Total Pageviews

Sunday, March 27, 2016

வெளிச்சம் !



ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். 

அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார்.

அவருடைய பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும் முன்வைத்தார்.

அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார் ஜென் துறவி.

‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’



No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...