Total Pageviews

Tuesday, March 28, 2017

பெருந்தன்மை!

♥என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்!

♥என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ப்பக்க டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸுடன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்...

♥திடீரென்று டயர் தேயும் ‘கிரீச்’ சத்தம். வேகமாக வந்து சடன் பிரேக் போட்ட ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த இளம் பெண் மிக நாகரிகமாக இருந்தாள். ஏதோ யோசனையில் ஓட்டி வந்தவள், மிக அருகில் வந்ததும்தான் கிழவரைக் கவனித்திருக்க வேண்டும். ‘‘யோவ்! பாத்து வரக் கூடாதா? அன்ன நடை நடக்கிறியே, ராஸ்கல்!’’ - கோபத்துடன் சீறிவிட்டு, அதே வேகத்தில் ஸ்கூட்டி யைச் சீறிக் கிளப்பிப் போனாள்.

♥ஓர் அழகிய நாகரீகமான படித்த பெண்ணிட மிருந்து அத்தனை மூர்க்கமான, நாகரிகமற்ற வார்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோய் பெரியவரின் முகத்தைப் பார்த்தேன். தன் மீது தவறு இல்லாதபோது, அந்தப் பெண் அப்படிப் பேசியது அவரை நியாயமாகக் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் முகத்தில் கோபம் இல்லை. சிறு சுளிப்புகூட இல்லை. இதற்குள் நண்பர் விக்ரமின் கார் வந்து நிற்க, நான் யோசனையுடன் அதில் ஏறிக் கொண்டேன். மனசு ஆறவில்லை.

♥நண்பரிடம் நடந்ததை விவரித்தேன். ‘‘இந்தக் காலப் பெண்கள் வயசுக்குக்கூட மரியாதை கொடுக்காம கண்டபடி பேசறாங்களே விக்ரம்? கலாசார சீரழிவுனு இதைச் சொல்லலாமா?’’

♥விக்ரம் சொன்னார்: ‘‘இப்படிப் பேசிட்டுப் போன ஒரு பெண்ணை வைத்தோ, மொத்த தமிழ்ப் பெண் களையும் நாம் மதிப்பிட்டுவிடக் கூடாது இளங்கோ சார்! சில பெண்கள் இப்படிப் பண்பாடில்லாம நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பண்பு குறையாத, பெண்மையின் மேன்மையைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை!’’

♥என் மனசில் அந்தக் காட்சி திரும்பத் திரும்ப வந்தது. இரு சக்கர வாகனத்தில் வலது காலைத் தரையில் ஊன்றி நின்றாள் அவள். கோபத்தில் கொதித்தாள்.

♥ மறுநாள்... அதே சாலை யோர மரத்தடி... செருப்பு தைக்கிற முதியவர் எனக்குச் சற்றுத் தள்ளி நின்று, யாரையோ எதிர்பார்ப்பவர் போல தூரத்திலிருந்து வருகிற வாகனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஒருக்கால் நேற்று அவரை வசை பாடிவிட்டுப் போன பெண்ணை இன்று தடுத்து நிறுத்தி மனசில் தைக்கிற மாதிரி புத்தி சொல்வது அவருடைய நோக்கமாக இருக்குமோ? அதோ அந்தப் பெண்ணின் வாகனம்!

♥பெரியவர் கையை நீட்டி அந்த வாகனத்தை நிறுத்தினார். எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டது. நேற்று பெரியவரை அவமதித்த அந்தப் பெண்ணுக்கு இன்று சரியான டோஸ் கிடைக்கப் போகிறது. அவள் தன் வாகனத்தை நிறுத்தினாள். முகத்தில் பயம் தெரிந்தது. முந்தின நாள் அவரைத் திட்டிய தற்கு இன்று வம்பு வளர்க்கக் கிழவன் வண்டியை நிறுத்துகிறானோ?

♥‘‘என்னய்யா?’’ என்று கேட்டாள் அவள். கிழவர் அவளருகில் சென்றார். தன் கையிலிருந்த ஒரு பொருளை அவளிடம் நீட்டினார். அது ஒரு செல்போன்!

♥‘‘நேத்து நீங்க இங்கே வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினீங்களே, அப்ப, இது கீழே விழுந்திடுச்சும்மா. நீங்க கவனிக்காம வேகமாகப் போயிட்டீங்க. எடுத்து வெச்சேன். வழக்கமா இந்த நேரத்துக்கு வருவீங்களேனு காத்துட்டிருந்தேன். இந்தாங்கம்மா!’’

♥அவள் முகம் வியப்பால் விரிந்தது. அது ஒரு விலையுயர்ந்த செல்போன். அதை எங்கே காணடித்தோம் என்று ஒரு நாள் முழுவதும் அவள் எங்கெங்கோ தேடியிருக்கக்கூடும். பரவசத்தோடும் அதே நேரம் இந்தப் பெரியவரை முந்தின நாள் தரக்குறைவாகப் பேசிவிட்டோமே என்கிற குற்ற உணர்வோடும் அப்படியே நின்றாள்.

♥திரும்பிச் சென்ற பெரியவரை நோக்கி, ‘‘ஒன் மினிட் சார்’’ என்று நிறுத்தி, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினாள். ‘‘எதுக்குமா குழந்தை?’’ என்று கனிவாகக் கேட்டார் அவர். ‘‘இந்த செல்போன் வெலை என்னா தெரியுமா, செவன்டீன் தௌஸண்ட். , பதினேழாயிரம் ரூபா. இது காணாமப் போயிடுச்சுன்னே நெனச்சிட்டேன். எடுத்து வெச்சிருந்து கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ப்ளீஸ் வாங்கிக்கோங்க!’’ ‘‘இல்லேம்மா, கண்ணுக்கு முன்னே ஒங்க பொருள் கை தவறிக் கீழே விழுந்துச்சு. அதை ஒங்ககிட்டே ஒப்படைச்சேன், அவ்ளோதான். நல்லா இருங்கம்மா!’’

♥சிறிது நேரம் அப்படியே நின்றவள், மெள்ள தன் வாகனத்தை ஓடவிட்டாள். முந்தினம் தான் அவரைக் கண்டபடி திட்டிப் பேசியது மிகவும் தவறு என்று அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள் என்று தோன்றியது எனக்கு.

♥நான் அந்தப் பெரியவரை நெருங்கினேன். ‘‘நேத்து நடந்ததை நானும் பார்த்தேன். அந்தப் பொண்ணு உங்களை தரக்குறைவாத் திட்டிப் பேசிச்சு. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாம அந்தப் பொண்ணுக்கு உதவி செஞ்சு, ரொம்ப மரியாதை கொடுத்தும் பேசிட்டு வர்றீங்களே?’’ என்று கேட்டேன்.

♥சிரித்தவர், ‘‘என் பேத்தி என்னைத் திட்டினா நான் கோவிச்சுக்குவேனா? நேத்து திட்டின பொண்ணு, இன்னிக்கு என்னை ‘சார்’னு சொல்லுது. என்ன பேசறோம்னே தெரியாத வயசு. இதுக் கெல்லாம் வருத்தப்பட்டு திருப்பித் திட்டினா நான் என்ன மனுஷன்? வயசு ஏற ஏற, பக்குவம், மரியாதை எல்லாம் தானா வந்துடும். கொழந்தைங்க அது... சின்னப் பூவு! இன்னும் கல்யாணம் காச்சியெல்லாம் ஆகலை. எல்லாம் சரியாப் போயிடும்!’’
♥விக்ரமின் காரில் போகும்போது மனசு லேசாக இருந்தது. செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம், லேசாகக் கிழிந்திருந்த என் மனசையும் பக்குவமாகத் தைத்துவிட்டதாக உணர்ந்தேன்

Wednesday, March 15, 2017

நிர்வாகத் திறமை !

நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.


அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.


சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.


இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.


இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.


உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.


குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.


இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?


தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, 

"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.


இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

---

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

Tuesday, February 28, 2017

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை !

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை *

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”

“அப்போது உங்கள் தந்தை உங்களிடம் கேட்டுக்கொண்டது அவர் அடியொற்றி செல்வீர்களா?”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்” என்று.

* நிறைய உண்மை கலந்த கதை இது! * நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள் * ....உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும் , நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும் *.....ஆகவே மகிழ்ச்சியாக , நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம் ....

லஞ்சம் இல்லா சமுதாயத்தை நிச்சயமாகவே உருவாக்குவோம்

கண்ணன் வந்தான் !

ஒரு குட்டிக் கதை.ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்.......

அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில்.

அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இல்லை.

என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு. அவன் கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.

காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச தண்டை. அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.
இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.

இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா... அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.
ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார். எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு. கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.
அப்படின்னு யோசித்தவர்...

அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.
அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.
உண்மைதான்... அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான். கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.
நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு. திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி... ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான். என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.
நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான். வாங்க கட்டுறேன்னு சொன்னான்.
நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார். சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை... என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது. உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது. இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.

அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.

நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அதனால் வந்தேன்.

கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்

Thursday, February 16, 2017

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு.

மறுநாள்..

ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு அவை ஒரே மாதிரி இருந்தன

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு மாணவர்கள் ஒரு கணம் கழித்து "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்" என்றார்கள்..

"இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்கிறார். மாணவர்கள், "தெரியவில்லை!" என்று பதிலறக்கிறார்கள்.

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது" என்ற குரு, முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது. . இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்காத வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. . நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்" என்றார் குரு.

மேலும் மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: "மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்றார்.

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான!" என்றார்கள். .

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். 
 
ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே! அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்!"


Thanks to Karuna

Friday, January 6, 2017

வாழ்வில் தேடித் தேடி சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். 

வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.
வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.
இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.
நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.
ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"
என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.
அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.

வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...

நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...

நல்லது செய்யுமெனில்...

இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...

*இறைவனே நம்மை தேடி வருவார்...

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...