Total Pageviews

Thursday, December 29, 2011

மொக்கையன்



மொக்கையன் ஊரில் திருமணங்களோ, நிச்சயதார்தங்களோ, கிரகப்பிரவேசமோ, பூப்புனித நீராட்டு விழாக்களோ, அன்னதானங்களோ தினமும் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வான் அங்கெல்லாம் அழைக்கப்படாத விருந்தாளியாகச் சென்று கடைசி பந்தி வரை காத்திருந்து சாப்பிட்டு விட்டுதான் திரும்புவான்

மொக்கையனுக்கு வயது ஐம்பது தாண்டியிருந்தது எதிர்காலம் பற்றிய சிந்தனையற்று கவலைகள் எதுவுமின்றி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு யாராவது பழைய லுங்கியோ வேட்டியோ தருவார்கள். வெள்ளை நிறத்திலிருக்கும் வேட்டியை அவன் கட்டத்துவங்கினால் பின்பு அது பழுப்பு நிறமேறி வேட்டியின் சுய அடையாளத்தை இழந்து பெயரிடப்படாத வேறு கலராக மாறி அது கிழிந்து போகும் வரை அவனை விட்டு விலகாமலெயே இருக்கும்.இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புது வேட்டி சட்டை வாங்கி விடவேண்டும் என்ற கனவு அவன் மனதில் எழும்பிக்கொண்டே இருந்தது புது வேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற காரணத்தை சொல்லி யாரிடமாவது காசு கேட்டால் எல்லோருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது மேலாடை அணிந்து பார்த்திராத ஊர் ஜனங்களுக்கு அவன் புது வேட்டி சட்டை வாங்க காசு கேட்டால் கொடுத்த ஒருருபாய் நாணயத்தை திரும்ப வாங்கி விடலாமா என்று நினைக்கத் தோன்றியது. 
 
சிறுக சிறுக கிடைத்த காசுகள் பீடி வாங்கியும் கட்டங் காப்பி வாங்கியும் செலவழிந்து போயின. அரசியல்கூட்ட விழாவில் ஒலிபரப்பான பாட்டுசத்தம் கேட்டு அது திருமண வீடாக இருக்கக்கூடும் என்று நம்பிச் சென்று ஏமார்ந்து திரும்பியதைப்போலவே வேட்டி சட்டை வாங்குவது என்ற எண்ணமும் அவனை விட்டு மெல்ல விலகியது.அவனுக்குள் புற்று நோய் குடிவந்து பல வருடங்கள் ஆனது தெரியாமலேயே அவனது ஜீவனம் நகர்ந்துகொண்டிருந்தது.
 
 அன்று உடம்புக்கு முடியாமல் பள்ளிக்கூட வராந்தாவில் முடங்கி கிடந்தான் மனசு மட்டும் புது வேட்டி சட்டையின் மீது வியாபித்திருந்தது.மொக்கையனை வேலை வரவில்லையென்று அவனை தேடி வந்த ஓட்டல்காரரிடம் உடம்புக்கு முடியல என்று சொல்லிவிட்டு தனதுபுது வேட்டி சட்டை ஆசையை சேர்த்துச் சொன்னான். ஓட்டல்காரருக்கு கோபம் வந்தது
 
புது வேட்டி சட்ட போட்டுகிட்டு பொண்ணா கெட்டப்போற? ஆசயப்பாரு!" அவர் சினந்தபடியே கிளம்பிப்போனார். புற்று நேய் தனது உக்கிரத்தை காட்ட மொக்கையனுக்கு பேச்சு நின்று போனது அது மேய் மாதம் வேறு சிறுவர் சிறுமியர்களின் வாசனையற்று இருண்டு கிடந்தது அந்த பள்ளிக்கூடம் 
 
அவன் முனகல் நின்று உயிர் பிரிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ஓட்டல்காரருக்கு தெரிய வந்தது.மொக்கையன் இறந்த செய்தி ஊர் முழுக்கப் பரவியது அவனது உடலை தகனம் செய்ய ஊர்க்காரர்களிடம் வசூல்வேட்டை நடத்தப்பட்டது வசூலான பணத்தில் புது வேட்டி சட்டை வாங்கி வந்து உடலுக்கு அணிவித்து உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது புதுவேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற ஆசை முதலில் அவனுக்குள் புதைந்துபோக அவனது உடல் பிறகு மண்ணில் புதைந்து போனது.என்றோ எடுத்த புகைப்படத்தின் ஓரத்தில் நின்றிறுந்த மொக்கையனை இனம் கண்டு அதை ஸ்கேன் செய்து சட்டை அணிந்திருப்பதுபோல் புகைப்படம் தயாரித்து மறுநாள் காலை நாளிதழில் அஞ்சலி என்ற பெயரில் சிரித்துக்கொண்டிருந்தான் மொக்கையன்
 
 உயிருடன் இருக்கும்போது மேல்சட்டை அணியாத அவன் புகைப்படத்தில் மேல்சட்டை அணிந்திருப்பதை அவன் ஆத்மா மன்னிக்குமா என்பது யாருக்கும் தெரியவில்லை
 

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...