Total Pageviews

Friday, November 25, 2011

கல்யாணம் - யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்


“டேய்! இது தப்புடா!” பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்?

எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?” ராம் சீறினான்.

“மாப்பிள்ளை என்ன சொல்றாரு?” தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.

“வந்து..” அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்

“நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!” கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

“இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்”

சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.

******************
ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.
“டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு” அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை

“அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?” இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.

“ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?” என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.

*********

“என்ன ராம், பொண்ணு எப்படி?”

பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.

“எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்..” என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.

பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.

“என்ன சொல்றா பொண்ணு?” இராம்குமாரின் தந்தை
“அது.. வந்து.. ” பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.

“சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா..”

இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

“என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?” அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.

“அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா..” என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...