Total Pageviews

Thursday, February 16, 2017

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு.

மறுநாள்..

ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு அவை ஒரே மாதிரி இருந்தன

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு மாணவர்கள் ஒரு கணம் கழித்து "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்" என்றார்கள்..

"இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்கிறார். மாணவர்கள், "தெரியவில்லை!" என்று பதிலறக்கிறார்கள்.

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது" என்ற குரு, முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது. . இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்காத வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. . நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்" என்றார் குரு.

மேலும் மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: "மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்றார்.

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான!" என்றார்கள். .

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். 
 
ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே! அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்!"


Thanks to Karuna

Friday, January 6, 2017

வாழ்வில் தேடித் தேடி சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். 

வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.
வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.
இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.
நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.
ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"
என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.
அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.

வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...

நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...

நல்லது செய்யுமெனில்...

இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...

*இறைவனே நம்மை தேடி வருவார்...

கைத்தடி !

கைத்தடி  ! ஆசை !! -

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?
''

Sunday, January 1, 2017

மனதாக மாறிய மலர் !

மனதாக மாறிய மலர்
=====================


செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார்.

அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர்.

திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அவர் குடும்பம் பட்டினி கிடந்தது.

என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும் யாரும் இல்லை.

மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது அவர் பார்வையில் பட்டது.

அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை.

அபூர்வமான அழகுடன் இருந்தது.

அடர் சிவப்பு நிறத்தில் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னிப் பிரகாசித்தது.

அவர் குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தெடுத்தார்.

அந்த அபூர்வ மலரை யாருக்காவது விற்றால் ஏதாவது பணம் கிடைக்கும் என்று நினைத்தார் அவர்.

அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர், தொழிலாளியின் கையில் மிக அழகான பூ இருப்பதைப் பார்த்தார்.

அவர் கேட்டார்: "அந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...??? நான் அதற்கு நூறு ரூபாய் தருகிறேன்.''

சற்று நேரம் கழித்து அந்த வழியாக செல்வந்தர் ஒருவர் வந்தார்.

அவரும் கேட்டார்: ""இந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...??? நான் இதற்கு இருநூறு ரூபாய் தருகிறேன்...!!!''

இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த மலரைக் கேட்கிறார்களே என்று தொழிலாளிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

சற்று நேரத்திற்குப் பிறகு அதே வழியில் அந்த நாட்டு ராஜா வந்தார்.

தாமரை மலரைப் பார்த்து மகிழ்ந்து அவரும் கேட்டார்:

""இந்த மலரை என்னிடம் கொடுத்துவிடுகிறாயா...??? இதற்கு நான் என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன்....!!!''

தொழிலாளி, ராஜாவிடம் பணிவுடன் கேட்டார்:

""வணக்கத்திற்குரிய ராஜாவே...!!! அப்படி இந்த மலரில் என்னதான் இருக்கிறது....???

ஏன் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறீர்கள்......???''

ராஜா சொன்னார்: ""இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.

இந்த நகரத்திற்குப் புத்தர் வந்திருக்கிறார்.

அவர் காலில் வைத்து வணங்குவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்......!!!''

புத்தரைக் காண வேண்டும் என்று வெகுகாலமாக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளி சொன்னார்:

""அப்படியென்றால் ராஜாவே, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....!!!

இந்த மலரை நானே அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.''

அந்தத் தொழிலாளி ஓடிச் சென்றார்.

அரிய தாமரை மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றார்.

அப்போது புத்தர் கனிவாக அவரிடம் கேட்டார்:

""சகோதரா, இந்த மலரை நீ ராஜாவிற்கு விற்றிருந்தாயானால் நீ மட்டுமின்றி உன் பல தலைமுறைகளும் வளமாக வாழ்வதற்கான செல்வம் உனக்குக் கிடைத்திருக்குமே...!!!

நீ ஏன் அப்படிச் செய்யவில்லை...???''

தொழிலாளி கண்கலங்கிச் சொன்னார்: ""ஐயா... உலகின் ஞானியே,

நான் இந்த மலரைப் பறித்தபோது இது ஒரு தாமரை மலராக மட்டுமாகத்தான் இருந்தது.

ஆனால், நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தபோது, இந்த மலர் என் இதயத்தின் அன்பாக மாறிவிட்டது.

என் இதயத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் உங்கள் காலடிகளைத் தவிர வேறு இல்லையே....!!!''

புத்தர் எழுந்து அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொன்னார்:

""இனிய சகோதரா... வறுமையில் இருந்தாலும் இந்த உலகத்தின் அரசன் நீதான். நிம்மதியாகப் போ....!!!

உன் வாழ்க்கை வளமாகும்.....!!!''

தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான் 

Thursday, December 29, 2016

நன்றியை மறப்பது மிகப் பெரிய பாவம்!

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

""மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், ""மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

""நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

""மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், ""சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,'' என்றான்.

""என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

""கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?'' உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,'' என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

""இதனிடம் நியாயம் கேட்போம்,'' என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

""எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

""நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

""நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

""எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

""அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,'' என்றது சிங்கம்.

""எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

""நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

""நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி:- ஒருவர் செய்த நன்றியை மறப்பது மிகப் பெரிய பாவம். அப்படி செய்பவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டார்.

Monday, December 26, 2016

பிச்சைக்காரன் !

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
Image result for images for thiruvodu 
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை
ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான்
கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

Image result for images for thiruvoduஅந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.

இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..! 

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...