Total Pageviews

Sunday, January 1, 2017

மனதாக மாறிய மலர் !

மனதாக மாறிய மலர்
=====================


செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார்.

அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர்.

திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அவர் குடும்பம் பட்டினி கிடந்தது.

என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும் யாரும் இல்லை.

மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது அவர் பார்வையில் பட்டது.

அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை.

அபூர்வமான அழகுடன் இருந்தது.

அடர் சிவப்பு நிறத்தில் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னிப் பிரகாசித்தது.

அவர் குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தெடுத்தார்.

அந்த அபூர்வ மலரை யாருக்காவது விற்றால் ஏதாவது பணம் கிடைக்கும் என்று நினைத்தார் அவர்.

அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர், தொழிலாளியின் கையில் மிக அழகான பூ இருப்பதைப் பார்த்தார்.

அவர் கேட்டார்: "அந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...??? நான் அதற்கு நூறு ரூபாய் தருகிறேன்.''

சற்று நேரம் கழித்து அந்த வழியாக செல்வந்தர் ஒருவர் வந்தார்.

அவரும் கேட்டார்: ""இந்த மலரை என்னிடம் விற்றுவிடுகிறாயா...??? நான் இதற்கு இருநூறு ரூபாய் தருகிறேன்...!!!''

இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த மலரைக் கேட்கிறார்களே என்று தொழிலாளிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

சற்று நேரத்திற்குப் பிறகு அதே வழியில் அந்த நாட்டு ராஜா வந்தார்.

தாமரை மலரைப் பார்த்து மகிழ்ந்து அவரும் கேட்டார்:

""இந்த மலரை என்னிடம் கொடுத்துவிடுகிறாயா...??? இதற்கு நான் என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன்....!!!''

தொழிலாளி, ராஜாவிடம் பணிவுடன் கேட்டார்:

""வணக்கத்திற்குரிய ராஜாவே...!!! அப்படி இந்த மலரில் என்னதான் இருக்கிறது....???

ஏன் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறீர்கள்......???''

ராஜா சொன்னார்: ""இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.

இந்த நகரத்திற்குப் புத்தர் வந்திருக்கிறார்.

அவர் காலில் வைத்து வணங்குவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்......!!!''

புத்தரைக் காண வேண்டும் என்று வெகுகாலமாக ஏங்கிக் கொண்டிருந்த தொழிலாளி சொன்னார்:

""அப்படியென்றால் ராஜாவே, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....!!!

இந்த மலரை நானே அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.''

அந்தத் தொழிலாளி ஓடிச் சென்றார்.

அரிய தாமரை மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றார்.

அப்போது புத்தர் கனிவாக அவரிடம் கேட்டார்:

""சகோதரா, இந்த மலரை நீ ராஜாவிற்கு விற்றிருந்தாயானால் நீ மட்டுமின்றி உன் பல தலைமுறைகளும் வளமாக வாழ்வதற்கான செல்வம் உனக்குக் கிடைத்திருக்குமே...!!!

நீ ஏன் அப்படிச் செய்யவில்லை...???''

தொழிலாளி கண்கலங்கிச் சொன்னார்: ""ஐயா... உலகின் ஞானியே,

நான் இந்த மலரைப் பறித்தபோது இது ஒரு தாமரை மலராக மட்டுமாகத்தான் இருந்தது.

ஆனால், நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தபோது, இந்த மலர் என் இதயத்தின் அன்பாக மாறிவிட்டது.

என் இதயத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற இடம் உங்கள் காலடிகளைத் தவிர வேறு இல்லையே....!!!''

புத்தர் எழுந்து அவரைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொன்னார்:

""இனிய சகோதரா... வறுமையில் இருந்தாலும் இந்த உலகத்தின் அரசன் நீதான். நிம்மதியாகப் போ....!!!

உன் வாழ்க்கை வளமாகும்.....!!!''

தூய அன்பிற்கு முன்னால் பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

இந்த உலகில் விலை மதிப்பிட முடியாத ஒரே ஒரு விஷயம் அன்பு மட்டும்தான் 

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...