநாள் ஸ்வெதாவை அழைத்துக்கொண்டு சந்தைக்குச்சென்று தூரத்தில் இருந்தபடியே காட்டினான் ராமன். பார்த்தபோது ஒரு கணம் அதிர்ந்து ஓடிச்சென்று கட்டி அணைத்தாள் ஸ்வேதா.

அறிமுகம் செய்து வைக்காமலேயே அவனுக்கு அது யாரென்று புரிந்தது

Thanks to Kunkumam.

ஒழுக்கத்தின் அவசியம்

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான். அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். 

அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள். அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?" கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை" அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். 

பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?" கதிர் சொன்னான். "இல்லை" அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்." கதிருக்கு வியப்பாக இருந்தது. முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?" கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....." முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் இருந்திருக்கிறேன்....." முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. 

முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது. "இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான். 
 
 சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான். அவர் சொன்னார். "27" இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். 

இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு. திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். (ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்) ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை. ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை.

 நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது? மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான். நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

நன்றி மறக்காத எறும்பு சிறுவர் கதை

ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு,விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது, கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது. எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது

Friday, December 16, 2011

‘கடத்தல் - காணிக்கை


ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார் கைலாசம். சுற்றிலும் படை பலத்தோடு இருந்தார். மனதில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. 

தனது தொழில் கச்சிதமாக முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்து வதற்காகத்தான் திருப்பதிக்குச் சென்றிருந்தார் தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம் வந்து உண்டியலின் அருகே சென்றார். ஒரு லட்ச ரூபாயை ஒட்டு மொத்தமாகப் போட்டார்.  சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டாரகள்.

ஆலயப்பிரவேசம் முடிந்ததும் மிடுக்கோடு வெளியே வந்தார் கைலாசம். ‘கடத்தல் பிஸினசில் என்னை மிஞ்ச யார் இருக்கா? கைலாசமா கொக்கா?” இறுமாப்போடு கூறினார். சுற்றியிருந்த ஜால்ராக்கள் ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.

அப்போது ‘டிரிங்…டிரிங்..’ என மொபைல் அலறியது. எடுத்துப் பேசினார் கைலாசம்.

‘ஐயோ…நாம மோசம் போயிட்டோம்ங்க.நம்ம பொண்ணு காலேஜ் விட்டு வரும்போது யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க. 

பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் விடுவாங்களாம். நீங்க உடனே
புறப்பட்டு வாங்க’ மறுமுனையில் அவரது மனைவி அலறுவதைக்
கேட்டு இடி விழுந்ததைப் போல் அரண்டு போனார் கைலாசம்.
-

சொந்தம்


 
வரதன் படு டென்ஷனில் இருக்கிறான். காரணம், ஊரில் இருந்து அவனது தம்பி தண்டபாணி வந்திருக்கிறான். வந்தவன் சும்மா வரவில்லை. தனது லைன்மேன் லைசென்ஸ் எடுப்பதற்காக பணம் கேட்டு வந்திருக்கிறான். மனைவி புவனாவுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருக்க.. பணத்தைக் கொடுத்து அனுப்பும்படி சொல்கிறாள். வரதனுக்கோ “இன்னும் எவ்ளோதான் இவனுகளுக்கெல்லாம் அழுகுறது?” என்று கத்துகிறான்.
 
பிள்ளைகள் ராஜாவும், சித்ராவும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். புது வருடம்.. இருவரும் 4, 6 வகுப்புகளுக்குத் தாவியிருக்கிறார்கள். நேற்று இரவே நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக் கொடுத்தான் வரதன். அதில் பாதிதான் போட முடிந்தது. அதற்குள் தம்பியைப் பார்த்த டென்ஷனில் எழுந்து வெளியே போய்விட்டான் வரதன்.
 
ராஜா இன்னும் போடாமல் இருக்கும் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று கத்துகிறான். சித்ராவும் “எனக்கும் அதே மாதிரி போட்டுக்கொடுங்க.. இல்லேன்னா மிஸ் அடிப்பாங்க..” என்று கண்ணைக் கசக்குகிறாள்.
 
 வரதன் இருக்கின்ற நிலைமைக்கு அவனால் முடியவில்லை. “முடிஞ்சா நீயே போட்டுக் கொடுடி” என்று மனைவியையே திட்டுகிறான். “நான் அடுப்பு வேலைய பார்ப்பேனா.. இதை பார்ப்பேனா?” என்று திட்ட வரதன் கோபித்துக் கொண்டு வெளியே செல்கிறான்.
 
“கோபத்தைப் பாரு.. வெட்டி வீறாப்பு..” என்று புவனா சொல்லும்போது குளித்து முடித்த நிலையில் சித்தப்பா தண்டபாணி வருகிறான். “சித்தப்பா.. சித்தப்பா உங்களுக்கு நோட்டுக்கு அட்டை போடத் தெரியுமா? போட்டுக் கொடுங்க சித்தப்பா..” என்கிறார்கள் பிள்ளைகள். “அவ்ளோதான.. பத்தே நிமிஷத்துல போட்டுடலாம்..” என்ற தண்டபாணி அப்படியே தலையைக்கூடத் துவட்டாமல் அட்டைப் போடத் துவங்குகிறான்.
 
இருவருக்கும் டிபன் பாக்ஸில் லன்ச்சைத் திணித்த புவனா பையன் ராஜாவை மட்டும் தனியே அழைத்து.. “உனக்கு மட்டும் கூட நாலு பிஸ்கெட் வைச்சிருக்கேன். அக்காகிட்ட காட்டாம அப்புறமா சாப்பிட்டிரு..” என்கிறாள். “போம்மா.. எதுக்கும்மா அக்காவுக்குத் தெரியாம வைச்ச.. அக்காவுக்கும் அதே மாதிரி வைம்மா..” என்கிறான் ராஜா. “இல்லடா. நீ சின்னப் பையன்.. நிறைய பசிக்கும்ல.. அதுக்குத்தான்..” என்கிறாள் புவனா. “போம்மா.. சின்னப் பையனோ, பெரிய பையனோ.. நாங்க ரெண்டு பேருமே உங்க பிள்ளைகதான.. நேத்து பாருங்க.. என் வாட்டர் கேன்ல தண்ணி தீர்ந்து போச்சா? கிளாஸ்ல யாருமே எனக்குத் தண்ணி தர மாட்டேங்கா.. கடைசியா அக்காதான் வந்து அது வைச்சிருந்தத எடுத்துக் கொடுத்துச்சு.. எனக்கு ஒண்ணுன்னா அக்காதான முன்னாடி ஓடிவரும். அதான் சொல்றேன்.. எனக்கு ரெண்டு, அக்காவுக்கு ரெண்டு வை..” என்கிறான். புவனா நெகிழ்ந்து போகிறாள்.
 
அலுவலகத்திற்கு புறப்பட வேண்டுமே என்ற அவசரத்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற வரதன் இதைக் கேட்க அவனுக்குள் ஏதோ ஒன்று உறைப்பதைப் போல் தெரிகிறது. புவனாவிடம் தனியாகச் சென்று “தம்பிக்கு டிபன் போட்டு உக்கார வை.. ATM-ல போய் பணத்தை எடுத்திட்டு வந்திடறேன்.. அவனை வெறும் கையோட அனுப்ப வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறக்க காரணம் புரியாமல் அவனைப் பார்க்கிறாள் புவனா

திடீர் பாசம்..!

சந்திரன் மிக வேகமாகவே நடந்து கொண்டிருந்தான். அவனது கையைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்த சிறுவன் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடியபடியே உடன் வந்து கொண்டிருந்தான். சந்திரனின் ஒரு கை பேப்பர் கவரை பிடித்திருக்க அவனது மறுகையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தபடியே வருகிறான் சிறுவன்.

“என்ன பசிக்குதா..?” என்று சிறுவனை பார்த்து கேட்கிறான் சந்திரன். வாய் திறக்காமல் தலையை அசைத்து ‘ஆமாம்’ என்கிறான் சிறுவன். “பக்கத்துலதான் வீடு.. போனவுடனேயே சாப்பிடலாம்.. என்ன..?” என்று கேட்க சிறுவன் சரி என்று தலையசைக்கிறான்.

யாருமற்ற அந்த தெருவில் கதவுகளெல்லாம் சாத்தப்பட்டிருக்க தனது வீட்டின் வாசலுக்கு வந்து கதவைத் தட்டுகிறான் சந்திரன். பையன் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். கதவு திறந்த வேகத்தில் வார்த்தைகளும் வேகமாக பறந்து வருகின்றன சந்திரனை நோக்கி.

“ஐயா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரமா..?” என்கிறாள் துளசி.. பையனை இழுத்தபடியே பதில் சொல்லாமல் வீட்டுக்குள் நுழைகிறான் சந்திரன். அப்போதுதான் சிறுவனை பார்க்கும் துளசி, “இது யாரு..?” என்று கேட்க.. அதற்குள் வீட்டுக்குள்ளேயே வந்து நிற்கும் சந்திரன், “யாருன்னு தெரியலை. பார்க்ல உக்காந்திருந்தேன்.

 கிளம்பும்போது வாசல்ல நின்னு அழுதுகிட்டிருந்தான். பாவம்.. யாருமில்லையாம்.. அவங்க மாமா ஊருக்கு போறானாம்.. காசில்லைன்னான்..” துளசியின் குரலைக் கேட்ட சிறுவன் பயந்து போய் சந்திரனின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.
சொல்லி முடிப்பதற்குள், “அதுக்கு.. அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தர்றதா..?” என்கிறாள் துளசி. “இல்ல துளசி.. ராத்திரியாயிருச்சு. பஸ் இருக்காது.. விடிஞ்சதும் அனுப்பி வைச்சிரலாம்…” என்றபடியே தனது கையில் இருந்த பேப்பர் கட்டை அவளிடம் கொடுக்கிறான் சந்திரன்.

 “இதென்ன சத்திரமா..?” பேப்பர் கட்டில் இருந்த கீரையை வாங்கிக் கொண்டே துளசி கோபப்பட..

சந்திரன் பதில் சொல்லாமல் சிறுவனை பார்க்க சிறுவன் அண்ணாந்து பார்த்தவனின் முகத்தில் அர்த்தம் புரியாத கவலை. வெளியில் அனுப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் சிறுவன் நோக்க.. “மொதல்ல அவனை கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று கத்துகிறாள் துளசி. “இல்ல.. ஒரு ராத்திரிதான.. இங்கயே தங்கட்டுமே.. காலைல அனுப்பி வைச்சிரலாம்..” சந்திரன் பையனின் தலையை ஆறுதலாகத் தடவியபடியே சொல்ல..

“னக்குப் பிடிக்கலீங்க.. ராத்திரி தங்கிட்டு காலைல போறதுக்கு இதொண்ணும் மடமில்லை…. கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று ஹாலில் அவர்களை மறித்து நின்று கொண்டு துளசி சொல்ல.. சந்திரன் ‘பாவம்மா..’ என்று கண்களாலேயே கெஞ்சுகிறான்.
“முடியாது.. நான் விடமாட்டேன்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா உள்ள வாங்க.. ஏதோ பார்க்ல பார்த்தாராம்.. கூட்டிட்டு வந்தாராம்.. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..? இதென்ன விளையாட்டா..?” என்று கேட்டு டைனிங் டேபிளில் பேப்பர் கட்டை பொத்தென்று போட்டுவிட்டு சேரில் அமர்கிறாள்.

“அதை அப்புறமா பேசிக்கலாம்.. பையன் ரொம்ப பசியா இருக்கான்.. மொதல்ல அவனுக்கு கொஞ்சம் சோறு போடும்மா..” சந்திரன் சொல்லி முடிப்பதற்குள் துளசி வெடிக்கிறாள். “நான் என்ன வைச்ச வேலைக்காரியா..? வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆக்கிக் கொட்டணும்னு எனக்கென்ன தலையெழுத்தா..?” என்கிறாள் ஆக்ரோஷமாக..

சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது. இனியும் துளசியிடம் பேசினால் எட்டு வீடு கேட்கும் அளவுக்குத் தனது குரலை நிச்சயம் உயர்த்துவாள். நாளை காலையில் அக்கம்பக்கம் வீட்டினர் தன்னை பார்த்து சிரிப்பார்கள் என்பது புரிந்தது.. வழக்கம்போலத்தான் இது என்றாலும், அந்தச் சிறுவனை பார்க்க பரிதாபமாக இருந்தது அவனுக்கு. வெளியில் போ என்று சொல்ல வாய் வர மறுக்கிறது..

சந்திரனின் தயக்கத்தைக் கண்ட துளசி.. “டேய் யார்ரா நீ..? உன் பேரென்ன..?” என்று கேட்க பையன் அவள் முகத்தைக் கூட பார்க்க பயந்து சந்திரனுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள.. “அவன் பேர் என்ன..?” என்கிறாள் சந்திரனிடம்.

சந்திரன் உண்மையாகவே “தெரியலம்மா..” என்று சொல்ல.. “ஐயோ..” என்று சொல்லித் தன் வாயைப் பொத்திக் கொள்கிறாள் துளசி. “பேரே தெரியலை.. வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றீங்களா..? ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா..? யார், என்னன்னு கேக்க வேண்டாம்..? அப்படியே கூட்டிட்டு வந்தர்றதா..? நீங்கள்லாம் ஒரு ஆம்பளை.. ச்சே..” என்று வெறுப்பை கண்களிலேயே உமிழ்ந்த துளசியை ஏறெடுத்துப் பார்க்க பயந்து போய் சந்திரன் வேறு பக்கம் பார்த்தபடியே, “சரி.. கத்தாத.. இப்ப சோறு போடு. விடிஞ்சதும் முதல் வேலையா நானே பஸ்ஸ்டாண்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தர்றேன்..” என்கிறான்.

“இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா நீங்க உள்ள போங்க. இல்லேன்னா நீங்களும் சேர்ந்து வெளிய போயிருங்க..” என்று தீர்மானமாகச் சொல்கிறாள். சந்திரன் சிறுவனை பார்க்க சிறுவன் தன் கண்களில் உதிர்த்த சொட்டுக் கண்ணீருடன் சந்திரனை பார்க்கிறான்.

பட்டென்று எழுந்த துளசி, “ஊர் உலகத்துல எல்லா வீட்லேயும் ஆம்பளைங்க என்ன லட்சணத்துல இருக்காங்கன்னு நாலு வீட்டுக்கு போய் பார்த்தா தெரியும்.. இங்கதான் வீடு, வீடு விட்டா ஆபீஸ்ன்னு ஒரு சவம் மாதிரி போயிட்டிருக்கு.. எங்க தெரியப் போகுது..?” என்று சொல்லிக் கொண்டே பேப்பரில் சுருட்டியிருந்த கீரையைப் பிரித்து தனியே எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைகிறாள் துளசி.
சட்டென்று வெளியே எட்டிப் பார்க்கும் துளசி, “என்ன இன்னும் நின்னுக்கிட்டிருக்கீங்க.. மொதல்ல அவனை துரத்தி விடுங்க. ஏன் இப்படி என்னை அர்த்த ராத்திரில கத்த வைக்குறீங்க..?” என்கிறாள்.

மீண்டும் சமையலறையின் உட்பக்கம் திரும்பிக் கொண்ட துளசி “எவனையோ கூட்டிட்டு வந்து தங்க வைக்கணுமாம்.. அவன் யாரு, என்ன, எப்படின்னு தெரியலை.. விடிஞ்சு பார்த்தா வீட்ல என்னென்ன இருக்கோ இல்லையோ.. எதை எதை லவட்டிக்கிட்டு போகப் போறானோ.. யாருக்குத் தெரியும்..? ஆம்பளைன்னா இதையெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாம்.. செய்புத்திதான் இல்லை…. சொல்புத்தியையாவது கேட்டுத் தொலையலாம்ல.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருங்க..” என்றபடியே கீரைக்கட்டுக்களைப் பிரித்து பாத்திரத்தில் போடத் துவங்க..

வெளியில் தனது முகத்தைப் ஏக்கத்துடன் பார்த்தபடியே நிற்கும் சிறுவனை பரிதாபமாக பார்க்கிறான் சந்திரன். இனியும் நின்றால் இவளிடம் பேச்சுவாங்கியே விடிந்துவிடும்.. வேறு வழியில்லை.. என்று நினைத்த சந்திரன் மெதுவாக பையனின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வருகிறான்.

பையன் சொல்ல முடியாத சோகத்தை முகத்தில் எப்படி காட்டுவது என்பதுகூடத் தெரியாமல் மெளனமாக சந்திரனுடன் வெளியேறுகிறான். தெருவில் நாலைந்து நாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. பையனை தனியே அனுப்ப முடியாது என்பதால் தானே அவனை பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய்விட முடிவு செய்து நடக்கிறார்.

பையன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வர.. “மனுஷியா இவ.. ஏதோ ஒரு வேளை சோறு போட்டா எதுல குறைஞ்சு போயிருவாளாம்..? சின்னப் பையன்னு ஒரு இரக்கம் வேணாம்..” என்றெல்லாம் சந்திரனின் மனம் குமைந்தாலும் துளசியை எதிர்த்து பேசுவது அவனுடைய சுபாவம் இல்லாததால் அந்தக் கோபத்தை நடையில் காட்டுகிறான் சந்திரன்.

பஸ்ஸ்டாண்டில் பையனை நிறுத்திவிட்டு அவன் பாக்கெட்டில் நூறு ரூபாயை திணித்து வைத்து “எங்கயாவது போயி பொழைச்சுக்கப்பா..” என்று சொல்லி அவன் கன்னத்தை ஆசையாகத் தடவிக் கொடுக்க.. பையன் கண்களில் பொங்கி நின்ற கண்ணீருடன் பணம் இருந்த பாக்கெட்டைத் தொட்டபடியே நிற்க.. விருட்டென்று திரும்பிப் பார்க்காமல் வீடு நோக்கி நடக்கிறார் சந்திரன்.

ஒரு நொடியில் திரும்பிப் பார்த்தால்கூட தன் மனம் மாறிவிடுமோ என்கிற சந்தேகத்தில் மனதை கல்லாக்கிக் கொண்டு வெக்கு, வெக்கென்று வீடு நோக்கி நடக்கிறார். அந்தப் பையன் தன்னை பார்க்கிறானோ..? தன் பின்னால் வருகிறானோ என்றெல்லாம் திடீரென்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தவர் வந்தாலும் வரலாம் என்று நினைத்து ஓட்டமும், நடையுமாக செல்கிறார்.

வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க..

வீட்டு வாசலில் கையில் பேப்பருடன் துளசி நின்று கொண்டிருக்கிறாள். “பொண்டாட்டியா இவ.. சண்டாளி.. அகங்காரி.. ஆணவக்காரி.. பேய், பிசாசு.. கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டனான்றதைகூட வாசல்ல வந்து பாக்குறா பாரு..” என்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் குமைந்தபடியே அவளை நோக்கி வருகிறான் சந்திரன்.

துளசியே அவரை நோக்கி ஓடி வருகிறாள். “ஏங்க.. எங்க அந்த பையன்.. எங்க பையன்..?” என்று கேட்க அவளுடைய வாயில் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று எதிர்பார்த்திராத சந்திரன் திகைக்கிறான்.

அவரை உலுக்கிய துளசி, “எங்கங்க அந்த பையன்..?” என்று மீண்டும் கேட்க, “அதான்.. நீதான எங்கயாவது கொண்டு போய்விடச் சொன்ன..? பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டுட்டேன்..” என்று முறைத்தபடியே சொல்லி முடிப்பதற்குள், பதறுகிறாள் துளசி.
“போங்க.. போங்க.. போய் அந்தப் பையனை கூட்டிட்டு வாங்க..” என்கிறாள் பதட்டத்துடன்.. “எதுக்கு..? எதுக்கு..? நீதான அனுப்பச் சொன்ன..?” என்று சந்திரன் திடீர் அதிர்ச்சியோடு கேட்க.. “ஐயோ.. இத பாருங்க.. அந்தப் பையன் வீட்டை விட்டு ஓடி வந்துட்டானாம்..

அவனைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா பத்தாயிரம் ரூபாய் பரிசுன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்திருக்காரு.. போங்க.. போய் அவனை பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க.. நமக்குக் காசாவது வரும். போங்க…” என்று அவனைப் பிடித்து தள்ளிவிட..
பிரமை பிடித்தாற்போல் நிற்கிறான் சந்திரன்.

Tuesday, December 13, 2011

"ஏமாற்றாதே ஏமாறாதே

 

அந்த காட்டில் அடர்ந்து வளர்ந்திருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தில், அளவுக்கு அதிகமான விழுதுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பக்கமாக ஒரு நரி சென்று கொண்டிருந்தது. அன்றைய தினம் ஒரு இரையும் அதற்கு கிடைக்கவில்லை. ஆலமரத்தையும், அதன் விழுதுகளையும் பார்த்த நரிக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று. அதைச் செயல்படுத்தவும் ஆயத்தமானது.
மான் குட்டி ஒன்று அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்த நரி, அதனிடம் சென்று, "! மான் குட்டியே... உன்னால் எனக்குச் சமமாக ஓட முடியுமா? துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடத் தெரியுமா?'' என்றது.
இதைக்கேட்ட மான்குட்டி, "! நான் நன்றாகவே ஓடுவேனே!'' என்று விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதனுடன் நரியும் ஓடிவந்தது. ஆலமரத்தின் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந்ததால், ஆலமரத்தின் விழுதுகள், வேகமாக வந்த மான்குட்டியின் வயிற்றிலும், கழுத்திலுமாக சிக்கிக் கொண்டன. இதனால், அது தரையிறங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நரி, ஹா... ஹா... ஹா... என்று சிரித்துக் கொண்டே, ""! மான்குட்டியே... நன்றாக மாட்டிக் கொண்டாய்! இதோ இன்னும் சற்று நேரத்தில் குளித்து விட்டு வருகிறேன். இன்று நீதான் எனக்கு விருந்து,'' என்று சொல்லிவிட்டு அருகிலுள்ள ஒரு குளத்தை நோக்கிச் சென்றது.
ஆபத்தில் மாட்டிக் கொண்ட மான்குட்டி, "தன்னை விடுவிக்க யாரும் வரமாட்டார்களா?' என்று தவித்துக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் மேலே ஏற்கனவே உட்கார்ந்திருந்த குரங்கை இந்த நரியும், மான் குட்டியும் கவனிக்கவில்லை. குரங்கானது மான்குட்டியை அழைத்தது. "! மான்குட்டியே... எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். யார் எதைச் சொன்னாலும், எதற்குச் சொல்கின்றனர் என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அதிலும் இந்த நரி உன் இனத்தாரின் எதிரி அல்லவா? மற்றவர்களை தந்திரமாக ஆபத்தில் சிக்க வைப்பதில் கைதேர்ந்ததாயிற்றே! இனிமேலாவது சிந்தித்துச் செயல்படு,'' என்று கூறி, மான்குட்டியின் மீது சிக்கியிருந்த விழுதுகளை அப்புறப்படுத்தி அதை விடுவித்தது.
"என்னை மன்னித்து விடுங்கள்! இனி இவ்வாறு சிந்திக்காமல் செயல்படமாட்டேன்,'' என்றது மான் குட்டி.
"சரி! சரி! உணர்ந்து கொண்டால் சரிதான். நீ உடனே அந்த நரி வருவதற்குள்ளாக இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு,'' என்று கூறியது.
மான் குட்டியும் தன்னைக் காப்பாற்றிய குரங்குக்கு, "நன்றி' கூறிவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி மறைந்தது. திரும்பி வந்த நரி, மரத்தின் அருகில் மான் குட்டியை காணாததைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்தது. அதை மரத்தின் மீது இருந்து கண்ட குரங்கு ஹா... ஹா...வென்று சிரித்து நரிக்கு பாடம் புகட்டியது! "ஏமாற்றாதே ஏமாறாதே..." என பாடி கிண்டல் செய்தது.

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...